பைக்கில் சிக்கிய சிறுவனை 20 அடி தூரம் இழுத்துச் சென்ற போதை வாலிபர்!

May 2, 2023 at 10:11 am
pc

தேனி மாவட்டம் போடி டி.வி.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா. இவர்களது மகன் அபியுல்லா (வயது 6). இன்று காலை அதே பகுதியில் உள்ள சாலையில் விளையாடிக் கொண்டு இருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவனின் சட்டை பைக்கில் இருந்த கம்பியில் சிக்கிக் கொண்டது. இதனால் சிறுவன் கூச்சலிட்டு கத்தினான். 

இருந்தபோதும் அவனை விடுவிக்க மனமில்லாமல் தரதரவென பைக்கில் வந்த வாலிபர் பைக்கை நிறுத்தாமல் இழுத்துச் சென்றுள்ளார். 

அதன் பின்னர் சிறுவன் அடிபட்டதை பொதுமக்கள் பார்த்தால் தன்னை அடித்து விடுவார்கள் என்று பயந்த அந்த வாலிபர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்கை நிறுத்தி சிறுவனைப் பார்த்தார்.

அப்போது சிறுவனுக்கு முகம், கை, கால், வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது கூட இரக்கம் இல்லாமல் சிறுவனை காப்பாற்ற அந்த வாலிபர் நினைக்கவில்லை.

யாரும் பார்த்து விடக்கூடாது என்பதற்காக முட்புதர் அருகே இருந்த குப்பையில் சிறுவனை தூக்கி வீசி விட்டு சென்று விட்டார். அதன் பிறகு புதருக்குள் இருந்து முனகல் சத்தம் கேட்கவே அப்பகுதி பொதுமக்கள் பதறியடித்தவாறு அபியுல்லாவை வெளியே கொண்டு வந்தனர். 

அதன் பிறகு அவனது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சிறுவனை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன் பிறகு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையில் போதை வாலிபர் அதிவேகத்தில் சென்ற போது இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகித்துள்ளனர். 

மது மற்றும் கஞ்சா விற்பனை 24 மணி நேரமும் நடக்கிறது. இதனை பயன்படுத்தும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் செல்வதால் சாலையில் விளையாடிக் கொண்டு இருக்கும் சிறுவர்கள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். மேலும் முதியவர்களும் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர். 

எனவே போதைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதுடன் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website