“விஜய்யால் முடியவே முடியாது” – சீமான் விமர்சனம்!

June 20, 2023 at 10:30 am
pc

நடிகர் விஜய்யால் தனக்கு கிடைக்கும் வாக்குகளை பிரிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். நேற்றைய தினம் நடிகர் விஜய் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நேரில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

234 தொகுதிகளில் உள்ள மாணவ மாணவிகள் இதில் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் விஜய், வாக்களிக்க பணம் வாங்கக்கூடாது என்று பெற்றோரிடம் கூறுங்கள் என அறிவுரை வழங்கினார்.

அவரது இந்த நிகழ்ச்சி ஏற்பாடு அரசியல் வருவதற்கான நடவடிக்கை என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது தம்பி என்று அடிக்கடி கூறி வரும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றைய நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தென்காசியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வாக்காளர்களுக்கு அரசியல்வாதிகள் பணம் கொடுக்கக்கூடாது என்பதை நான் கடந்த 13 ஆண்டுகளாக கூறி வருகிறேன். என் கருத்தைத் தான் நடிகர் விஜய் பேசியுள்ளார். என் கருத்தை அடிக்கோடிட்டு தான் விஜய் காண்பித்துள்ளதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

தேர்தலில் பணம் வழங்குவதை தடுக்கும் பொறுப்பு என்பது எனக்கும், நடிகர் விஜய்க்கும் மட்டும் இல்லை; அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளது. வாக்குக்கு காசு கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், முறையாக செயல்படுத்துவது இல்லை. இது தேர்தல் ஆணையத்தின் மிகப்பெரிய தோல்வியாக உள்ளது.

விஜய் குறிப்பிட்ட தலைவர்களையும் படிக்க வேண்டும். அவர்களைத் தாண்டி பல தலைவர்களையும் படிக்க வேண்டும். அதிமுக, திமுகவைப் பிடிக்காதவர்கள் நடிகர் விஜய்க்கு வாக்களிக்க முன்வருவார்கள். என் வாக்கினை விஜய்யால் பிரிக்க முடியாது. நடிகர் ஒருவர் அரசியலுக்கு வந்தால் அவரது ரசிகர்கள், அவர் மீது ஈர்ப்பு கொண்டவர்கள் தான் வாக்களிப்பார்கள்.

கொள்கை, கோட்பாட்டை பார்த்து தான் மற்றவர்கள் அவருடன் கைக்கோர்ப்பார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தான் திரைப்படத்தில் நடிப்பதே நாடாள தகுதி என்ற நிலை உள்ளது. எனது கொள்கை என்பது நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பது தான். ஏனென்றால் மொழி, இனம், நிலவள பாதுகாப்புக்காக போராடும் தகுதியானவர்கள் எடுபடாமல் போய்விடுகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website