500 கோடி மோசடி..? தஞ்சை பஸ் கம்பெனி மீது ஏராளமானோர் புகார்..!

August 25, 2022 at 5:20 pm
pc

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள ராஹத் தனியார் பஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர் பொதுமக்களிடம் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதனை அடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். பஸ்ஸில் முதலீடு செய்தவர்களுக்கு மாத ரூபாய் 10,500 வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இறந்து விட்டார். இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தில் பங்கு தொகை வழங்கப்படவில்லை. இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் சென்று தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் ராஹத் பஸ் கம்பெனிக்கும் எங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துவிட்டனர்.

குறிப்பாக பஸ் உள்ளிட்ட அந்த நிறுவனங்களின் பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களின் முதலீடு மற்றும் பங்கு தொகை கேட்டு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தனர். மேலும் 6000-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருச்சி மன்னார்புரம் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு மண்டல அலுவலகத்தில் இன்று காலை புகார் அளிக்க குவிந்தனர்.

இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் புகார் மனுவுடன் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த புகார் மனுக்களை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரியிடம் அளித்தனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website