ரஷ்யாவை சீண்டிய இலங்கை!

June 9, 2022 at 9:10 am
pc

இலங்கையிலிருந்து மாஸ்கோ புறப்பட இருந்த ரஷ்ய விமானம் ஒன்றை சிறைப்பிடித்துள்ளதாக இலங்கை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மாஸ்கோவிலிருந்து இலங்கை வந்த அந்த ஏர்பஸ் விமானம், மீண்டும் இலங்கையிலிருந்து புறப்பட அனுமதிக்கப்படவில்லை. கொழும்பு நீதிமன்றம் ஒன்றின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின்மீது தடைகள் விதித்ததால், ரஷ்ய விமான நிறுவனமான Aeroflot அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் ரத்து செய்திருந்த நிலையில், இப்போதுதான் மீண்டும் விமான சேவைகளைத் துவக்கியுள்ள நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இலங்கை எதற்காக ரஷ்ய விமானத்தை சிறைப்பிடித்தது?

அயர்லாந்திலுள்ள Celestial Aviation Trading Limited என்னும் நிறுவனத்தின் புகாரின்பேரில்தான் தாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

Aeroflot நிறுவனத்துக்கு எதிராக, விமானங்களை குத்தகைக்கு விடும் Celestial Aviation Trading Limited என்னும் அந்த அயர்லாந்து நிறுவனம் புகாரளித்ததன் தொடர்ச்சியாகத்தான் இலங்கை அந்த விமானத்தை சிறைப்பிடித்துள்ளது. ஆனால், இலங்கையின் நடவடிக்கையால் கோபமடைந்துள்ள ரஷ்யா, இலங்கைத் தூதருக்கு சம்மன் அளித்துள்ளது.

உக்ரைனை ரஷ்யா ஊடுருவியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. அதன் தொடர்ச்சியாக நடந்த விடயங்கள்தான் இன்று இலங்கை ரஷ்ய விமானத்தை சிறைப்பிடிப்பதற்கு காரணமாக அமைய, இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவில் விரிசல் உருவாகியுள்ளது.

கனடாவும் இதேபோல ஜூன் மாதம் 3ஆம் திகதி ரஷ்ய விமானம் ஒன்றை சிறைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

விமானங்களை குத்தகைக்கு எடுப்பது வழக்கமாக நடைபெறும் ஒரு விடயம்தான். ஆனால், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து தங்கள் விமானங்களை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு தனது உறுப்பு நாடுகளுக்கு சமீபத்தில் பிறப்பித்த உத்தரவுதான் இப்போது ரஷ்ய விமானம் சிறைப்பிடிக்கப்பட்டதற்கு காரணமாக உள்ளது.

இந்நிலையில், ரஷ்யா சுமார் 400 விமானங்களை திருடிக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. பிரச்சினை என்னவென்றால், ரஷ்ய பிரதமரான Yuri Borisov, வெளிநாட்டு குத்தகை விமானங்கள் அனைத்தும், ஒப்பந்தம் முடிந்த பிறகு ரஷ்யாவில்தான் இருக்கும் என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதால், மேற்கத்திய நாடுகள் சுமார் 500 விமானங்கள் தொடர்பிலான ஒப்பந்தங்களை உடனடியாக முறித்துக்கொண்டன. அந்த விமானங்களில் 78 கைப்பற்றப்பட, சுமார் 400 விமானங்கள் கைப்பற்றப்படாமல் உள்ளன.

பதிலுக்கு, அந்த விமானங்களை தனதாக்கிக்கொள்ளும் வகையில் ரஷ்யா சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது. அவற்றின் மதிப்பு சுமார் 950 பில்லியன் யூரோக்கள் ஆகும். அந்த விமானங்களில் பெரும்பான்மை பெர்முடா மற்றும் அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் ஆகும். ஆகவேதான், அத்தகைய விமானங்களை சிறைப்பிடிக்க அயர்லாந்து உத்தரவிட்டுள்ளது.

இந்தப் பிரச்சினையில் இலங்கை எப்படி சிக்கியது?

தனது கச்சா எண்ணெய்க்காக பெருமளவில் ரஷ்யாவை சார்ந்திருக்கும் இலங்கைக்கு ரஷ்யாவைக் கோபப்படுத்துவற்கான காரணம் எதுவும் கிடையாது. ஆனால், ஏற்கனவே கடும் பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ, அமெரிக்கா மற்றும் IMF நிதி அமைப்பு போன்றவற்றின் கோபத்தை எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதாலேயே வேறு வழியில்லாமல் இலங்கை இந்த நடவடிக்கையை எடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இப்போது ஒருவேளை இலங்கையிலிருக்கும் அந்த விமானப்பயணிகளாகிய 200 ரஷ்யர்களை அவர்களுடைய நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்காக ஏற்பாடுகளை இலங்கை செய்யும் அதே நேரத்தில், அயர்லாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் அது பேச்சு வார்த்தை நடத்தலாம். அப்படிச் செய்வது, ரஷ்யாவையும் மகிழ்ச்சியடைய வைக்கும் நடவடிக்கையாக அமையலாம். ஏனென்றால், ஏற்கனவே ரஷ்யா இந்தப் பிரச்சினையை கூடிய விரைவில் தீர்த்து, பாரம்பரியமான இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பின் மீதான எதிர்மறையான தாக்கத்தைத் தவிர்க்குமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்கோ தொடங்கிய உக்ரைன் போரை நாம் தூரத்திலிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், இப்போது இலங்கை போன்ற நாடுகள் மீது வரை அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை கண்கூடாகக் காண்கிறோம். ஒரு பக்கம் இந்த பிரச்சினை எப்போது முடிவுக்கு வருமோ தெரியவில்லை. மறுபக்கம், பெரிய நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில், இலங்கை போன்ற சிறிய நாடுகள் தேவையில்லாமல் சிக்கிக்கொண்டுள்ளன.

இதற்கிடையில், ரஷ்ய விமானத்தை இலங்கையிலிருந்து வெளியேற தடை விதித்த உத்தரவை, இலங்கை நீதிமன்றம் ஒன்று ரத்து செய்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆகவே, இனி அந்த ரஷ்ய விமானம் இலங்கையிலிருந்து வெளியேறத் தடையிருக்காது என இலங்கை சுற்றுலா மேம்பாட்டுத்துறைக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website