தினமும் யோகா செய்வதால் உங்கள் ஆயுட்காலத்தை நீடிக்கலாம் …!!

June 20, 2022 at 11:27 am
pc

யோகா என்பது ஒரு பழங்கால உடற்பயிற்சி மற்றும் தியான நிலையாகும். இதை தினந்தோறும் செய்து வருவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கும் உள்ளத்திற்கும் வழங்குகிறது. மேலும், யோகா உடலையும் உள்ளத்தையும் தியானத்தின் மூலம் இணைக்கிறது. யோகாவின் உடல் மற்றும் மன நன்மைகளின் காரணமாக, பலரும் வாழ்நாளில் தொடர்ந்து இந்த யோகாவை செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து உடலும் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

யோகாவில் ஏராளமான வகைகள் உண்டு. அதுமட்டுமல்லாமல், இன்றைய பரபரப்பான காலக்கட்டத்தில் நல்ல தூக்கம் என்பது பலருக்கும் இருப்பதில்லை. ஆனால், யோகா செய்தால் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். பல எதிர்மறையான எண்ணங்களை தடுத்து நேர்மறையாக சிந்தித்து ஒரு மனிதனை வாழ்வில் வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும் திறமை யோகாவிற்கு உண்டு.

அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாப்படுகிறது. அதன்படி, சர்ச் அரௌண்ட் வெப் யோகா செய்வதால் கிடைக்கும் பயன்கள் குறித்து தெளிவாக கொடுத்துள்ளது. இதை படித்து நீங்களும் தினமும் யோகா பயிற்சியை செய்து பயனடையுங்கள்.

யோகாவின் அற்புதமான ஆரோக்கியமான நன்மைகள்:

1. தியானத்தின் மூலம் உடல் என்ன செய்கிறது என்பதில் ஆர்வத்துடன் கவனம் செலுத்தினால் மனத்திற்கு அமைதி கிடைக்கும்.

2. தொடர்ந்து யோகா பயிற்சி செய்வதன் மூலம் சீரான ஆற்றல் கிடைக்கும். ஒவ்வொரு யோகா அமர்வுக்குப் பிறகும், நீங்கள் யோகாவைச் சரியாகச் செய்யும்போது சோர்வாக இருப்பது போன்ற உணர்வே இருக்காது.

3. யோகா மக்களிடமிருந்து மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றைக் குறைக்கிறது.

4. யோகாவின் தன்மை, ஒருவரின் உடலை நல்ல நிலையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைக் காட்டுகிறது. முறையான மற்றும் நிலையான பயிற்சி மூலம், நீங்கள் உங்கள் உடல் தோரணையை மேம்படுத்தலாம், இது ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்புடனும் இருக்க உதவும்.

5. யோகாவை தொடர்ந்து செய்து வருவது மூலம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். ஒருநபர் தினமும் யோகா செய்யும்போது உடலில் கெட்ட கொழுப்புகள் எரிக்கப்படுகின்றன. இதனால், எடை குறைந்து, உடல் சிக்கென்றும் ஆரோக்கியத்துடனும் இருக்கும்.

6. தொடர்ந்து யோகா செய்து வருவதன் மூலம் நல்ல தூக்கம் கிடைப்பதாக பலர் கூறுகின்றனர். உடலையும் மனதையும் இணைப்பதன் மூலம் யோகா வழங்கும் நன்மைகளில் இதுவும் ஒன்றாகும். தூக்கமின்மை உள்ளவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். தூக்கத்தை தூண்டுவதற்கென பல போஸ்கள் இருக்கின்றன அவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்யலாம்.

7. யோகாவின் போது இயற்கையான ஆக்ஸிஜன் நிறைந்த காற்றை உடலுக்கு அளிக்கிறது. இதனால், உடல் அதிக ஆற்றலுடன் செயல்படும்.

8. இந்த பிஸியான வாழ்க்கையில் உடலையும் அமைதியையும் தரும் யோகா மிகவும் அவசியமான ஒன்று. யோகா மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மூளைக்கு இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் சிறந்த நினைவாற்றலை நமக்கு தருகிறது.

9. யோகா பயிற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் அமைதி மற்றும் சீரான இரத்த ஓட்டம், இளமைப்பருவத்தில் வயதான தோற்றத்தை குறைத்து, சருமத்திற்கு பளபளப்பை சேர்க்கிறது.

10. நுரையீரல் திறம்பட செயல்பட, சுவாச விகிதம் குறைவாக இருக்க வேண்டியது அவசியம். யோகா சுவாசப் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் சுவாச விகிதத்தை கட்டுப்படுத்துகிறது.

11. சமநிலையான வளர்சிதை மாற்றம் பசியைக் கட்டுப்படுத்தவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகிறது. யோகாசனம் அந்த சமநிலையான மாற்றத்தை அளிக்கிறது.

12. தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அளவை சமாளிக்க யோகா ஒரு சிறந்த வழியாகும். தேவையற்ற கொழுப்பை எரித்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

13. யோகாவின் முதல் மற்றும் முக்கிய நன்மைகளில் ஒன்று நெகிழ்வுத்தன்மை. ஆரம்ப நாட்களில் நீங்கள் எந்த ஒரு போஸையும் செய்ய சிரமப்படுவீர்கள் மற்றும் வலியையும் உணரலாம். ஆனால், அதற்கு பழகிவிட்டீர்கள் என்றால், வலிகள் மறைந்து உங்கள் உடலில் பல மாற்றங்களை உணருவீர்கள். அப்புறம் எந்த யோகா போஸ்களையும் எளிதில் செய்ய தயாராகிவிடுவீர்கள்.

14. குறைந்த பட்சம் 2 மாதங்கள் யோகா பயிற்சி செய்வது சிறந்த செறிவு மற்றும் ஊக்கத்தை கொண்டு வரும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

15. நீங்க நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டுமென்றால் யோகா செய்ய முயற்சி செய்யுங்கள். மன நிறைவனான வாழ்க்கை வாழ யோகாசனம் அவசியம்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website