பெண்கள் தங்கள் உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஐந்து மசாலா பொருள்கள் பற்றி தெரியுமா ..!!

November 25, 2022 at 7:28 am
pc

தற்போதைய பெண்கள் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து ஹார்மோன் பிரச்சனை வரை ஒவ்வொரு நாளும் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களின் உணவுப் பழக்கம் தான் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் . தற்போதைய அவசர உலகத்தில் பெண்கள் தங்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதே இல்லை. இப்பொழுதுள்ள பெண்கள் அனைவரும் வேலைக்கு போவதால் ஆபிஸ்க்கு போகும் அவசரத்தில் வயிற்றை நிரப்பினால் போதும் என்று பாஸ்ட் புட் உணவுகளையும் ஆரோக்கியமற்ற துரித உணவுகளையும் எடுத்துக் கொண்டு செல்கிறார்கள். இதன் விளைவு இரும்புச் சத்து குறைபாடு, முடி உதிர்தல் பிரச்சனை, சரும பிரச்சினை, ஹார்மோன் மாற்றங்களால் மாதவிடாய் பிரச்சனை என்று பெண்களின் பிரச்சனைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

பாரம்பரிய உணவு முறை


நம் முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால சமையல் முறைகளை நாம் மறந்து விட்டோம். அந்த காலத்தில் நம்முடைய பாட்டிமார்கள் ஒரு குழம்பு வைக்க வேண்டும் என்றால் மஞ்சள், கொத்தமல்லி தூள் பருப்பு வகைகள் என்று உடலுக்கு அத்தியாவசியமான சத்துக்களை வழங்கும் உணவுகளையும் மசாலா பொருட்களையும் சேர்த்து வந்தார்கள். ஆனால் தற்போது எல்லாம் பாக்கெட் மயம் ஆகி விட்டது. அதனால் தான் தற்போது பெண்களுக்கு முடி உதிர்தல் பிரச்சனை, சரும பிரச்சினை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் வருகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர். எனவே பெண்கள் தாங்கள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க நினைத்தால் இந்த 5 உணவுப் பொருட்களை கட்டாயம் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

மஞ்சள்

மசாலா பொருட்களில் நோயெதிப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருள் என்றால் அது மஞ்சள் ஆகும். அந்தக்காலத்தில் பெண்கள் தங்கள் மேனியை பொலிவாக்க சரும பிரச்சனைகளிலிருந்து காத்துக் கொள்ள மஞ்சள் தேய்த்து குளிப்பதுண்டு. மஞ்சளில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால் தான் மஞ்சளை பாரம்பரிய பராம்பரியமாக உணவுகளில் நாம் பயன்படுத்தி வருகிறோம். மஞ்சளில் காணப்படும் இயற்கையான எண்ணெய்கள் நம் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் மஞ்சளில் காணப்படும் குர்குமின் என்ற பொருள் மூளையில் புதிய நியூரான்களை உருவாக்கி சிறந்த நினைவகம், கவனம் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்துகிறது. மூளையை பாதிக்கும் செயலுக்கு எதிராக போரிடுகிறது. எனவே உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் மஞ்சளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மஞ்சள் பால் எடுத்துக் கொள்ளலாம்


சிறுதளவு மஞ்சளை சூடான பாலில் கலந்து தினமும் இரவு பெண்கள் படுப்பதற்கு முன்பு குடித்து வரலாம். இது உங்களுக்கு செரிமானம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

கொத்தமல்லி தூள்

பொதுவாக கொத்தமல்லி தூளை தனியா தூள் என்றும் கூறுவார்கள். இதுவும் நம் பாரம்பரிய சமையலில் உள்ள மிக முக்கியமான மசாலா பொருளாகும். கொத்தமல்லி விதைகள் இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. மேலும் இது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது.


குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் முடி உதிர்வு மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை களைய கொத்தமல்லி சிறந்த ஒன்றாக இருக்கும். ஏனெனில் இதில் எண்டோகிரைன் சுரப்பிகளை இயற்கையாக தூண்டும் பொருட்கள் உள்ளன. இந்த எண்டோகிரைன் சுரப்பி தான் நம் உடலில் உள்ள ஹார்மோன்களை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதனால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிகள் மற்றும் கோளாறுகள் நீங்கும்.
எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்


ஒவ்வொரு நாளும் சிறுதளவு கொத்தமல்லி தூளை உணவில் சேர்த்து வரலாம். இது உங்க மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

கொண்டைக்கடலை மாவு

கொண்டைக்கடலையில் இரும்புச் சத்து அதிகளவில் உள்ளது. எனவே மாதவிடாய் இரத்த போக்கால் இரும்புச் சத்து குறைபாடு இருப்பவர்கள் கொண்டைக்கடலையை உணவில் சேர்த்து வரலாம். மேலும் இதில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. மேலும் இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடம்பில ஏற்படும் சோர்வை தடுக்கின்றன. விட்டமின் பி, தயமின் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் பெண்கள் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க கொண்டைக்கடலை மாவை சேர்த்து வரலாம்.


எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்


வாரத்திற்கு 2 அல்லது 3 தடவை எடுத்து வாருங்கள்.

பெண்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை அயோடின் குறைபாடு. இதனால் ஏராளமான பெண்கள் தைராய்டு பிரச்சினையை சந்திக்கின்றனர். இதனால் இளம் வயதிலேயே உடல் பருமன் போன்ற பிரச்சினைகளுக்கு உள்ளாகி விடுகின்றனர். எனவே உங்களுக்கு இருக்கும் அயோடின் குறைப்பாட்டை போக்க கடற்பாசி, பால், டூனா, இறால் மற்றும் முட்டை போன்ற அயோடின் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.


நீங்கள் அயோடின் குறைப்பாட்டை கண்டுகொள்ளாமல் விடும் போது தைராய்டு பிரச்சினை ஏற்பட்டு மனநல குறைபாடு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு சோர்வு, பலவீனம், முடி உதிர்தல், வறண்ட மெல்லிய தோல், குளிர்ந்த உணர்வு, ஞாபகம் வைப்பதில் சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இதை போக்க நீங்கள் உணவில் அயோடைடு உப்பை சேர்த்து வரலாம்.


எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்


ஒரு நாளைக்கு 5 கிராம் அயோடைடு உப்பு போதுமானது இதை உணவில் சேர்த்து வாருங்கள். தைராய்டு பிரச்சினை வராது.

பருப்பு வகைகள்

உடல் ஆரோக்கித்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், புரதம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்துகள் இவை மூன்றும் தரக்கூடியவை பருப்பு வகைகள். எனவே தான் சைவ பிரியர்கள் உணவில் அதிகமாக பருப்பில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதில் புரதம் அதிகமாக இருப்பதால் வளரும் பெண் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மேலும் இதில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் பிறப்பு குறைபாட்டை தடுக்க உதவி செய்கிறது.

எவ்வளவு எடுத்துக் கொள்ளலாம்

ஒவ்வொரு நாளும் 2 வேளை எடுத்துக் கொள்ளலாம். இது பெண்களுக்கு பெரிதும் உதவுகிறது.
மேற்கண்ட இந்த 5 உணவுப் பொருட்களை பெண்கள் கட்டாயம் தங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்ப்பது நல்லது. இது அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் கொடுத்து பெண்களின் உடல் உபாதைகளை ஓரங்கட்டுகிறது என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website