பிரதமர் செல்ல ஸ்பெஷல் சுரங்கப் பாதை!!பிரதமர் இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு செல்ல 3 கிலோமீட்டர் ..

September 7, 2022 at 1:34 pm
pc

தலைநகர் டெல்லியில் ”எண் 7, லோக் கல்யாண் மார்க்” என்ற இடத்தில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ளது. இது 50களில் கட்டப்பட்ட பழைய கட்டிடம் ஆகும். இதன் உறுதித்தன்மை மீது பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதனை புதுப்பிக்க வேண்டும் என்றும், புதிதாக ஒரு பிரதமர் வீடு மற்றும் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்றும் 2008 காலகட்டத்திலேயே கோரிக்கை எழுந்தது.

அப்போது பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவரது உத்தரவின் பேரில் பிரதமர் இல்லத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. மிகவும் பலமான நிலநடுக்கம் வந்தால் அவ்வளவு தான் என்றெல்லாம் எச்சரிக்கப்பட்டது. இந்த விஷயம் பின்னர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு ”சென்ட்ரல் விஸ்டா” திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் புதிய நாடாளுமன்ற கட்டடம், குடியரசு தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான 3 கிலோமீட்டர் தூரப் பாதை புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதில் புதிதாக பிரதமர் இல்லம் கட்டும் விஷயமும் சேர்க்கப்பட்டது. அதன்படி, சவுத் பிளாக் பகுதியில் குடியரசு தலைவர் இல்லத்திற்கு அருகே புதிய இல்லம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மொத்தம் 2,26,203 சதுர அடியில் 467 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டது. இதில் பிரதமர் இல்லம் மட்டும் 36,328 சதுர அடியில் அமையவுள்ளது. தரை தளம், முதல் தளம் ஆகியவை வரவுள்ளன. எஞ்சிய பகுதியில் பிரதமர் முகாம் அலுவலகம், உள்விளையாட்டு அரங்க வசதிகள், உதவியாளர்கள் தங்கும் விடுதிகள், சிறப்பு பாதுகாப்பு படை அலுவலகம், சேவை மையம் உள்ளிட்டவை இடம்பெறவுள்ளன.

வழக்கமாக பிரதமர் தனது இல்லத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்றால் போக்குவரத்து நிறுத்தப்படும். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும். இதனைத் தவிர்க்கும் வகையில் புதிதாக கட்டப்படும் பிரதமர் இல்லத்தில் சிறப்பு வசதிகள் செய்யப்படவுள்ளன. அதாவது, பிரதமர் இல்லத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து சிறப்பு சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது

இது நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், துணை குடியரசுத் தலைவர் இல்லம் ஆகியவற்றுக்கு நேரடியாக செல்லும் வகையில் உருவாக்கப்படும். இந்த சுரங்க பாதையில் சிறப்பு வாகனங்கள் ஏதும் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பிரதமர் இல்லத்தில் இருந்து அவரது அலுவலகத்திற்கு செல்ல 3 கிலோமீட்டர் தூரமுள்ளது. இந்த கட்டுமானங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு பிரதமரின் பயணம் மிகவும் எளிதாகி விடும் என்கின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website