சேலம்

வளர்ப்பு நாய்க்கு கோலாகல வளைகாப்பு –பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கி அசத்திய ...

Quick Share

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செல்லப்பிராணிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

மேட்டூரை அடுத்த மேச்சேரி இந்திரா நகரை சேர்ந்த நடராஜன், அவரது மனைவி சுசீலா ஆகிய இருவரும் புகைப்படக் கலைஞர்கள் ஆவர். கடந்த 20 மாதங்களாக ஹைடி என்ற ஆண் பொமேரியன் நாயும், சாரா என்ற பெண் பொமேரியன் நாயும் வளர்த்து வருகின்றனர். 

இந்த நிலையில் சாரா கர்ப்பமடைந்ததால் வளைகாப்பு நடத்த முடிவு செய்து பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு வழங்கி வளைகாப்பு நடத்தப்பட்டது.

அப்போது 2 நாய்களையும் தனித்தனி சேர்களில் அமர வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து சாராவிற்கு வளையல்கள் மாட்டப்பட்டன. 

வளைகாப்புக்கு வந்த அனைவருக்கும் இனிப்பு, காரம் உள்ளிட்ட அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. மேலும் செல்லப்பிராணி சாராவுக்கு வளையல் மாட்டிய 30 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, தட்டு, கண்ணாடி, சீப்பு, தாலிக்கயிறு,மஞ்சள்-குங்குமம் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் செல்லப்பிராணிகளுக்கு வளைகாப்பு நடத்த வேண்டும் என்ற தனது பிள்ளைகளின் ஆசையை, பெற்றோர் நிறைவேற்றி இருக்கின்றனர்

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கும் சாகும் வரை சிறை !

Quick Share

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ். இவா் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் தண்டவாளம் பகுதியில், தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந் தாா். அவர் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கில் சங்ககிரியைச் சோ்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 16 பேர் கைதானார்கள். அமுதரசு என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்தார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கின் விசாரணை நாமக்கல் மாவட்ட கோர்ட்டில் தொடங்கி, சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அப்போது சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததாகவும், பிறழ்சாட்சிகளாக மாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மதுரைக்கு மாற்றம்

எனவே இந்த வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோகுல்ராஜின் தாயார் சித்ரா, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது கோரிக்கையை ஏற்று, கோகுல்ராஜ் கொலை வழக்கை மதுரை மாவட்ட வன்கொடுமை வழக்குகளுக்கான சிறப்பு கூடுதல் செசன்சு கோர்ட்டுக்கு மாற்றி கடந்த 2019-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி இந்த வழக்கு மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜோதிமணி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இதனால் யுவராஜ் உள்பட 15 பேர் விசாரணையின்போது ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை கோர்ட்டு ஒத்திவைத்திருந்தது.

அதிகபட்ச தண்டனை

இந்நிலையில் கடந்த 5-ந்தேதி, இந்த வழக்கில் கைதானவர்களில் 10 பேர் குற்றவாளிகள் என்றும், 5 பேர் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்றும் நீதிபதி சம்பத்குமாா் தீர்ப்பளித்தார். 10 பேருக்கான தண்டனை விவரம் 8-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் அறிவித்து இருந்தார்.

எனவே தண்டனை விவரத்தை எதிர்பார்த்து, நேற்று காலையில் இருந்தே ஏராளமானோர் திரண்டதால் கோர்ட்டு வளாகம் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த வழக்கின் குற்றவாளிகள் 10 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

சாகும் வரை சிறை தண்டனை

பின்னர் மாலை 3.30 மணியளவில், தீர்ப்பில் கூறிய தண்டனை விவரத்தை நீதிபதி வாசித்தார்.

அதன் விவரம் வருமாறு:-

வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜுக்கு 3 ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது.

