நடிகர்களின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி பெண்களிடம் மோசடி – அண்ணன், தம்பி கைது!

February 6, 2023 at 4:18 pm
pc

சமூக வலைத்தளங்களில் நடிகர்களின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி பெண்களிடம் மோசடியில் ஈடுபட்ட அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சாபுதீன். இவரது மகன்கள் அலாவுதீன் (27), வாகித் (25). இவர்கள் இருவரும் கூட்டாக தமிழ்சினிமா நடிகர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்தி முகநூலில் அவரது பெயரிலேயே போலி கணக்கை உருவாக்கி உள்ளனர். 

அதன்மூலம் காஞ்சீபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு நட்புக்காக அழைப்பு அனுப்பி அதை அவர் ஏற்றவுடன், அவருடன் நன்றாக பேசி பழகி அந்த பெண்ணின் வாட்ஸ்அப் எண்ணை பெற்று வாட்ஸ்அப் மூலமாக தகவல்களை பரிமாறியுள்ளனர். 

மேலும், வீடியோகாலில் பேசி அந்த பெண்ணின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பெண்ணிடம் பணம்கேட்டு மிரட்டியுள்ளனர். 

அந்த பெண் பணம் தர மறுக்கவே அந்த பெண்ணின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பகிரப்போவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்சசி அடைந்த அந்த பெண் ரூ.2 லட்சத்தை ஜிபே மூலமாக அனுப்பி உள்ளார். 

கைது

தொடர்ந்து மேலும் பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் ஆன்லைன் மூலமாக காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம். சுதாகர் உத்தரவிட்டார்.

சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான அலாவுதீன் (27), வாகித் (25) ஆகியோர் கூட்டாக இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் ஈரோடு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் மடிக்கணினியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

போலீசார் எச்சரிக்கை

நடிகர்களின் புகைப்படங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அவர்களது பெயரிலேயே போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளனர். 

அதன்மூலம் போலியான நட்பை ஏற்படுத்தி தங்களது வலையில் சிக்கவைத்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பெண்களின் நட்பு வட்டாரங்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சமூக வலைதளத்திலும் பகிர்வதாக மிரட்டி பணத்தை பெற்றுள்ளனர். 

பெண்கள் மற்றும் மாணவிகள் சமூகவலைதள பக்கங்களிள் பிரபலங்களின் பெயர்களிலோ மற்றும் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்தோ வரும் அழைப்புகளையோ, நட்பு அழைப்புகளையோ ஏற்கவேண்டாம். சமூகவலைதளங்களை பயன்படுத்தும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவும் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website