ரஷ்யா -உக்ரைன் போர்!! புடினைக் கொல்வதற்காக வாழும் சூனிய பொம்மைகளாக மாறும் மனிதர்கள்…

September 15, 2022 at 6:01 pm
pc

புடினைக் கொல்வதற்காக, தாங்களே, வாழும் சூனிய பொம்மைகளாக மாறுபவர்களைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

டெலிகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பரவலாக உலாவருகிறது அந்த வீடியோ.

ரஷ்ய ஜனாதிபதி புடினைக் கொல்வதற்காக, தாங்களே வாழும் சூனிய பொம்மைகளாக மாறுவதற்காக புடினுடைய உருவத்தைத் தங்கள் உடலில் முதியவர்கள் சிலர் பச்சை குத்திக்கொள்வதாக கூறப்படும் ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் மற்றும் ட்விட்டரில் உலாவரும் அந்த வீடியோவில், பச்சை குத்தும் கலைஞர் ஒருவர், ஒரு முதியோர் காப்பகத்தில் வாழும் முதியவர்கள் உடலில் புடினுடைய உருவத்தை பச்சை குத்துவதைக் காணலாம்.

அதாவது, அந்த முதியவர்கள் மரனமடையும்போது, சூனிய பொம்மைகளைப்போல, புடினையும் தங்களுடன் அழைத்துச் சென்றுவிடுவார்களாம்.

அந்த வீடியோவில் காணப்படுபவர் பிரபல பச்சை குத்தும் கலைஞரான Horst Bauer என கூறப்படுவதுடன், அந்த வீடியோவை வெளியிட்டது பிரபல ஜேர்மன் ஊடகமான Deutsche Welle (DW) என்றும் அந்த வீடியோ காட்டுகிறது.

ஆனால், அது ஒரு போலி வீடியோ என Deutsche Welle (DW) ஊடகம் தெரிவித்துள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிகழ்ந்த விடயங்களைத் தொகுத்து, அந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டுள்ளதாக DW ஊடகம் தெரிவித்துள்ளது.

உண்மையில், அந்த வீடியோவில் பச்சை குத்தும் கலைஞராக காட்டப்படுபவர் Horst Bauer அல்ல. அவர் இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற இடத்தைச் சேர்ந்த Doc Price என்பவர் ஆவார். அவர் உலகின் வயதான பச்சை குத்தும் கலைஞராக கருதப்படுகிறார்.

அத்துடன் முதியோர் இல்லம் ஒன்றில் ஒருவருக்கு பச்சை குத்தப்படுவதாக அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. பச்சை குத்திக்கொள்ளும் அந்த நபர், உண்மையில், உலகின் அதிக வயதில் பச்சை குத்திக்கொண்டவரான பிரித்தானியாவின் Derbyshireஐச் சேர்ந்த Jack Reynolds ஆவார். அவர், 2016ஆம் ஆண்டு, தனது 104ஆவது வயதில் பச்சை குத்திக்கொண்டார்.

அத்துடன், அவர் 2020இல் மரணமடைந்துவிட்டார். ஆக, அது இப்போது நடந்த விடயம் அல்ல.

மேலும், அந்த வீடியோவில் காணப்படும் காப்பகம், ஜேர்மனியிலுள்ள Dülmen என்ற இடத்தில் அமைந்துள்ள Anna Katharina Hospice என்ற காப்பகமாகும்..

இப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வலம் வருவதே அந்த காப்பக உரிமையாளர்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் இது குறித்துக் கேட்டபோது அதிர்ச்சியடைந்த அவர்கள், இது தங்கள் காப்பகத்திலுள்ளவர்களையும், ஊழியர்களையும் அவமதிக்கும் செயல் என்றும், தங்கள் காப்பகத்தில் பச்சை குத்துவதெல்லாம் நடப்பதில்லை என்றும் கூறி, அந்த வீடியோவை வெளியிட்டவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

அத்துடன், அந்த வீடியோவில் காணப்படும் சப் டைட்டில்களிலும் பல எழுத்துப் பிழைகள் காணப்படுகின்றன.

மொத்தத்தில், தாங்கள் அப்படி ஒரு வீடியோவை வெளியிடவில்லை என்று கூறியுள்ள DW ஊடகம், அது ஒரு போலி வீடியோ என்றும் விளக்கமளித்துள்ளது.  

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website