அருண்குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், சந்திரசேகரனுக்கு (51) ஒரு ஆயுள்தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகிய இருவருக்கு மட்டும் ஆயுள்தண்டனையுடன் 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்கது

இந்த தீர்ப்பு குறித்து அரசு வக்கீல் மோகன் கூறியதாவது:-

கோகுல்ராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் திட்டமிட்டு அவரை கொடூரமாக கொலை செய்து உள்ளனர். கோகுல்ராஜ் 9 மணி நேரம் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ளார். கொலை, வன்கொடுமை, கூட்டுச்சதி, ஆள்கடத்தல் ஆகிய பிரிவுகளின்கீழ் 10 பேருக்கு சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதி கேட்டுகண்ணகி போராடிய மதுரையில், பட்டியல் இன வாலிபர் கொலையுண்டதற்கும் உரிய நீதி கிடைத்து இருப்பது வரவேற்கத்தக்கது. விடுதலை செய்யப்பட்ட 5 பேருக்கும் தண்டனை கிடைக்கும் வகையில் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தற்கொலை செய்து கொண்ட பெண் டி.எஸ்.பி.

கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை அதிகாரியாக போலீஸ் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில், திடீரென அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணையின் திசையை மாற்றும் நோக்கத்தில் அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகத்தான் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

தூக்குதண்டனையை எதிர்பார்த்தேன்

கோகுல்ராஜ் தாயார் சித்ரா கூறியதாவது:-

எனது மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடூரம் வேறு யாருக்கும் நடக்கக்கூடாது. எனது மகனை கொன்றவர்களுக்கு அதிகபட்சமாக தூக்குதண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன். இருந்தபோதும் தற்போது அளிக்கப்பட்ட தண்டனையே கொடூரமானதுதான். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, இந்த தண்டனை ஒரு பாடமாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோகுல் ராஜ் ஆணவக் கொலை வழக்கில் 11- பேர் குற்றவாளிகள்- நீதிமன்றம் உத்தரவு

Quick Share

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகில் ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டுக் கிடந்தார்.

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த சுவாதி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த மாணவியைக் காதலித்ததால், சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 11 பேர்  மீது,  திட்டமிட்டு ஆணவக்கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் போட்டுவிட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் 2 பேர் இறந்த நிலையில், ஏனைய 15 பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. 
 வழக்கின் ஆரம்பக்கட்ட விசாரணை நாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. பின்னர் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. 
இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான  தண்டனை விவரம் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரசாரம்

Quick Share

உதயநிதி ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாவட்டங்களில் பிரசாரம் செய்து வருகிறார். 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று (புதன்கிழமை) சேலத்தில் பிரசாரம் செய்கிறார். அவர் காலை 10.30 மணிக்கு சேலம் தாதகாபட்டி கேட் மைதானத்திலும், 11 மணிக்கு சேலம் கோட்டை மைதானத்திலும் பிரசாரம் செய்ய உள்ளார். 

இதில் வேட்பாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த கொடூரம் …பரபரப்பு வாக்கு மூலம்

Quick Share

அன்னதானப்பட்டி,
சேலம் தாதகாப்பட்டி கேட் அருகே மூணாங்கரடு கொத்தடிமை காலனியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் ஜீவா (வயது 29). தச்சு தொழிலாளி. இவருக்கு கவிதா (25) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜீவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

கடந்த 16-ந் தேதி ஜீவா அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இந்தநிலையில் இரவில் வீட்டில் அவர் மர்மமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து கவிதா அளித்த தகவலின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கவிதா, மதுபோதையில் இருந்த ஜீவா, கீழே தவறி விழுந்து இறந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஜீவா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் தவறி விழுந்து இறந்ததாக வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே ஜீவாவின் பிரேத பரிசோதனை குறித்த அறிக்கை அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. அதில் ஜீவாவின் முகம், வாய், கழுத்து பகுதியில் காயங்கள் உள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா கொலை வழக்காக மாற்றி விசாரித்தார். அப்போது போலீசாருக்கு கவிதா மற்றும் ஜீவாவின் நண்பரான ராஜா (39) ஆகியோர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
கவிதா, ராஜா ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஜீவாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து அவர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
ராஜாவின் சொந்த ஊர் கொண்டலாம்பட்டியை அடுத்த பூலாவரி ஆகும். சரக்கு ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஆண்டு ஜீவாவின் அக்காள் கணவர் பூலாவரியில் இறந்து விட்டார். இந்த துக்க நிகழ்வுக்கு சென்றபோது, ஜீவாவுக்கும், ராஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து ராஜா அடிக்கடி ஜீவா வீட்டுக்கு சென்று வந்தார். அங்கு ராஜாவுக்கு, கவிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் தங்களது செல்போன் எண்ணை பரிமாறி அடிக்கடி பேசி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஜீவா வீட்டில் இல்லாதபோது கவிதா, ராஜா உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ராஜா தனது கள்ளக்காதலை வளர்ப்பதற்காக சேலம் தாதகாப்பட்டி சண்முக நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு தனியாக வசித்து வந்தார்.

