மீன் கழுவுன தண்ணீரை கீழே ஊற்றாமல் இப்படி செய்து பாருங்கள் …உங்கள் செடியில் பூக்கள் பூத்துக் கொண்டே இருக்கும் …!!

December 1, 2022 at 7:41 am
pc

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே ஒரு தனி விருப்பமாக தான் இருக்கிறது. மீன் வாங்கி வந்து நீங்கள் கழுவி சுத்தம் செய்யும் தண்ணீரில் எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன தெரியுமா? இந்த தண்ணீரை எப்படி செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும்? இதனால் செடிகளுக்கு கிடைக்க இருக்கும் நன்மைகள் என்னென்ன? என்கிற தோட்டக்கலை குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மீனை வாங்கி வந்து முதலில் தண்ணீரில் போட்டு வைப்பீர்கள். இந்த முதல் தண்ணீரை நீங்கள் வீணடிக்க கூடாது. இதில் ஏராளமான சத்துக்கள் இருக்கும். மீனை ஊற வைத்த இந்த முதல் தண்ணீருடன் தேவையான அளவிற்கு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு நாட்கள் வரை ஊற விட்டு விட வேண்டும். இதில் ஏராளமான நுண்ணுயிரிகள் பெருகி இருக்கும். இந்த தண்ணீருடன் ரெண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் சேர்த்து, நீங்கள் வடிகட்டி எடுத்து உங்களுடைய செடிகளின் வேரை சுற்றிலும் ஊற்றி வைக்க வேண்டும்.

குறிப்பாக காய்கறி மற்றும் பூச்செடிகளை இது நன்கு செழித்து வளர செய்யும். மண்ணின் வளத்தையும் அதிகரிக்க கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இலை சுருட்டல் நோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. அது மட்டும் அல்லாமல் இலை மஞ்சள் ஆவதும் இதனால் தடுக்கப்படும். பச்சை பசேலென இலைகள் சுருளாமல், நன்கு செழித்து வளரும். காய்கறிகளும், கனிகளும், பூக்களும் உதிராமல் பெரிதாகும் வரை அதன் வளர்ச்சியில் இடையூறுகள் இருக்காது.

பின்னர் மீனை நீங்கள் கழுவுவதற்கு பயன்படுத்தும் தண்ணீரையும் வீணடிக்க கூடாது. இந்த தண்ணீர் கருவேப்பிலை செடி வைத்திருந்தால் அதற்கு அடிப்பகுதியில் நீங்கள் ஊற்றிப் பாருங்கள் உடனே அதிக துளிர்கள் விடும். கருவேப்பிலை கொத்துக் கொத்தாக வளர ஆரம்பிக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது ஒரு காய்கறி செடி அல்லது பூச்செடி வளர்க்க விரும்பினால் நீங்கள் அதற்காக பயன்படுத்தும் மண்ணில் மீன் கழுவிய தண்ணீர் அல்லது மீன் கழிவுகள் போன்றவற்றை போட்டு அதன் மீது மண்ணை நிரப்பி கொள்ள வேண்டும்.

பிறகு நீங்கள் செடிகளை நட்டு வைத்தால் செடிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தலாம். எந்த வகையான பூச்செடி மற்றும் காய்கறி செடி விரைவாக முளைத்து வளரக்கூடிய சத்துக்கள் அனைத்தையும் இந்த மீன் கழிவு கொடுக்கும். குறிப்பாக மீனின் தலைகளை வெட்டி பெரும்பாலும் குப்பையில் எரிந்து விடுவதுண்டு. இந்த மீனின் தலைகளை நீங்கள் மண்ணில் புதைத்து வைத்து அந்த மண்ணில் நீங்கள் செடிகள் வைத்தால் செடிகள் செழித்து வளரும். செடிகளுடைய வேர்களில் இந்த கழிவுகள் தாக்காதவாறு நீங்கள் புதைக்க வேண்டும். ஒரு ஐந்து சென்டி மீட்டர் இடைவெளி விட்டு நீங்கள் உங்களுடைய விதைகளை நட்டு வையுங்கள். இல்லையென்றால் வேர் அழுகி போவதற்கு வாய்ப்புகள் உண்டு.

செடிகளை நன்கு செழித்து வளர செய்ய இந்த மீன் உரத்தை கொடுத்த பின்பு பத்து நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் பழைய சாதக் கஞ்சியை நன்கு கரைத்து அந்த தண்ணீரை செடிகளுக்கு கொடுத்து வாருங்கள். இது நிறைய பூக்களை பூக்கள் செய்யும், நிறைய காய்கறிகளை உங்களுக்கு வாரி வழங்கும். மண்ணின் தரம் அதிகரிப்பதால் செடியின் வளர்ச்சியும் அபரிமிதமாக இருக்கும். இந்த உரங்களை கொடுக்கும் பொழுது செடிகளுக்கு இஷ்டத்திற்கு தண்ணீரை ஊற்றக்கூடாது. மண் ஈரப்பதமாக இருந்தால் போதும், லேசாக செடிகளின் மீது தண்ணீரை தெளித்து விடுங்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website