அரசியல்

விஜய் கிறிஸ்தவன் என்பதால் நெற்றியில் இருந்த செந்தூர பொட்டை அழித்தாரா… விளக்கம் க...

Quick Share

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் தனது சமூக வலைதள புகைப்படத்தை மாற்றியுள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார். இதையடுத்து, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒக்டோபர் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் இடம்பெற்றிருந்த விஜயின் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக, விஜய் நெற்றியில் செந்தூர பொட்டு வைத்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. தற்போது, விஜய் பொட்டு இல்லாமல் கைகளை கும்பிட்டபடி புதிய புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல அறிக்கை வெளியாகும் தாளிலும் புகைப்படம் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது, பொட்டு வைத்தபடி புகைப்படம் வைத்திருந்தால் ஒரு சில கட்சியினர் தனக்கு சாதமாக பயன்படுத்துகிறார்கள் என்றும், சர்ச்சைக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று கட்சி நிர்வாகிகள் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

‘இந்த வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் பழனிசாமி’- புகழேந்தி எச்...

Quick Share

‘யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என எடப்பாடிக்கு சொல்ல தகுதி இல்லை’ என புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த புகழேந்தி பேசுகையில், ”யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளர் தான்.

நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். நீதிமன்றத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் என எழுதிக் கொடுத்து வந்து விட்டீர்கள். ஆனால் இப்பொழுது நீங்கள் யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று சொல்கிறீர்கள். அதைச் சொல்ல வேண்டியது சிவில் நீதிமன்றம். நீங்கள் திரும்பத் திரும்ப தவறு செய்கிறீர்கள். உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. இதில் முடிவு எடுக்க வேண்டியது சிவில் நீதிமன்றம் தான்.

ஒரே அக்கிரமம் அநியாயமாக இருக்கிறது. உச்சபட்சமாக மேலேபோய் நின்று கொண்டு யாரையும் சேர்த்துக் கொள்ள முடியாது, நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொல்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறீர்கள்; பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது; கட்சி உங்கள் கையில்தான் இருக்கிறது; சின்னம் கூட இருக்கிறது. எல்லாத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். 

எல்லாமே உங்களிடம் இருந்தும் என்ன ஆச்சு. பேரூராட்சியில் ஜீரோ. ஆனால் உங்களிடம் தான் பொதுக்குழு இருக்கிறது. நகராட்சியிலும் ஜீரோ. ஆனால் பொதுக்குழு உங்களிடம் தான் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாக கம்ப்ளீட்டாக ஜீரோ. முதலில் தேனி வந்து கொண்டிருந்தது அதுவும் இப்பொழுது சேர்த்து ஜீரோ ஆகிவிட்டது. ஆனால் கட்சியும் பொதுக்குழுவும் உங்கள் கையில்தான் இருக்கிறது. 

எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்து கொண்டே வெற்றிபெற்ற ஆண்டிப்பட்டி தொகுதியில் சில பூத்துகளில் ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு பதிவாகி இருக்கிறது. இந்த கொடுமையை நீங்கள் எங்குமே பார்த்திருக்க முடியாது. ஆனால் பொதுக்குழு உங்கள் கையில் தான் இருக்கிறது. இப்பொழுது ஒரு பர்சன்டேஜ் ஓட்டு ஜாஸ்தியாக வாங்கிவிட்டேன் என்று சொல்கிறார். காது குத்துற வேலையெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள் பழனிசாமி” என்றார்.

‘மருத்துவக் கழிவுகளை கொட்டினால் குண்டர் சட்டம்’ – ராமதாஸ் வலியுறுத்தல்!

