45 நாட்களில் ரூ.4 கோடியை சம்பாதித்த ஆந்திரா தக்காளி விவசாயி!

July 31, 2023 at 8:56 pm
pc

எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி விலை, நடுக்கத்தை உண்டாக்கியுள்ளது. 

ஆனால் இந்த ‘கிடுகிடு’ விலை உயர்வு, சில விவசாயிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் அழைத்து வந்திருக்கிறது. அவர்களை குறுகிய காலத்தில் கோடீஸ்வரர்களாக்கி இருக்கிறது. அவர்களில் ஒருவர்தான், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமவுலி. தக்காளி விவசாயியான இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 

அதில், ஒரு அரிய வகை தக்காளியை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பயிரிட்டார். விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் நுண்ணீர் பாசனம், மூடாக்கு போன்ற நவீன உத்திகளைப் பயன்படுத்தினார். 

இவருடன், இவரது மனைவியும் சேர்ந்து உழைத்ததற்கு, நிலத்தின் மேல் பலன். ஜூன் மாத இறுதியில் சந்திரமவுலியின் நிலத்தில் செடிகளில் குண்டு குண்டாக தக்காளிகள் காய்த்துக் குலுங்கின.
அவற்றைப் பறித்து, அருகில் உள்ள கர்நாடக மாநிலம் கோலார் சந்தைக்கு கொண்டு சென்று விற்றார். 15 கிலோ தக்காளி அடங்கிய ஒரு பெட்டியை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்தார். 

இப்படி இவர் 45 நாட்களில் விற்ற தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம்! இதன் மூலம், ரூ.4 கோடி சம்பாதித்திருக்கிறார் சந்திரமவுலி. தற்போது மகிழ்ச்சியான மனிதராக மாறியிருக்கிறார். 

குரலில் குதூகலம் தென்பட அவர் கூறும்போது, ‘தக்காளி விற்று நான் ரூ.4 கோடி ஈட்டினேன். அதில் உற்பத்தி, பறிப்பதற்கான கூலி, கமிஷன், போக்குவரத்து செலவு எல்லாம் போக எனக்கு லாபமாக ரூ.3 கோடி மிஞ்சியிருக்கிறது’ என்றார். 

தகுந்த விலை கிடைக்காமல் விளைபொருட்களை வீதியில் கொட்டுவது, கடன் தொல்லை தாளாமல் தற்கொலையை நாடுவது என்று விவசாயிகளைப் பற்றிய வேதனைச் செய்திகளைத்தான் அதிகம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் தக்காளி விலை உயர்வால் ஒரு சில விவசாயிகளாவது கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பது, குடும்பஸ்தர்களின் குமுறல்களுக்கு மத்தியிலும் சிறிது ஆறுதலையே தருகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website