பிரசவித்த உடனேயே பிறந்த பச்சிளம் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற தாய்!!

பிரசவித்த உடனேயே தாய், பிறந்த பச்சிளம் குழந்தையை பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி அடுத்த தொடுபுழா கரிமண்ணூரில் இச்சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த பக்கெட் தண்ணீரில் குழந்தையை மூழ்கடித்து தாய் கொன்றுள்ளார்.
அதிக இரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, அந்த பெண் மற்றும் அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை 1 மணியளவில் அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெண்ணும் அவரது கணவரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
மருத்துவமனையை அடைந்த பிறகு, சில மணி நேரங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்ததையும், அதன் காரணமாக இரத்தப்போக்கு ஏற்பட்டதையும் மருத்துவர் கண்டறிந்தார்.
மருத்துவமனை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பெண் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவர்கள், பெண்ணிடமும் அவரது கணவரிடமும் போலீசாருக்கு தெரிவிப்பதாக கூறியதையடுத்து குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் சடலம் வீட்டில் இருப்பதாகவும் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் வந்து பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் குழந்தை கொல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால் குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்பது தெரியவில்லை. பெண் கர்ப்பமாக இருப்பது கணவருக்கு தெரியாது என போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் இதை முழுமையாக நம்பவில்லை.
மேலும், தான் கர்ப்பமாக இருந்ததை அந்த பெண் மறைத்து விட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சந்தேகத்தின் பேரில் அப்பகுதி தூய்மை பணியாளர்கள் வீட்டுக்கு கடந்த நாள் வந்தபோது, தான் கர்ப்பமாக இல்லை என்றும், உடல் எடை அதிகரிக்க மருந்து உட்கொண்டதால் உடலில் மாற்றம் ஏற்பட்டதாகவும் கூறி ஏமாற்றியுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தொடுபுழா டி.எஸ்.பி., தலைமையிலான குழுவினர், வீட்டில் சோதனை நடத்தி தீவிரமாக விசாரிக்கின்றனர்.