நிதியமைச்சர் நிர்மலாவுக்கு குவியும் பாராட்டு.. காரணம் என்ன தெரியுமா?

February 10, 2023 at 9:20 am
pc

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மெய்நிகர் வாயிலாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்மாத இறுதியில் பெங்களூருவில் நடைபெறும் ஜி20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (எஃப்எம்சிபிஜே) கூட்டத்தில் கடன் தொடர்பான விவாதம் முதன்மையாக இருக்கும் என்று கூறினார். இந்தச் சந்திப்பின் போது, பொதுக் கட்டமைப்பை ஒழுங்கான மற்றும் சரியான நேரத்தில் செயல்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வங்கிகளின் கடன் பிரச்சினையை சரிசெய்வதோடு, கிரிப்டோ சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதில் உலகளவில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்குவதில் IMF மற்றும் பிற சர்வதேச அமைப்புகளின் பங்கு குறித்தும் நிர்மலா சீதாராமனும் ஜார்ஜீவாவும் விவாதித்தனர். மிகவும் சவால் நிறைந்த உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் வலுவான பொருளாதார செயல் திறனுக்காகவும், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் முன்னணியில் உள்ள அதன் பங்கிற்காகவும் பாராட்டு தெரிவித்தார் குறிப்பாக டிஜிட்டல் பணம் செலுத்தும் துறையில் இந்தியா சிறந்து செயல்பட்டு வருவதற்கு நிர்மலா சீதாராமனை அவர் பாராட்டிப் பேசினார்.

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்மலா மற்றும் ஜார்ஜீவா இரங்கல் தெரிவித்தனர். ‘தோஸ்த்’ நடவடிக்கையின் கீழ் NDRF மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்புவதன் மூலம் இயற்கைப் பேரிடருக்கு இந்தியாவின் உடனடி ஆதரவை நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். IMF மற்றும் இந்தியா இடையேயான கூட்டாண்மையான தெற்காசிய பிராந்திய பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவி மையத்திற்கு (SARTTAC) இந்தியா 50 மில்லியன் டாலர் பங்களிப்பு வழங்கியதற்கும் ஜார்ஜீவா பாராட்டினார். தெற்காசிய பிராந்தியத்தில் திறன் மேம்பாட்டில் இந்தியா மற்றும் ஐஎம்எப் ஆகியவற்றின் பங்கை இது மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

அமைதியான, நிலையான மற்றும் வளமான உலகத்திற்காக பலதரப்பு மற்றும் உலகளாவிய நிர்வாகத்தை வலுப்படுத்த ஜி20 விஷயத்தில் இந்தியா தனது தலைமைப் பண்பைத் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுத்தும் என்று நிர்மலா சீதாராமன் ஜார்ஜீவாவிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தியாவில், 2023-24 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. சாமானிய மக்களுக்கான அறிவிப்புகளும் இருந்தன. சில தரப்பினரிடையே இந்த பட்ஜெட் விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் பெரும்பாலானோர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைப் பாராட்டினர். தேர்தலுக்கு முன் மத்திய மோடி அரசின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இந்த பட்ஜெட்டில் நிறைய அறிவிப்புகள் இருந்ததாக ஒரு தரப்பினர் கூறினர். இந்நிலையில் தற்போது சர்வதேச நாணய நிதியத் தலைவரிடம் நிர்மலா சீதாராமன் பாராட்டு பெற்றுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website