வடிவேலு என்னும் நடிகனை அடையாளப்படுத்திய மாரி செல்வராஜ்!

June 30, 2023 at 11:51 am
pc

உதயநிதியின் கடைசி படம், வடிவேலுவின் மாறுபட்ட பரிமாணம், மாரி செல்வராஜின் ஆதங்கம் என பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான மாமன்னன் இன்று வெளியாகி இருக்கிறது. பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

ஏற்கனவே இயக்குனர் இப்படம் தன்னுடைய மனக்குமுறல் என்று சொல்லி இருந்தார். இந்த சூழலில் தன்னுடைய ஆதங்கத்தை அவர் சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தாரா, அவருடைய கருத்து முறையாக விதைக்கப்பட்டதா என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் வாயிலாக காண்போம். எல்லோரையும் அடக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கும் ஆதிக்க வர்க்கத்திற்கு எதிராக சம உரிமையை எதிர்பார்க்கும் மக்களின் பிரதிபலிப்புதான் இந்த மாமன்னன்.

கதைப்படி பகத் பாசில்ஆதிக்க குணம் கொண்ட கட்சி தலைவராக வருகிறார். அவருடைய கட்சியின் எம்எல்ஏவான வடிவேலு வேறு பிரிவைச் சேர்ந்தவர். அவருடைய மகன் உதயநிதி, அவரின் காதலியாக வரும் கீர்த்தி சுரேஷ் இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை தான் மாமன்னன். உதயநிதிக்கு சொந்தமான இடத்தில் இலவச கல்வி மையம் நடத்தி வரும் கீர்த்தி சுரேஷுக்கு பகத் பாசிலின் அண்ணனால் பிரச்சனை ஏற்படுகிறது. இது தொடர்பாக ஆரம்பிக்கப்படும் பிரச்சினை எப்படி சாதிய அரசியலாக மாறுகிறது என்பதை மாரி செல்வராஜ் நெற்றி பொட்டில் அடித்தார் போன்று சொல்லி இருக்கிறார்.

சிறுவயதில் ஆதிக்கவாதிகளால் காயப்படும் உதயநிதி தன் அப்பா வடிவேலுவிடம் சொல்லியும் பலன் இல்லாமல் போகிறது. அதனால் வருட கணக்கில் அவருடன் பேசாமல் இருக்கும் அவர் வடிவேலுவுக்கு தன்மான பிரச்சினை என்று வரும் போது பொங்கி எழும் அந்தக் காட்சி கைத்தட்டலால் அரங்கத்தையே அதிர வைக்கிறது. அதிலும் பகத் பாசில் ஆதிக்க திமிருடன் உட்கார்ந்திருப்பதும் அதை பார்த்து பொங்கும் உதயநிதி வடிவேலுவை அமர வைக்கும் அந்த காட்சி முத்தாய்ப்பாக இருக்கிறது.

இவ்வாறு படம் முழுக்க தெறிக்கும் வசனங்கள், நடிப்பு என மாரி செல்வராஜ் கேட்டதற்கு மேலேயே அனைவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். அதிலும் வடிவேலு என்னும் நடிகன் நம்மை கொஞ்சம் அசைத்து தான் பார்க்கிறார். இதுவரை காமெடியனாக பார்த்த அவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குனர் சொன்னதை உள்வாங்கி மாமன்னனாகவே வாழ்ந்திருக்கும் அவர் ஒட்டுமொத்த படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார்.

அவருக்கு ஈடு கொடுத்து கலக்கி இருக்கும் பகத் பாஸில் ஆதிக்க குணம் என்பது ரத்தத்திலேயே ஊறிப் போய் இருக்கும் ஒருவராக அசத்தியிருக்கிறார். இப்படி படத்தில் பல நிறைகள் இருந்தாலும் இரண்டாம் பாதி கொஞ்சம் வலுவிழந்தது போல் காணப்படுகிறது. ஆனால் அதையும் இயக்குனர் கிளைமாக்ஸ் காட்சியின் மூலம் சரி செய்து இருக்கிறார். அந்த வகையில் காலம் காலமாக நடக்கும் சாதிய அரசியலுக்கான ஒரு படமாக இந்த மாமன்னன் இருக்கிறது.

ரிலீசுக்கு முன்பு இப்படம் பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் இருந்தாலும் படத்தில் அப்படிப்பட்ட சர்ச்சையான விஷயங்கள் இல்லை என்பதுதான் உண்மை. எல்லாரும் இங்கு சமம் தான் என்ற விஷயத்தை வசனங்கள் மூலம் சாட்டையாக சுழற்றி இருக்கும் மாரி செல்வராஜ் அதை சரியாகவே சொல்லி இருக்கிறார். ஆக மொத்தம் இந்த மாமன்னன்- மறக்க முடியாத மன்னன்

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website