பிரபல தமிழ் தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத நகைகள்!

தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், பிரபல தொழிலதிபருமான அபிராமி ராமநாதனை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரிப்பதற்காக அழைத்துச் சென்றுள்ளனர். தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட பல்வேறு நபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். அந்த சோதனை இன்றும் நடைபெற்று வருகிறது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வீடு, அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு தனியார் நிறுவனங்களிலும் சோதனை நடைபெற்றது.
அந்த வகையில், நேற்று பிரபல தொழிலதிபர் அபிராமி ராமநாதனின் அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும், அவருடைய வீடு மற்றும் தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், அவருடைய மேலாளர் மோகன் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அபிராமி ராமநாதனின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத நகைகள் கைப்பற்றப்பட்டன. அவை குறித்து கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தொழிலதிபர் அபிராமி ராமநாதனை விசாரணை செய்வதற்காக வருமானவரித்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இவர், வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளாரா என்பது விசாரணையின் முடிவின் போதே தெரியும்.