வேட்டையன் விமர்சனம்:சூப்பர் ஸ்டார் எனும் பெரும் சக்தி…

நடிகர்கள்:ரஜினிகாந்த்,மஞ்சு வாரியர்,அமிதாப் பச்சன்,ஃபஹத் ஃபாசில்
இயக்கம்: ஞானவேல்
தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என நம்புபவர் எஸ்.பி. அதியன்(ரஜினிகாந்த்). மனித உரிமைகள் முக்கியம் என சொல்லும் நீதிபதி சத்யதேவ்(அமித்பா பச்சன்) என்கவுன்ட்டருக்கு எதிரானவர். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயான கதை வேட்டையன்.
அரசு பள்ளி ஆசிரியையான சந்தியாவின்(துஷாரா விஜயன்) பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு வேகமாக நீதி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அதியன், மீடியா, அரசியல் மற்றும் மக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் அப்பாவியை கொன்றுவிடுகிறா
அப்பாவியை கொன்றுவிட்டீர்கள் அதியன் என நீதிபதி சத்யதேவ் அவரிடம் கூற வேதனை அடைகிறார். இதையடுத்து சந்தியாவை கொலை செய்தவரை கண்டுபிடிக்க அதியன் முயற்சி செய்ய பல விஷயங்கள் வெளியே வருகிறது. அந்த சூழலில் அதியன் மீண்டும் என்கவுன்ட்டர் செய்வாரா இல்லை நிதானமாக செயல்பட்டு வேறு வழியை கையாள்வாரா?
படம் துவங்கிய முதல் 30 நிமிடங்கள் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அறிமுக சண்டை, டான்ஸ், யூகிக்க முடியும் கதை ஆனால் வேகமாக செல்கிறது. இதனால் முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாவது பாதியில் அந்த வேகம் குறையத் துவங்குகிறது. படம் ரொம்ப நேரம் ஓடுவது போன்றும் தோன்றுகிறது
கிளைமாக்ஸ் காட்சியில் ராணாவும், ரஜினியும் மோதுவதில் புதுமை எதுவும் இல்லை. தியேட்டர்களில் விசில் பறக்க வேண்டும் என்பதற்காக சண்டை காட்சிகள் எழுதப்பட்டுள்ளது. போலீஸ் என்கவுன்ட்டர்கள் பற்றி பல கேள்விகள் கேட்கிறது படம். விசாரணை நடத்தும் போது மக்களிடையே போலீசார் பாகுபாடு பார்ப்பது பற்றியும் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
கல்வி முறையை பணக்காரர்கள் எப்படி தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கனவுகளுடன் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து பிள்ளைகளை குறி வைக்கிறார்கள் என காட்டியிருக்கிறார்கள்.
படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் ரஜினி. அவரின் சூப்பர் ஸ்டார் பவருக்கு முன்பு பிற கதாபாத்திரங்களின் வெயிட் குறைந்து கவுரவ கதாபாத்திரங்கள் போன்று தெரிகிறது. அதை தாண்டியும் பேட்டரியாக ஜொலிக்கிறார் ஃபஹத் ஃபாசில்.
தொழில்நுட்ப விஷயங்களில் உதவி செய்ய திருடனான பேட்டரியை தன்னுடன் வைத்துக் கொள்கிறார் அதியன். ஹார்லிக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ள பேட்டரி ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
அமிதாப் பச்சன் தனித்து தெரிகிறார். ஆனால் அமிதாப் பச்சன், ரஜினி சேர்ந்து வரும் காட்சிகள் வலுவாக இல்லை.
அதியன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். யூடியூப் சேனல் நடத்தும் மஞ்சுவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. ஆனால் ஒரு மாஸ் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.
கல்வியை வைத்து காசு பார்க்கும் தொழில் அதிபரான ராணா படத்தின் இறுதியில் வருகிறார். அனிருத்தின் பி.ஜி.எம். பெரிய பலம். நான்கு பாடல்களில் மனசிலாயோ மற்றும் ஹன்ட்டர் வந்தார் பாடல்கள் மட்டுமே மனசில் நிற்கிறது.
அது எப்படி என்கவுன்ட்டரில் பணக்காரர்கள் அல்ல மாறாக ஏழைகள் தான் குறி வைக்கப்படுகிறார்கள் என கேள்வி கேட்டிருக்கிறார் ஞானவேல். கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.
சுவாரஸ்யமான கதையை கையில் எடுத்திருக்கிறார் ஞானவேல். ஆனால் சூப்பர் ஸ்டார் எனும் பெரும் சக்தி அதை மேலும் சுவாரஸ்யமாக்குவதில் இருந்து தடுத்துவிட்டது.