தொடரும் தற்கொலைகள்: நடவடிக்கை எடுக்காதது ஏன்? – கொந்தளித்த சீமான்!

August 10, 2022 at 11:08 am
pc

தமிழகத்தில் ஒன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இளைஞர்கள் உயிரை இழக்கும் நிலையில், ஆளும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இளைஞர்கள் ஒன்லைன் ரம்மி போன்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதில் பணத்தை இழப்பதால் உயிரை இழப்பது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்தில் நாமக்கல்லை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், வெளிநாட்டு வேலைக்கு செல்ல வைத்திருந்த பணத்தை ஒன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், இளைஞர்கள் தொடர்ச்சியாக உயிரை இழக்கும்போது இணையவழி சூதாட்டத்தை முற்றாக தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்னும் தயங்குவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தைச் சேர்ந்த இளைஞர் சுரேஷ் இணையவழி சூதாட்டத்திற்கு அடிமையாகி, இலட்சக்கணக்கில் பணத்தை இழந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

தற்கொலைக்கு முன் தம்பி எழுதிய உருக்கமான கடிதம் நெஞ்சை உலுக்கிவிட்டது. தொடர்ந்து உயிர்பலிகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும் இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்யாமல் காலங்கடத்தி வரும் திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது’ என தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் நலத்தில் சிறிதேனும் அக்கறை இருக்குமாயின், இளைஞர்களை உயிர்பலி எடுக்கும் இணையவழி சூதாட்ட விளையாட்டுகளை முற்றாகத் தடைசெய்ய உடனடியாக வலுவான சட்டம் இயற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website