100 வேலை திட்டத்தில் ரூ.14 லட்சம் பலே மோசடி!சினிமாவை விஞ்சும் நூதன ஊழல்…

May 10, 2022 at 1:33 pm
pc

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர், வங்கி ஊழியர்கள், வட்டார வளர்ச்சி

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் போடாத சாலைக்கு உயிரிழந்தவர்களின் வங்கிக் கணக்குகள் உட்பட பொதுமக்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தி அதிகாரிகள் 14 லட்சம் ரூபாய் ஊழல் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

100 வேலை திட்டத்தில் பலே மோசடி!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இதில், 300-க்கும் மேற்பட்டோருக்கு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் அட்டை உள்ளது. இந்த கிராமத்தில் தற்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஏரி ஓடை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட வருகை பதிவேட்டில் பணித்தள பொறுப்பாளர், ஊராட்சி மன்ற தலைவர், பயனாளி ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் 2000, 3000 என பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறந்து போன ரேணுகாம்பாள், நாராயணசாமி, மகேஸ்வரி உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் தலா ரூ.3,776 வரவு வைக்கப்பட்டுள்ளது.

ரூ.14 லட்சம் சுருட்டியது எப்படி?

ஒரு நாளைக்கு 200 ரூபாய் வீதம் கணக்கிட்டாலும் எட்டு நாட்களுக்கு 1600 ரூபாய் மட்டுமே வந்திருக்கவேண்டும், ஆனால் வங்கிக் கணக்கில் பணம் அதிகம் வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து அறிந்து கொள்வதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இணையத்தின் மூலம் அக்கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 640 மீட்டர் தூரத்துக்கு தார் சாலை அமைப்பதற்காக ரூ.14 லட்சத்து 17 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும், இதில் வேலை செய்யாமலேயே தற்போது ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதில், மீதமுள்ள 12 லட்சமும் இதேபோன்று வேறு வகையில் எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்சத்தில் கொழிக்கும் அதிகாரிகள்

அதன் பின்னர், அக்கிராம மக்கள் ஒன்றிணைந்து வட்டார வளர்ச்சி அலுவலக வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்களின் கோரிக்கையை கேட்க அதிகாரிகள் யாரும் வராததால் ஆத்திரம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் திடீரென ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்து வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சக அதிகாரிகள் சமதானம் செய்தனர்.

சினிமா பாணியில் பலே ஊழல்

சாலை அமைக்காமலே பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி ஊழல் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சினிமாவில் வருவது போல் சாலை போடாமலே 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் பயனாளிகளின் கணக்கை வைத்து நிதி கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் தொடரும் ஊழல்கள்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இளங்காடு கிராமத்தில் பாசன வாய்கால் அமைக்காமல் போலி பில்கள் மூலம் ஒரு கோடியே 36 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்ததை சமயம் செய்திகள் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website