Quick Share

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உருவெடுத்துள்ள சிக்கல்களில் முதன்மையானது மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாதது ஆகும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்படுவது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு இதுவரை தெளிவான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தாதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் உள்ளிட்ட அதன் இணை அமைப்புகளும் போராடி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் உள்ள பர்கூர் சிப்காட்டில் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் மருத்துவ கழிவு-களை மேலாண்மை செய்யும் தனியார் நிறுவனத்தை மூட ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அந்த நிறுவனத்தை மூடுவதற்கு தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மருத்துவக் கழிவுகளை அறிவியல்பூர்வமாக கையாள்வதாகக் கூறி தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்தில் போதிய வசதிகள் இல்லாததால், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து சேகரித்து வரப்படும் மருத்துவக் கழிவுகளை அழிப்பதற்கு பதிலாக நிலத்தில் புதைக்கின்றனர். மனித உடல்களின் பாகங்களைக் கூட பூமியில் புதைப்பது, பாதுகாப்பற்ற முறையில் எரிப்பது போன்ற செயல்களில் அந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதனால், அந்தப் பகுதியில் நிலத்தரி நீர் கடுமையாக மாசு அடைந்துள்ளது. பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் நோய் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த உண்மைகள் அனைத்தும் அரசுக்கு தெரியும் என்றாலும் கூட, சுற்றுச்சூழலை கெடுக்கும் அந்த தனியார் நிறுவனத்தை அகற்றுவதற்கு பதிலாக தமிழக அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வந்த மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்கள் விதிகளை பின்பற்றவில்லை என்று கூறி, மூடப்பட்ட நிலையில், அதே நடவடிக்கையை போச்சம்பள்ளி மருத்துவக் கழிவு மேலாண்மை ஆலை மீது எடுக்க அரசு தயங்குவதன் காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த நிறுவனத்திற்கு அரசின் மறைமுக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் தான் என்று இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் மருத்துவக் கழிவுகள் தான் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, வழியாக கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களிலும் கேரளத்திலிருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் அப்பட்டமாக கொட்டப்படுகின்றன. இரு மாநில எல்லையில் சோதனைச் சாவடிகள் இருந்தாலும் கூட, அவற்றைத் தாண்டி மருத்துவக் கழிவுகள் ஏற்றப்பட்ட சரக்குந்துகள் தமிழ்நாட்டுக்குள் எளிதாக நுழைகின்றன. கேரள மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதைக் கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் கூட, அதனால் எந்த பயனும் ஏற்படுவது இல்லை.

மருத்துவக் கழிவுகள் முறையாக கையாளப்படாததால் பல்வேறு வகையான சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன. மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவது குறித்தும், மருத்துவக்கழிவுகள் முறையாக அழிக்கப் பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயமும் மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அதற்கேற்ற வகையில் சட்டத்திருத்தம் செய்யும்படியும் தமிழக அரசுக்கு ஆணையிட்டுள்ளன.

அத்தகைய சட்டத்தைக் கொண்டு வரத் தயாராக இருப்பதாக நீதிமன்றங்களில் தமிழக அரசு பலமுறை வாக்குறுதி அளித்தும் கூட, இன்று வரை அது சாத்தியமாகவில்லை. கேரளம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் மருத்துவக் கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதையும், தமிழகத்தில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் அடிப்படை வசதிகள் இல்லாத மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களில் அரைகுறையாக கையாளப்பட்டு புதைக்கப்படுவதையும் தடுக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் சுகாதாரக் கேடுகளும், அது சார்ந்த சிக்கல்களும் ஏற்படுவதை தடுக்க முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் போச்சம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் இயங்கி வரும் மருத்துவக் கழிவு மேலாண்மை நிலையங்களை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவோரையும், முறையாக கையாளத் தவறுபவர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்குத் தேவையான சட்டத் திருத்தத்தை விரைவில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

திருப்பதி லட்டு விவகாரத்தில் சீமான் கருத்து!

Quick Share

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதனால் சந்திரபாபு நாயுடு தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டமானது மங்களகிரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்த ஆட்சியில் திருப்பதியின் புனிதத்தை கெடுத்து விட்டனர் என்றார்.

அதாவது, கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின் போது திருப்பதி லட்டு பிரசாதம் தயார் செய்வதற்கு விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “திருப்பதி லட்டு தயாரித்த நிறுவனத்தை தான் கேட்க வேண்டும். நாட்டில் எவ்வளவோ பிரச்னை இருக்கிறது.

அதை சாப்பிட்டவர்கள் எல்லோரும் உயிரோடு தான் இருக்கிறார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை, இனிமேல் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறலாம்.

முன்பு ஒப்பந்தம் கொடுத்தவருக்கு அதனை நீக்கிவிட்டு வேறு வேலையை பார்க்கலாம். ஆட்சியில் இருப்பவர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினையே இங்கு ஏராளமாக உள்ளது.

