திமுக அரசை கண்டித்து போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

May 29, 2022 at 11:58 am
pc

உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னை, உள்ளாட்சியில் நல்லாட்சி என்று மாய்மாலம் மற்றும் செப்படி வித்தை காட்டும் தி.மு.க. அரசு உள்ளாட்சிகளின் மாண்பை சீர்குலைக்கும் வகையிலும், உள்ளாட்சி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும் செயல்பட்டு வருவது வெட்கக்கேடானது. 

உள்ளாட்சி அமைப்புகளில் சட்டப்பூர்வமாக, நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வரும் அ.தி.மு.க. நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும் செயல்படவிடாமல் தனது ‘ஆக்டோபஸ்’ கரங்களால் நசுக்கும் வேலையை ஒருசில அதிகாரிகளின் துணையுடன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் எந்தெந்த அமைப்புகளில் அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்களோ, அங்கெல்லாம் அவர்களை நகர மன்ற தலைவர்களாகவும், துணை தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்க முடியாதபடி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இடையூறு செய்தார்கள். 

குறிப்பாக கோவை மாவட்டத்தில் வெள்ளலூர், சேலம் மாவட்டத்தில் வனவாசி போன்ற பல இடங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகத்தை முறியடிக்க ஐகோர்ட்டின் படிக்கட்டுகளில் ஏறி அ.தி.மு.க. ஜனநாயகத்தை நிலைநாட்டியது. அப்படி நிர்மாணிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளையும், சீர்குலைக்கும் முயற்சியில் தொடர்ந்து தி.மு.க. அரசு ஈடுபட்டு வருவது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் உள்ளாட்சியில் நல்லாட்சி தருகிறீர்களோ, இல்லையோ, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை செயல்படவிடாமல் தடுத்தால், அதற்கான விலையை விரைவில் தர நேரிடும் என்று ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன். 

மணப்பாறை நகராட்சி விவகாரத்தில் இனியும் அடாத செயல்களில் ஆளும் கட்சியினரும், அதிகாரிகளும் ஈடுபட்டால், அவர்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன். மேலும், உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும் இந்த அரசின் தாந்தோன்றித்தனமான போக்கை கண்டித்தும், மக்கள் பணியாற்றும் அதிமுக நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், மக்கள் ஆதரவோடு ஜனநாயக முறையில் அ.தி.மு.க.வின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website