மோடியை விளாசிய பிரித்தானிய பத்திரிக்கை!

July 9, 2023 at 7:56 am
pc

இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டும் பிரதமர் மோடி வாயை மூடி இருக்கும் அட்டைப்படத்துடன் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான ‘பிரிட்டிஷ் ஹெரால்டு’ கட்டுரை வெளியிட்டு உள்ளது. அதில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான கடுமையான விதிமுறைகளும் வன்முறைகளும் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது’ என்ற தலைப்பில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. வாயை மூடிக்கொண்டு மோடி இருக்கும் புகைப்படத்திற்கு கீழே, எரியும் ஜனநாயகம் என பத்திரிகையின் அட்டைப் படத்தில் காட்டப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தியின் மேற்கோளுடன் அட்டைப்படம் உள்ளது, ‘ஒரு தேசத்தின் மகத்துவம் அதன் பலவீனமான மக்களை அது எவ்வாறு நடத்துகிறது என்பதன் மூலம் அளவிடப்படுகிறது என கூறப்பட்டு உள்ளது. இது இதழின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. வெளியிடப்பட்டு உள்ள கட்டுரையில் சிறுபான்மைக் குழுக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளும் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் குறித்த கேள்விகளை எழுப்புவதாக சுட்டிக்காட்டுகிறது. 

ஜனநாயகத்திற்கு சவாலாக இருக்கும் போது பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார். ஊடகங்களுக்கு பதில் சொல்லக்கூட அவர் தயாராக இல்லை. அவர் தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது ஜனாதிபதி ஜோ பிடனுடன் செய்தியாளர் சந்திப்பின் போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஊடகங்களைச் சந்தித்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைப்போலவே முஸ்லிம் சமூகம் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான அவரது அணுகுமுறை குறித்து மோடி இன்னும் கேள்விகளை எதிர்கொள்கிறார். 

இந்தியாவில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பகிர்ந்து கொண்ட கவலையையும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கலவரத்தில் 249 தேவாலயங்கள் மற்றும் 17 கோவில்கள் அழிக்கப்பட்டன. 115 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 40,000 பேர் இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் பிரித்து ஆளும் கொள்கையை பாஜக அரசு கடைப்பிடித்துள்ளது. 

2002 குஜராத் கலவரத்தின் போது மோடி மவுனம் கடைப்பிடித்ததை போல மணிப்பூர் கலவரத்தின் போதும் மவுனத்தை கடைபிடிப்பதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டுகிறது, மேலும் வகுப்புவாத பதட்டங்களுக்குப் பின்னால் விஸ்வ இந்து பரிஷத்தின் பங்கைக் குறிப்பிடுகிறது. மல்யுத்த வீரர்களின் வேலைநிறுத்தம் குறித்து மத்திய அரசு மவுனம் காத்து வருவதையும் கட்டுரை விமர்சித்துள்ளது. நாட்டிற்காக பதக்கம் வென்ற வீரர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது அரசாங்கம் மவுனம் காத்து வருகிறது. வீரர்கள் நீதிக்காக வீதியில் இறங்க வேண்டியிருந்தது. 

விளையாட்டு வீரர்கள் தங்களது பதக்கங்களை கங்கை நதியில் வீசியபோதுதான் விளையாட்டுத்துறை மந்திரி இவ்விவகாரத்தில் தலையிட்டதாகவும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. 2014ல் 140 ஆக இருந்த பத்திரிக்கை சுதந்திரம் குறித்த இந்தியாவின் நிலை மோடி ஆட்சியில் 161 ஆக சரிந்துள்ளது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இணையத் தடைகள் உள்ளதாகவும் அது கூறுகிறது. மோடி ஆட்சியில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் பாகுபாடுகள் குறித்தும் கட்டுரையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website