அதை பற்றி பேச ஏன் மறுக்கிறீர்கள். திருப்பதி லட்டு அப்படி தயாரிக்க கூடாது என்றால் தயாரித்தவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.

மக்கள் நீதி மய்ய கட்சி பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்!

Quick Share

நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில், நடிகர் கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டம் இன்று தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கு பிறகு இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் மற்றும் சினேகன், நடிகை ஸ்ரீபிரியா, சிறப்பு அழைப்பாளர்கள் என்று மொத்தம் 2750 பேர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழுவில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

1. நடிகர் கமல் ஹாசனை மீண்டும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவராக வாய்மொழியாக தெரிவு செய்து தீர்மானம்.

2. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்

3. வருகின்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு பூத்திற்கு குறைந்தது 5 பேரை நியமிக்க வேண்டும்

4. மக்கள் நீதி மய்ய கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டி தீர்மானம்

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மேலும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கூட்டம் முடிந்த பிறகு கமல் ஹாசன் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது’ – ராகுல் ஆவேசம்!

Quick Share

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அண்மையில் அமெரிக்கா சென்று இருந்தார். அப்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தியிருந்தார். அதில் மதச் சுதந்திரம் தொடர்பான கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கக்கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

ராகுல் காந்தியின் பேச்சு இந்தியாவில் சர்ச்சையையும், பேசுபொருளாகவும் ஆகியது. ராகுல்காந்தி இந்தியாவின் ஒற்றுமை மற்றும் சீக்கிய உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்தியாவில் சீக்கியர்களுக்கு மதச்சுதந்திரம் இல்லை என்பதைபோன்ற தோற்றத்தை அந்நிய மண்ணில் ராகுல்காந்தி ஏற்படுத்த முயன்றுள்ளார் என பாஜகவினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

பாஜக அமைச்சர்கள் சிலர் ஒரு படி மேலாக சென்று ராகுல் காந்தியை பயங்கரவாதி என்று விமர்சித்தும் கருத்துகளை வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி இந்த சர்ச்சை குறித்து தற்பொழுது மௌனம் களைத்திருக்கிறார், ‘அமெரிக்காவில் நான் பேசிய கருத்து குறித்து பாஜகவினர் பொய்களைப் பரப்பி வருகின்றனர். 

இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஒவ்வொரு சீக்கிய சகோதரர்களையும் பார்த்துக் கேட்கிறேன் நான் கூறியதில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஒவ்வொரு சீக்கியரும், ஒவ்வொரு இந்தியனும் அச்சமின்றி தங்களுடைய மதத்தை சுதந்திரமாக பின்பற்றும் நாடாக இந்தியா இருக்க வேண்டாமா? என்ற கேள்வி எழுகிறது. வழக்கமாக பாஜக பொய்களை மட்டுமே கையாளுகிறது. 

உண்மையை சகித்துக் கொள்ள முடியாததால் என்னை மௌனமாக்க பாஜக துடிக்கிறது. ஆனால் இந்தியாவை வரையறுக்கும் மதிப்புகளுக்காக நான் எப்பொழுதும் குரல் கொடுப்பேன். வேற்றுமை, சமத்துவம், அன்பு என்பதுதான் நமது ஒற்றுமை’ என தன்னுடைய கருத்தை எக்ஸ் வலைத்தளம் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Quick Share

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 18ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு செப்டம்பர் 25ஆம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 8ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்தத் தேர்தலில் மெகபூபா முப்தியின் காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் புதிதாக ஆரம்பித்த ஜனநாயக முன்னேற்ற ஆசாத் கட்சி, ஆம் ஆத்மி, பகுஜன் சாம்ஜ் உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன. மேலும் காங்கிரஸ் கட்சி, பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, சிபிஎம், பாந்தரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகப் போட்டியிடுகின்றன.

இத்தகைய பரபரப்பான சூழலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 6 ஆம் தேதி (06.09.2024)வெளியிட்டார். அதில், ஒவ்வொரு குடும்பத்தின் தலைவிக்கும் ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் வழங்க ‘மா சம்மன் யோஜனா’ திட்டத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ‘பிரகதி சிக்ஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வழங்குவோம். ஜம்முவில் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும். 

