பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய அமைச்சர் துறை முருகனின் பேச்சு.. குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000-கேலிப்பேச்சு

September 29, 2022 at 6:24 pm
pc

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது குறித்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சு பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி பல்வேறு புதிய திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. மு.க.ஸ்டாலினின் ஆட்சி மக்களோடு மக்களாக இருந்து தொண்டு செய்யும் ஆட்சி. அதன்படி நாங்கள் செய்து வருகிறோம். 

கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டு வருகிறோம். விரைவில் திட்டத்தினை துவங்கி வழங்குவோம் என்று கூறினார். 

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அறிவித்து இருந்தது. பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாணவிகளுக்கு உதவித்தொகை, பெட்ரோல் விலை குறைப்பு போன்றவை நிறைவேற்றப்பட்டது. 

இதில், வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படாமல் உள்ளது. கொரோனா தொற்று பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இதுவரை தொடங்கப்படவில்லை. 

இந்த நிலையில், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றிக் கொண்டு வருகிறோம், விரைவில் வழங்குவோம் என அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

மேலும், சமீபத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பெண்கள் இலவச பேருந்து பயணத்திட்டத்தை பற்றி ‘ஓசி பயணம்’ என குறிப்பிட்டு பேசியது கடும் கண்டனத்திற்கு வழிவகுத்தது. 

இதே போல், தற்போது அமைச்சர் துரைமுருகன், குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதற்காக சில்லரை மாற்றி வருகிறோம் என நக்கல் தொணியில் பேசியிருப்பது மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website