‘1.5 டன் மீன்கள் பறிமுதல்’ – மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி!
கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த மீனவ கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகள், பைபர் படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பதிவு செய்யப்படாத சுருக்கு மடி வலைகளைக் கொண்டு படகுகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் யேகேஷ், மீன்வளத்துறை ஆய்வாளர் அஞ்சனாதேவி, மீன்வளத்துறை அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் காவலர்கள் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்குப் பதிவு செய்யப்படாத படகு மூலம் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 1.5 டன் மீன்கள் இருந்தது.
இதையடுத்து அந்த மீன்களை மீன்வளத்துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர் அந்த மீன்களை ஏலம் விட்டனர். அதில் மீன்கள் ரூ. 1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த பணத்தை அரசு கணக்கில் மீன்வளத்துறை அதிகாரிகள் வரவு வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து பதிவு செய்யப்படாத படகு மூலம் , தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்ததாக 3 படகு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல்மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் அப்பகுதி மீனவர்களிடம் பதிவு செய்யப்படாத படகு மற்றும் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து விட்டுச் சென்றனர்.