5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளாக, 1 லட்சம் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் சேர்க்கப்படும். குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 11 கிலோ அரிசி வழங்கப்படும். ரூ. 25 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். சுயஉதவிக் குழுக்களில் செயல்படும் பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு (காஷ்மீரில் 16 தொகுதிகள் மற்றும் ஜம்முவில் 8 தொகுதிகளுக்கு) முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (18.09.2024) காலை 7 மணி முதல் தொடங்கியது. இதனையடுத்து வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையாக நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் சுமார் 23 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இதுவாகும்.

இஸ்ரோவின் அடுத்த இலக்கு – ரெட் சிக்னல் கொடுத்த மத்திய அமைச்சரவை!

Quick Share

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தொடர் முயற்சியால் இறுதிக்கட்டத்தை எட்டி, திட்டமிட்டபடி நிலவின் தென் துருவத்தில் 14/09/2023 அன்று இறங்கி சாதனை படைத்தது. இதனால் நிலவில் தென் துருவத்தில் முதன் முதலில் கால் பதித்து சாதித்து காட்டியது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தலைமையில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் ஆராய்ச்சிகளை செய்து வரும் நிலையில் அடுத்தகட்டமாக நிலவிலிருந்து பாறைகள் மற்றும் மண்ணை பூமிக்கு கொண்டு வரும் திட்டமான சந்திரயான்-4 திட்டத்திற்கு தற்பொழுது மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

நிலவிலிருந்து பாறைகள் மற்றும் மண்ணில் பூமிக்கு கொண்டு வரும் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான்-4 திட்டம் கொண்டுவரப்பட்டது. வரும் 2028 ஆண்டுக்குள் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் வெள்ளி கிரகத்தில் ஆய்வு செய்வதற்கும் இஸ்ரோ திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Quick Share

ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்திருந்தது. இந்தக் குழு மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது குறித்து விரைவாக அறிக்கை அளிக்க இக்குழுவிற்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில், ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதில் சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதில் தேர்தல்களை நடத்தும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை எனவும் கூறப்பட்டது. அதே சமயம் இந்த திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம் எனவும் கூறப்பட்டது. அதோடு ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒரே நாடு ஒரே தேர்தலை வரும் 2029ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தலாம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் சட்டமன்றங்களின் ஆயுள் காலத்தை படிப்படியாக மாற்றியமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு உபகரணங்கள், மனிதவளம் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுமாறு குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தின் உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

மேலும், அவர்“ வீனஸ்-வீனஸ் ஆர்பிட்டர் மிஷன் (VOM) பணிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது அறிவியல் ஆய்வு மற்றும் வீனஸ் வளிமண்டலம், புவியியல் மற்றும் அதன் அடர்த்தியான வளிமண்டலத்தில் ஆய்வு செய்து பெரிய அளவிலான அறிவியல் தரவுகளை உருவாக்குதல் இதன் முக்கிய நோக்கம் ஆகும். சந்திரயான்- 4 திட்டம் மேலும் பல கூறுகளைச் சேர்க்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாகச் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்புவது. இதற்கான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. வீனஸ் ஆர்பிட்டர் மிஷன், ககன்யான் ஃபாலோ-ஆன் மற்றும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் மற்றும் அடுத்த தலைமுறை ஏவுதல் வாகன மேம்பாட்டிற்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.

“உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என தெரிந்தது தான்” – சீமான் காட்டம்!

Quick Share

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல் பரவி வருவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதாக தகவல் பரவுவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று அடுத்தடுத்து திமுகவின் தலைவர்கள் ஆவது தான் சனாதனம்.

பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஓட்டுகளை கூட்டணி மூலம் வாங்கி கொண்டு வாரிசுகள் வருவது தான் சனாதனம்.

சமூக நீதி, சனாதன ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். ஆனால், இதனை விட கொடிய சனாதனம் இல்லை.

உதயநிதி துணை முதலமைச்சராவது, பின்னர் முதலமைச்சராவது எல்லாம் தெரிந்த கதை தான். அடுத்ததாக இன்பநிதியை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு: பிரபலத்தின் அறிவிப்பால் சர்ச...

Quick Share

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு என்று எம்.எல்.ஏ ஒருவர் அறிவித்துள்ளார். சமீபத்தில் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு அவர் பேசுகையில், “இந்திய நாடானது அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் நாடாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டை நிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும்.

