வேற லெவலில் பேசி அசத்திய தயாநிதி!!மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள்…

October 9, 2022 at 2:52 pm
pc

சென்னையில் இன்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் தயாநிதி மாறன் பேசுகையில், ஸ்டாலின் முதல் உதயநிதி ஸ்டாலின் வரை பலரையும் வரவேற்று உரையை தொடங்கினார். அதில் ”வருங்கால திராவிட முன்னேற்றக் கழகம்” என்று சொல்லக்கூடிய இளைஞரணி செயலாளர், எனது அருமை சகோதரர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். அப்போது, ”ஏங்க இப்படிலாம்?” என்பது போல் கையால் உதயநிதி ஸ்டாலின் சைகை காட்டினார். பின்னர் புன்னகையுடன் சமாளித்துக் கொண்டே அமைதி காத்தார்.

உடனே உதயநிதி அருகிலிருந்த திமுக வாரிசுகளான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா, க.பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் கைதட்டி வரவேற்றனர். அதேசமயம் தயாநிதியின் புகழாரத்தை கண்டுகொள்ளாமல் அமைதியாகவே இருந்தார் தலைவர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து பேசிய தயாநிதி மாறன், மத்திய சென்னை தொகுதிக்கு பெருமை சேர்த்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏனெனில் செயல் தலைவராக பதவியேற்றது, முதல்முறை கழகத்தின் தலைவரானது, தற்போது இரண்டாவது முறை தலைவராக பதவியேற்றது ஆகியவை அனைத்துமே மத்திய சென்னை தொகுதியில் தான். இந்த பெருமை தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். திராவிட சமுதாயம் பல நூறு ஆண்டுகளாக தவித்து வந்த சமுதாயம். அதற்கு விடிவெள்ளியாக வந்தவர் தந்தை பெரியார்.

நம்மை படிக்காதே. மாடு மேய்க்க செல்லுங்கள் என்று தள்ளிய ஆரிய கூட்டத்திடம் இருந்து காப்பாற்றி நம்மை படி, படி என்று கூறினார். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா. அடுத்ததாக படித்தால் மட்டும் போதாது. நல்ல பொறுப்புக்கு வர வேண்டும் என்று நம்மை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. அதைத் தொடர்ந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள்.

மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் காலச் சக்கரத்தை பாருங்கள். மீண்டும் ஆரிய கூட்டம் வந்து மதம், சாதி என்று பேசி நம்மை பிரித்து பிளவுபடுத்தி அதிலும் பாதாளத்திற்கு கொண்டு போய் படிக்காதே என்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து தந்தை பார்த்த தொழிலையே பார்க்க வேண்டும் என்கிறது. எதற்கு கவலைப்படாதீர்கள். நான் இருக்கிறேன். கலைஞரின் மகனாக வந்துள்ளேன் என்று எங்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளீர்கள்.

தமிழ் சமுதாயத்தை, திராவிட சமுதாயத்தை, ஒட்டுமொத்த தேசத்தையும் காப்பாற்ற வேண்டிய பெரிய பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நேரத்தில் என்னுடையது ஒரேவொரு ஆசை தான். இந்தியாவிற்கே நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். அப்போது தான் திராவிட மாடல் ஆட்சி தேசமெங்கும் மலரும் என்று தயாநிதி மாறன் பேசியது முக்கியத்துவம் பெற்றது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website