வீடே மணமணக்கும் மஷ்ரூம் கிரேவி சமைக்கலாம் வாங்க ….!!

July 18, 2022 at 4:12 pm
pc

இட்லி, தோசைக்கு எப்போதும் போல சட்னி வைக்காமல் இப்படி ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் குக்கரில் போட்டு இரண்டு விசில் விட்டு எடுத்தால் போதும், சுவையான மஷ்ரூம் கிரேவி தயாராகிவிடும்! சூடான சாதம், சப்பாத்தி, பூரிக்கு கூட சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த சுவையான மஷ்ரூம் கிரேவி எப்படி எளிதாக தயாரிக்கலாம்? என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள போகிறோம்.


தேவையான பொருட்கள்:


சோம்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சின்ன வெங்காயம் – 10
பூண்டு பல் – நான்கு
இஞ்சி துண்டு – 4
வர மிளகாய் – ஐந்து
கருவேப்பிலை – ஒரு இணுக்கு
நறுக்கிய தேங்காய் துண்டுகள் – அரை கப்
மல்லித்தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை, கல்பாசி – தலா 2
பெரிய வெங்காயம் – ஒன்று
கருவேப்பிலை – சிறிதளவு
பெரிய தக்காளி – ஒன்று
புதினா இலை – 15
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மஸ்ரூம் – 200 கிராம்
நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

செய்முறை :

முதலில் மஷ்ரூம் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இதனால் அதில் இருக்கும் கிருமிகள் நீங்கும். பின்னர் வறுத்து அரைப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய விடுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை போட்டு லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேருங்கள். இவை லேசாக வதங்கியதும் சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்து வதக்கி விடுங்கள். இதனுடன் ஒரு கொத்து கருவேப்பிலையை சேருங்கள்.


காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். நாலு பல் பூண்டு, அதே அளவிற்கு இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக வதங்கியதும் தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள். பிறகு நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி விடுங்கள். இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தனியாத் தூள் சேர்த்து ஒரு முறை நன்கு வதக்கி விட்டு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.


இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கல்பாசி, பிரிஞ்சி இலை ஆகியவற்றை தாளித்து ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் நன்கு வதங்கி வரும் பொழுது, ஒரு கொத்து கறிவேப்பிலை மற்றும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்குங்கள். இவை சீக்கிரம் வதங்க கொஞ்சம் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விடுங்கள். இதனுடன் வாசனைக்கு புதினா இலைகளை சேர்த்து வதக்கி விடுங்கள்.


இவை அனைத்தும் நன்கு வதங்கி வரும் போது நீங்கள் சுத்தம் செய்து வைத்துள்ள மஸ்ரூம் துண்டுகளை நான்கைந்தாக வெட்டி சேர்த்து நன்கு வேக வதக்கி விட்ட பின்பு அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். இப்பொழுது கிரேவிக்கு தேவையான அளவிற்கு மட்டும் தண்ணீரை குறைவாக சேர்த்து உப்பு, காரம் சரி பார்த்து குக்கரை மூடி வைத்து இரண்டு விசில் விட்டு எடுத்தால் போதும், கிரேவி திக்காக நல்ல சுவையாக வெந்து வந்திருக்கும். நறுக்கிய மல்லி தழையை தூவி பரிமாறி பாருங்கள், அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, ஆப்பம், இடியாப்பம், சாதத்துக்கு கூட தொட்டுக் கொண்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website