90 சதவீத மக்களுக்கு வாய்ப்பு வழங்காத நாட்டில் இருக்க எனக்கு விருப்பமில்லை” என்றார். இவரின் பேச்சுக்கு பாஜக கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று சிவசேனா கட்சியின் எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசியுள்ளார். இவரின் பேச்சு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், “மகாராஷ்டிரா மாநிலத்திலும், இந்தியாவிலும் இட ஒதுக்கீடு கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் இட ஒதுக்கீட்டை நிறுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பொய்யான தகவலை பேசிய ராகுல் காந்தி தற்போது இட ஒதுக்கீடு குறித்தும் பேசியுள்ளார்” என்றார்.

‘கலைஞர் பூங்கா’ கட்டண வசூல் விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் விளக்கம்!

Quick Share

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் குறித்து “நுகர்வோர் நலன் மக்கள் விழிப்புணர்ச்சி மற்றும் ஊழல் தடுப்பு இயக்கம் தமிழ்நாடு” புதுக்கோட்டைக் கிளை சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநகராட்சி பொது தகவல் அலுவலர் 11 ந் தேதி கொடுத்துள்ள பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அதாவது, புதுக்கோட்டை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள கலைஞர் பூங்கா கடந்த 24.02.2024 அன்று திறக்கப்பட்டது. தற்போது பொதுமக்களிடம் எவ்வித நுழைவுக்கட்டணமும் வசூலிக்கவில்லை என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் கொடுக்கப்பட்ட பிறகு நுழைவுக்கட்டணம் வசூலை சில நாட்கள் நிறுத்தி உள்ளனர். இந்த ஆர்.டி.ஐ. தகவல்படி நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியானது. இதனால் இத்தனை நாள் யார் வசூல் செய்தது?. அந்தப் பணம் என்ன ஆனது? மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காவில் வெளிநபர்கள் வசூல் செய்தார்களா?. அப்படியானால் அவர்கள் மீது என்ன நடவடிக்கை எனப் பல கேள்விகளைப் பொதுமக்கள் எழுப்பிய நிலையில் பரபரப்பானது.

இந்த நிலையில் இன்று மாநகராட்சி ஆணையர் நாராயணன் வெளியிட்டுள்ள தகவலில், ஆர்.டி.ஐ யில் கேட்கப்பட்ட கேள்விக்கு பொது தகவல் அலுவலர் அல்லாத செயற்பொறியாளர் தவறான தகவலைக் கொடுத்துள்ளார். நகராட்சி தீர்மானத்தின்படி “மு.கருணாகரன் கே இன்ப்ரா” நிறுவனத்திற்கு நுழைவுக்கட்டணம் வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே தவறான தகவலைக் கொடுத்த உதவிப் பொறியாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல் உள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையர் நாராயணன் நம்மிடம், “நகராட்சியாக உள்ள போதே நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிப் பராமரிப்பு பணிகளுக்காக நுழைவுக் கட்டணம் வசூல் செய்ய மு.கருணாகரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்ட அமைப்பினர் கள ஆய்விற்கு மாநகராட்சி வந்து உதவிப் பொறியாளரிடம் பேசிய பிறகு பொதுத் தகவல் அலுவலர் அல்லாத அவர் பூங்காவில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்று தவறான தகவலைக் கொடுத்துள்ளார். அந்த தகவல் வேகமாகப் பரவியுள்ளதால் சில நாட்கள் நுழைவுக்கட்டண வசூலை நிறுத்தி உள்ளனர். தற்போது தவறான தகவல் கொடுத்த உதவிப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 3 நாட்களில் துறை நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதன் பிறகு மேலும் பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர் சமூக ஆர்வலர்கள், பொது ஏல அறிவிப்பு விடாமல் எப்போது எப்படி ஒரு நிறுவனத்திற்கு மொத்த வசூலும் செய்ய ஒப்பந்தம் விடப்பட்டது. நுழைவுக் கட்டணம் மட்டுமின்றி உள்ளே பல இடங்களில் வசூல் பலமான வசூல் நடக்கிறதே அதற்காக மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தைத் தான் வசூல் செய்கிறார்களா? அதற்கான ரசீது வழங்குவதில்லையே ஏன்? இதனை மாநகராட்சி நிர்வாகம் கட்டண விபர விளம்பரப் பலகை வைக்காதது ஏன் என்ற பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.




You cannot copy content of this Website