மறதி ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன தெரியுமா …??

July 26, 2022 at 12:04 pm
pc

திரும்பத்திரும்ப எண்ணிப்பார்க்காத எதுவும் மறந்துபோகும். அண்மையில் ஏற்படும் பதிவுகள் முன்பே ஏற்பட்டிருந்த பதிவுகளை பாதிக்கலாம். இதையே நாம் மறதி என்கிறோம். நினைவில் வைக்க வேண்டும் என்ற முயற்சியின்மை, உடல்சோர்வு, நோய், பயம், வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத அதிர்ச்சி, விபத்து ஆகிய காரணங்களாலும் மறதி ஏற்படலாம். பொதுவாக உடல் உள்ளம் ஆகிய இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ பாதிக்கப்படும்போது நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

திரும்பத்திரும்ப துடைத்து வைக்காவிடில் மோட்டார் சைக்கிள் அல்லது மிதிவண்டி துருபிடித்துப் போகிறது. அப்படித்தான் திரும்பத்திரும்ப துலக்கி வைக்காவிடில் நினைவும் மறந்துபோகும். அடிக்கடி நினைவில் கொண்டுவருகிற எதுவும் மறப்பதில்லை. “அ, ஆ, இ, ஈ” என்றோ படித்தது. “ஒன்றும் ஒன்றும் இரண்டு” என்னும் வாய்ப்பாடு என்றும் மறப்பதில்லை. காரணம் நாம் அடிக்கடி அதை நினைவில் கொண்டுவந்து பயன்படுத்துகிறோம்.

நினைவு என்பது மனத்தில் நிலைத்த பதிவு என்றால் மறதி என்பது அந்தப்பதிவு அடியோடு மறைந்து விடுவதாகாது. ஒன்றைத் தற்காலமாக நினைவில் கொள்ள முடியாத நிலையே ஆகும். கற்றறிந்த அனைத்தும் பதிவுகளாக உள்ளன. திடீர் அதிர்ச்சியில், விபத்தில், நோயில் நினைவுகளை முற்றிலும் மறந்துபோன ஒருவர் உரிய சிகிச்சையினாலோ மீண்டும் ஏற்படும் அதிர்ச்சிகளாலோ மறந்துபோனதை திரும்பவும் பெறுவதைக் காண்கிறோம்.

நன்கு படித்துவிட்டு தேர்வெழுதப் போனவர் தேர்வு நடைபெறும் அறைக்குள் சென்றதும் வியர்த்து நடுங்கி பயத்தின் காரணமாக படித்ததையெல்லாம் மறந்துவிட்டு நன்கு தேர்வு எழுதாமல் வெளியே வந்து நண்பர்களிடம் இப்போது எல்லாம் நினைவுக்கு வருகிறதே என்று சொல்வதையும் காண்கிறோம்.

எனவே படித்த, அறிந்த எதுவும் மறந்து போவது என்றால் முற்றிலும் அழிந்து போவதில்லை. ஒருமுறை நினைவில் பதிந்துவிட்டால் அதன் வடுக்கள் எப்போதும் இருக்கும். ஒரு கண்ணாடிக் கோப்பையில் உள்ள தண்ணீரில் சாக்கட்டியைத் தூள் செய்துபோட்டால் சிறிது நேரத்தில் அது தண்ணீரில் கரைந்துவிடும். பிறகு சாக்குத்தூள் உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனாலும் அதன் தாக்கத்தை தண்ணீரில் காணலாம். அதன் துகள்கள் கோப்பையின் அடியில் படிந்திருக்கும். அதேபோல் நினைவுகளும் மனத்தின் ஆழத்தில் இருக்கும். முயற்சியும், பயிற்சியும் இருந்தால் அறிந்த எதையும் மீண்டும் நினைவில் கொண்டுவரலாம்.

நினைவாற்றலை அதிகரிக்கும் வழிகள் :

வயதாக வயதாக நினைவாற்றல் குறையுமா? வயதாகிவிட்டது எல்லாம் மறந்துவிட்டது என்பதைக் காணலாம். ஆனால் தமது தள்ளாத முதுமையிலும் தொண்ணூற்று ஐந்து வயதிலும் மிகத் தெளிவான சிந்தனையும், நினைவாற்றலும் உடையவராக இருந்துள்ளனர் என்பது நாடறிந்த உண்மை.

ஒரு கட்டுரையை மனப்பாடம் செய்யும் ஒரே வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஐந்து முறை படித்தவுடனே நினைவில் பதிய வைத்துக் கொண்டார்கள் என்று சொல்லிவிட இயலாது சிலர் இரண்டு மூன்று முறையில்கூட அதை மனப்பாடம் செய்துவிடக்கூடும். சிலருக்குப் பத்துமுறை படித்தும் மனத்தில் பதியாமல் போகலாம்.

இதேபோல் சிலருக்கு அறிவியல் பாடம் எளிதில் நினைவில் நிற்கும். சிலருக்கு வரலாற்றுப் பாடமும், வேறு சிலருக்கு இலக்கியப் பாடங்களும் எளிதில் நினைவில் நிற்கும். பாடத்திற்குப்பாடம் நினைவாற்றல் மாறும் என்பதல்ல. மேற்கண்டவற்றுக்கெல்லாம் காரணம் படிப்பவரின் ஆர்வத்துடன் கூடிய கவனம், நோக்கம், விருப்பம், தன்னம்பிக்கையோடு கூடிய முயற்சி மற்றும் பயிற்சியும் ஆகும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website