வாத்தி திரைவிமர்சனம்!

February 17, 2023 at 4:24 pm
pc

கல்வி கொள்ளையை எதிர்த்து போராடும் வாத்தியாரின் கதை.

தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத்தின் தலைவராக இருக்கிறார் சமுத்திரக்கனி. இவர் தனியார் பள்ளிகள் தான் சிறந்தது என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கி அதன் மூலம் கல்வி கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார். 

மேலும் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளே தத்தெடுத்து நடத்தும் என்று அறிவித்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். 

அப்படி தத்தெடுக்கப்பட்ட ஒரு கிராமத்து அரசு பள்ளிக்கு தன் பள்ளியில் வேலை செய்யும் தனுஷை வாத்தியாராக நியமிக்கிறார் சமுத்திரகனி. ஒரு கட்டத்தில் தனுஷே சமுத்திரக்கனிக்கு எதிராக திரும்ப, இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. 

இந்த பிரச்சனையில் தனுஷ், அந்த ஊரில் இருந்து அடித்து துரத்தப்படுகிறார். இறுதியில் தனுஷ், சமுத்திரகனி இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை என்ன? தனுஷை ஊரை விட்டு வெளியே துரத்த காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், முழு கதையையும் தன் தோளில் தாங்கி நிற்கிறார். காதல், காமெடி, சென்டிமென்ட் என நடிப்பில் பளிச்சிடுகிறார். மாணவர்களை படிக்க வைக்க தனுஷ் சொல்லும் புதுப் புது ஐடியாக்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று தனுஷ் பேசும் வசனங்கள் சிறப்பு. தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

தனுஷ், சம்யுக்தா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் கென் கருணாஸ். தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் சமுத்திரகனி. 

தந்தையாக நடித்து மனதில் பதிந்து இருக்கிறார் ஆடுகளம் நரேன். மாணவர்களாக நடித்து இருப்பவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள். 

கல்வி கொள்ளையை மையப்படுத்தி படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கி. ஏற்கனவே இது போன்ற கதைகள் வந்திருந்தாலும், இன்றைய தலைமுறையினர் ரசிக்கும்படி அழகாக அமைத்திருக்கிறார். 

90களில் நடக்கும் கதையை அமைத்து அதற்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம். 

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஒளிப்பதிவாளர்களான தினேஷ் மற்றும் யுவராஜ் படத்தின் தன்மை கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கின்றனர். மொத்தத்தில் வாத்தி – வாழ்த்தலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website