பென்சில் முனையில் தத்ரூபமாக செதுக்கப்பட்ட ராஜராஜ சோழன் உருவம்!தமிழனுக்கு குவியும் பாராட்டு …

October 17, 2022 at 2:09 pm
pc

தஞ்சை அருளானந்தம் நகரை சேர்ந்தவர் சவித்ரு (வயது 30) . பி.டெக்கில் ஆடை வடிவமைப்பாளர் பட்டப்படிப்பு படித்துள்ளார். சிறு வயது முதலே சிற்பக்கலை மீது ஆர்வம் உடையவர். படிக்கும் காலத்திலேயே நேரம் கிடைக்கும் போதெல்லாம் சோப்பு, பென்சில், களிமண் உள்ளிட்ட பொருட்களில் சிற்பம் வடிவமைத்து வந்தார். 

எழுதுவதற்கு பயன்படுத்தும் பென்சிலில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செய்துள்ளார். சுதந்திர போராட்ட வீரர்கள், பறவைகள், விலங்குகள், நடனம், இயற்கை காட்சிகளையும் சிறிய பென்சில் மூலம் வடிவமைத்து உள்ளார். இந்த நிலையில் இவர் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவல் படித்தார். 

அதில் ராஜராஜசோழன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு பொக்கிஷ தகவல்களை தெரிந்து கொண்டார். செவி வழி செய்தியாக மட்டுமே ராஜராஜ சோழன் வரலாறு அறிந்திருந்த சவித்ரு பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு ராஜராஜ சோழன் பெரிய கோவில் கட்டிய விதம், அவரது ஆட்சியின் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்களை தெரிந்து கொண்டார்.

இதன் தாக்கத்தால் பென்சில் முனையில் ராஜராஜ சோழனாகிய பொன்னியின் செல்வன் உருவத்தை செதுக்க ஆரம்பித்தார். 21 நாட்கள் அங்குலம் அங்குலமாக ரசித்து படத்துக்கு உயிரோட்டமான உருவம் கொடுத்தார். முடிவில் தத்ரூபமாக ராஜராஜசோழன் உருவத்தை பென்சில் முனையில் கொண்டு வந்தார். 

இதனை அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள், சமூக அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பென்சில் முனையில் வரையப்பட்ட மாமன்னர் உருவத்தை பார்த்து ரசித்தனர். சவித்ருவை பாராட்டி அவரை மேலும் ஊக்கப்படுத்தினர். இதுகுறித்து சவித்ரு கூறும்போது:- நான் பி.டெக் படித்தாலும் எனக்கு சிற்பக்கலை மீது அதிக அளவில் நாட்டமிருந்தது. 

இதன் காரணமாக சிறுவயதில் இருந்தே சோப்பு, பென்சில் உள்ளிட்ட பொருட்களில் சிற்பங்களை செதுக்கி வந்தேன். பொன்னியின் செல்வன் நாவல் படித்த பிறகு அதன் தாக்கத்தால் பென்சில் முனையில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் செதுக்கினேன். 

இந்த பொக்கிஷ சிற்பத்தை விற்க எனக்கு மனமில்லை. இதனை காட்சிப்படுத்தி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்பதே எனது விருப்பம். எந்த ஒரு பயிற்சியும் இல்லாமல் சொந்த ஆர்வத்தில் சிற்பக்கலை செய்து வருகிறேன் என்றார்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website