9 ஓட்டங்களில் தோல்வியை தழுவியது இந்திய அணி!!முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

October 7, 2022 at 7:06 am
pc

மழையின் குறுக்கிட்டால் 40 ஓவர் ஆட்டமாக முதல் ஒருநாள் போட்டி குறைக்கப்பட்டது.

9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இன்று லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஶ்ரீ அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது.

மழையின் காரணமாக 40 ஓவர் போட்டியாக மாற்றப்பட்ட ஆட்டத்தின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்கள் குவித்தது. தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக கிளாசென் 74 ஓட்டங்களும், மில்லர் 75 ஓட்டங்களும் ஆட்டமிழக்காமல் குவித்து இருந்தனர்.

இதையடுத்து 250 ஓட்டங்கள் என்ற இலக்குடன் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற 5வது விக்கெட்டுக்கு ஒன்று சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி சீரான ஓட்டங்களை குவிக்க தொடங்கினர்.

ஸ்ரேயாஸ் ஐயர் 50 ஓட்டங்களில் தனது விக்கெட்டை இழக்க, சஞ்சு சாம்சன் மட்டும் ஒரு புறம் தனது பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி கொண்டு வந்தார்.

இருப்பினும் மறுபுறம் உள்ள வீரர்கள் யாரும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதை அடுத்து இந்திய அணியால் 40 ஓவர்கள் முடிவில் 240 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன்மூலம் இந்திய அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் தேர்வு செய்யப்பட்டார்.  

இதனை தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி அக்டோபர் 9ம் திகதி ஞாயிற்றுக் கிழமை ராஞ்சி மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website