அந்த வீட்டில் அவர்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனால் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராஜா, தனது கள்ளக்காதலி கவிதா மற்றும் அவருடைய குழந்தைகளுடன் போட்டோ எடுத்து அதனை வாடகை வீட்டில் மாட்டி வைத்திருந்தார். இதனிடையே இவர்களின் கள்ளக்காதல் குறித்து அறிந்த ராஜாவின் மனைவி, அவரை பிரிந்து குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் இந்த கள்ளக்காதல் குறித்து ஜீவாவுக்கு தெரியவந்தது. அவர் கவிதா, ராஜாவை கண்டித்தார். இதனால் ஜீவாவை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். இதனிடையே தான் கடந்த 16-ந் தேதி இரவு வீட்டுக்கு அளவுக்கதிகமான மதுபோதையில் ஜீவா வந்தார். அப்போது அங்கு கவிதாவும், ராஜாவும் உல்லாசமாக இருந்தனர். இதைப்பார்த்த ஜீவா, அவர்கள் 2 பேரையும் சத்தம்போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜீவாவின் வாய், மூக்கை துணியால் அமுக்கினர். மேலும் மற்றொரு துணியால் அவருடைய கழுத்தை நெரித்தனர். இதில் மூச்சுத்திணறி ஜீவா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். உறவினர்கள், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வராமல் இருக்க அவர் தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கவிதா, ராஜாவை போலீசார் கைது செய்தனர். சேலத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தச்சு தொழிலாளியை கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“புற்றுநோயால் அவதிப்பட்ட 16 வயது சிறுவன்” தந்தையே விஷ ஊசி போட்டு கொன்றதாக ப...

Quick Share

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியில் உள்ள கட்சிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுநரான பெரியசாமிக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் வண்ண தமிழ், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளான். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த போது புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

அதன்பின் சிறுவனை வீட்டுக்கு அழைத்து வந்து சிகிச்சையை தொடர்ந்துள்ளனர். கடந்த சில தினங்களாக சரிவர சாப்பிடாமல் அவதிப்பட்ட சிறுவனுக்கு படுக்கையிலேயே இயற்கை உபாதைகள் கழிக்கும் நிலை ஏற்பட்டது.

அதனால் கவலையடைந்த பெரியசாமி, உள்ளூர் மருத்துவ பணியாளர் ஒருவரை அழைத்து வந்து ஊசி போட்டதாக தெரிகிறது. மறுநாள் காலையில் பார்த்த போது சிறுவன் உயிரிழந்த நிலையில் கிடந்தான்.

இதனையறிந்த அப்பகுதி மக்கள், சிறுவனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டதாக பேச தொடங்கினர். அது பற்றிய தகவல் காட்டுத்தீயாய் பரவியதால் கிராம நிர்வாக அலுவலர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சிறுவனின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனின் தந்தை பெரியசாமியை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகனுக்கு வலி நிவாரணி ஊசியை மட்டுமே செலுத்தியதாகவும்,விஷ ஊசி செலுத்தவில்லை எனவும் தந்தை பெரியசாமி தெரிவித்துள்ளார்.




You cannot copy content of this Website