“முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கணக்கு தெரியாது” – திமுக முன்னாள் எம்.பி பகீர் பேச்சு!தொண்டர்கள் கொந்தளிப்பு …

May 24, 2022 at 7:04 am
pc

கொங்கு மண்டலத்தில் வரும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.பி.ராமலிங்கம். மருத்துவரான இவர் திமுகவில் இருந்து 1996 -1998 மக்களவைக்கும், 2010 – 2016 மாநிலங்களவைக்கும் இருமுறை எம்.பியாக பதவி வகித்தவர். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக பார்க்கப்படும் இவர், திமுகவில், இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்க தலைவர், திமுக விவசாய அணி மாநில செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

2016 மாநிலங்களவை தேர்தலில் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த கே.பி.ராமலிங்கம் 2020-ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மத்திய அரசை புகழ்ந்து பேசியதால் 2020 ஏப்ரல் 12-ம் தேதி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், பாஜகவில் இணைந்த அவருக்கு மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. அண்மையில், மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஜூன் 1-ம் ஆம் தேதி அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட கே.பி.ராமலிங்கம் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

“இந்திய வரலாற்றில் இதுவரை யாரும் செய்திடாத வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இது மக்கள் வாங்குகிற சக்தியை இழந்து விட்டார்கள் என்பதல்ல, ஒட்டுமொத்த இந்தியாவை பாதுகாப்பதற்கானது. என்றும் மத்திய அரசின் கோரிக்கை ஏற்று ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளனர். ஆனால், தமிழகம் இன்னும் குறைக்கவில்லை என்றார்.

மேலும், திமுகவின் தேர்தல் வாக்குறுதியிலேயே ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை 30 விழுக்காடு குறைப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் 3 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டது. 3 ரூபாய் என்பது 30 சதவீதமா? என்று கேள்வி எழுப்பிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கணக்கு போட வராது என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது திருத்திக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையை 30 விழுக்காடு குறைக்க வேண்டும், இல்லை என்றால் பாஜக சார்பில் மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். கே.பி.ராமலிங்கத்தின் இந்த பேச்சுக்கு டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திமுகவினர் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website