பாத மசாஜ் புத்துணர்ச்சியைத் தருவதோடு பல நோய்களுக்கு தீர்வும் தருகிறதா …?ஆச்சரியப்படுத்தும் தகவல்கள் …!!

நம் உடலில் இருக்கும் பாகங்களில் பாதங்கள் மிக முக்கியமான பகுதியாகும். உடலின் மொத்த எடையையும் தாங்குவது இந்த பாதங்கள் தான். இந்த பாதங்களை சரியான முறையில் மசாஜ் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது.
அதிலும் இது போன்ற மசாஜ்ஜால் நரம்புகள் தூண்டப்படும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்கள் பாதங்களை கவனிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
மேலும் இதற்கு ஆயுர்வேத மசாஜ் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. பாதங்களுக்கு சரியான புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யும் போது இதயம், நுரையீரல் போன்றவை பலப்படும். கழுத்து வலி, தலைவலி, உடல் சோர்வு போன்றவற்றில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
நாம் இரவில் தூங்கச் செல்லும் முன்பு வெது வெதுப்பான நீரில் நம் பாதங்களை கழுவி விட்டு சிறிது வெது வெதுப்பான பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி நம் கால்களை மெதுவாக மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இரவில் நன்றாக தூக்கம் வரும்.
மேலும் நம் உடலில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரித்து நரம்புகளின் செயல்பாடுகளை தூண்டும். அதிலும் குறிப்பாக பாதத்தின் நுனிப் பகுதியில் மசாஜ் செய்யும் போது நம் உடல் மிகவும் புத்துணர்ச்சியை உணரும். பதற்றம், மன அழுத்தம் போன்றவையும் குறையும்.
அது மட்டுமில்லாமல் சில பெண்கள் மாதவிடாய் நாட்களில் பல்வேறு அசௌகரியங்களை உணர்வார்கள். அப்போது அவர்களுக்கு ஒரு வித மன அழுத்தம் ஏற்பட்டு எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு, எரிச்சலாக கத்துவார்கள்.
இந்த சமயத்தில் அவர்களின் பாதத்தில் கட்டை விரலை அழுத்தி மசாஜ் செய்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். கோபம் குறைந்து ஒரு அமைதியான மனநிலை ஏற்படும்.
மேலும் கர்ப்ப காலத்தில் இருக்கும் பெண்களுக்கு கால் வலி, வீக்கம் போன்றவை அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் அவர்கள் இது போன்று மெதுவாக பாதங்களை மசாஜ் செய்யும் போது அவர்களுக்கான அசௌகரியங்கள் குறையும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு இதனால் தசை பலவீனம், உற்சாகமின்மை, சோம்பல் போன்றவை ஏற்படும். அந்த சமயத்தில் அவர்கள் இது போன்ற பாத மசாஜ் செய்வதன் மூலம் ஒரு உற்சாகத்துடன் இருப்பதை காணமுடியும்.
மேலும் வேலைக்கு செல்லும் ஆண், பெண் பலரும் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி போன்ற வலியால் அவதிப்படுவார்கள். அவர்களுக்கும் இந்த பாத மசாஜ் சிறந்த நிவாரணம் கொடுக்கும்.
அவர்கள் தங்கள் கால் விரல்களின் மேல் பகுதியிலும், உள்பகுதியிலும் சிறிது அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்து வரும்போது மேற்கண்ட அனைத்து வலிகளும் நீங்கி ஒரு புது உற்சாகம் பிறக்கும்.
ஏனென்றால் கால்களில் எண்ணற்ற நரம்பு முடிச்சுகள் உள்ளன அவை முதுகு தண்டு வடத்துடன் தொடர்புடையவை. அதனால் பாதங்களை வட்ட இயக்கத்தில் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முதுகு தண்டுவடத்தில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இது ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்ற பெண்களுக்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். ஏனென்றால் இது போன்ற அறுவை சிகிச்சையின் போது முதுகில் போடப்படும் ஊசியின் விளைவால் பெண்கள் பல வலிகளை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்கு இந்த பாத மசாஜ் நன்றாக கைகொடுக்கும்.