பாஸ்தாவை இப்படி செய்து கொடுங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க ….!!

July 27, 2022 at 12:39 pm
pc

மசாலா பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும் சாப்பிடும் இட்லி அல்லது தோசை  போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம்.  பொதுவாக  பாஸ்தா  சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது மேலை நாடுகளில் செய்யப்படும் முறை, இதனை நமது சுவைக்கு ஏற்றவாறு மசாலா பொருட்களை சேர்த்து மசாலா பாஸ்தா செய்யலாம்.  சுவையான மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.

தேவையான பொருட்கள்:


பாஸ்தா – 2 கப்,
சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன்,
குடைமிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 2,
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 3,
கொத்தமல்லி – சிறிதளவு,
தக்காளி – 2,
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன்,
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்,
உப்பு – 1 ஸ்பூன்,
டொமேட்டோ சாஸ் – 1 ஸ்பூன்,
எலுமிச்சை பழ சாறு – 1 ஸ்பூன்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்,  அதனுடன் அரை ஸ்பூன் உப்பு  மற்றும் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் 2கப்  பாஸ்தா சேர்த்துக் கொள்ளவும். பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அல்லது மென்மையாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். வெந்த பின்னர் தனியே எடுத்து வைக்கவும்.

ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் குடைமிளகாய் சேர்த்து பொன்நிறம் ஆகும் வரை வறுத்துக்கொள்ளவும். பின்னர் அதனை தனியே எடுத்து வைக்கவும் .அதே எண்ணெயில் இரண்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும்.

அதனுடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும். பச்சை மிளகாய் மற்றும் சிறிதளவு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும். பின்னர் இரண்டு தக்காளி பழங்களை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி கொள்ளவும். அதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா, மற்றும் அரை ஸ்பூன் மல்லித்தூள், தேவையான உப்பு சேர்த்து கலக்கவும்.

மிளகாய்தூளின் பச்சை வாசனை போன பிறகு ஒரு ஸ்பூன் டொமேட்டோ சாஸ் சேர்த்து கலக்கவும். அதனுடன்  வேக வைத்து வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கலக்கவும். நன்கு கலந்த பின்னர் தயார் செய்து வைத்துள்ள குடைமிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கிளறவும். சுவையான மசாலா பாஸ்தா தயாராகி விடும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website