அதிரடி- இலவச ரேஷன் பொருட்கள், இலவச தடுப்பூசி’ – பிரதமர் மோடி.

June 8, 2021 at 8:45 am
pc

கொரோனாவின் 2-வது அலையால் ஒட்டுமொத்த இந்திய தேசமும் திண்டாடி வருகிறது. முதல் அலையில் இருந்து மெல்ல மீண்டதன் மூலம் பெற்ற சிறிய நம்பிக்கையையும் இந்த 2-வது அலை சீரழித்துவிட்டது. அன்றாடம் நிகழும் பல்லாயிரக்கணக்கான பாதிப்புகளும், மரணங்களும் நூற்றாண்டுகளில் இல்லாத பேரழிவுக்கு சாட்சியாக மாறியிருக்கின்றன.

ஆட்கொல்லியாக உயிர்களை காவு வாங்கி வரும் இந்த தொற்றுக்கு எதிரான மருந்துகள் இல்லாததால் மீண்டும் பொதுமுடக்கமே தீர்வாக மாறியிருக்கிறது. அப்படி தீவிரமாக அமல்படுத்திய ஊரடங்கால் மெல்ல நிலைமை மாறி வருகிறது.

அதேநேரம் கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்றவை மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இப்படி சொல்ல முடியாத துயரத்தில் தள்ளப்பட்டிருக்கும் மக்களை, அதில் இருந்து மீட்டெடுப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளை முடுக்கி விட்டு வருகின்றன.

இதில் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக தடுப்பூசி திட்டத்தை அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. கடந்த ஜனவரி 16-ந் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

இதில் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கும் 3-ம் கட்ட தடுப்பூசி திட்டப்படி, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்துள்ள மத்திய அரசு, தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளும் கொள்முதல் செய்யும் வகையில் திட்டத்தை பரவலாக்கியது.

இதன்படி உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநிலங்களே தடுப்பூசியை கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகின்றன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் நேரடியாக இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் இறங்கின.

ஆனால் இந்த பணிகள் மாநிலங்களுக்கு பெரும் சவாலாக மாறி வருகின்றன. போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கிடைக்காததால், பல மாநிலங்களில் பற்றாக்குறையும் நிலவி வருகிறது.

எனவே மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி மாநிலங்களுக்கு மத்திய அரசே தடுப்பூசியை இலவசமாக வழங்கும் என பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியது முதலே பலமுறை நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வழியாக பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

இதில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அறிவித்து வரும் மோடி, பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கி வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று மாலை 5 மணிக்கு தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில், நவீன உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான விளைவுகளை இந்த மிகப்பெரிய தொற்று ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த கொடிய கொரோனாவின் 2-வது அலைக்கு எதிராக பல முனைகளில் இந்தியா போராடி வருகிறது. இந்த போரில் நாடு மிகுந்த வேதனையை சந்தித்துள்ளது. மக்களில் பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த பெருந்தொற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1¼ ஆண்டுகளில் ஒரு புதிய சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.

2-வது அலையில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாட்டில் கற்பனைக்கு எட்டாத வகையில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்தது. இந்திய வரலாற்றில் இப்படி அதிக தேவை ஒருபோதும் ஏற்பட்டது இல்லை.

எனவே இதை எதிர்கொள்வதற்காக போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அரசின் ஒட்டுமொத்த எந்திரமும் இதில் ஈடுபட்டது. ஆக்சிஜன் ரெயில்கள் மற்றும் கடற்படை, விமானப்படை போன்ற பாதுகாப்பு நிறுவனங்களும் பயன்படுத்தப்பட்டன.

அரசின் நடவடிக்கைகளால் குறுகிய காலத்திலேயே மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி 10 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டது. இதைப்போல அத்தியாவசிய மருந்துகளின் உற்பத்தியும் முடுக்கி விடப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பொறுத்தவரை, உலகளாவிய தேவையை ஒப்பிடுகையில் அதை தயாரிக்கும் நாடுகள் மற்றும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்த குறைவான எண்ணிக்கையிலும் 2 தடுப்பூசிகளை மிகவும் குறைந்த காலத்தில் தயாரித்து இந்தியா தனது திறனை நிரூபித்தது.

அவை தற்போதுவரை 23 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் மக்களுக்கு போடப்பட்டு இருக்கின்றன.

வைரசை தடுக்கும் கவசமாக தடுப்பூசிகள் இருக்கும் நிலையில் அவற்றை இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. அதைப்போல வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் வருகிற நாட்களில் தடுப்பூசி வினியோகம் மேலும் அதிகரிக்கும்.

இதைத்தவிர மேலும் பல தடுப்பூசிகள் உற்பத்தியின் பல்வேறு கட்டங்களில் இருக்கின்றன. இன்று நாடு முழுவதும் 7 நிறுவனங்கள் பல்வேறு தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. மேலும் 3 தடுப்பூசிகளின் சோதனைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.

இதைப்போல மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசி (ஸ்பிரே) ஒன்றுக்கான ஆய்வுகளும் தொடர்ந்து வருகிறது. அது வெற்றியடைந்தால், இந்தியாவின் தடுப்பூசி திட்டத்துக்கு மிகுந்த உந்துதலாக இருக்கும்.

குழந்தைகளும் இந்த வைரசால் பாதிக்கப்படக்கூடும் என சமீபத்தில் நிபுணர்கள் கூறியிருப்பதை தொடர்ந்து, அது தொடர்பாகவும் 2 தடுப்பூசிகளின் பரிசோதனைகள் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 1-ந் தேதி முதல் தடுப்பூசி திட்டத்தை பரவலாக்கியிருக்கிறோம். ஆனால் இந்த திட்டத்தை கைவிட்டு முந்தைய மையப்படுத்தப்பட்ட திட்டத்துக்கே திரும்புமாறு, அதாவது மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்குமாறு பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

முதல்-மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களின் இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது.

அதன்படி மாநிலங்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசியை வினியோகிக்க முடிவு செய்துள்ளோம். அந்தவகையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக வருகிற 21-ந் தேதி முதல் மத்திய அரசே மாநிலங்களுக்கு தடுப்பூசி வழங்கும்.

அதாவது தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மாநிலங்களுக்காக ஒதுக்கியிருக்கும் 25 சதவீதத்தையும் சேர்த்து 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசே கொள்முதல் செய்து, அவற்றை இலவசமாக மாநிலங்களுக்கு வழங்கும்.

எனவே தடுப்பூசிக்காக இனி மாநிலங்கள் எந்த நிதியும் செலவிட வேண்டாம்.

அதேநேரம் மீதமுள்ள உற்பத்தியாளர்களிடம் இருந்து 25 சதவீதத்தை தனியார் ஆஸ்பத்திரிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம். அவற்றை மக்களுக்கு போடுவதற்கு தடுப்பூசியின் நிர்ணயிக்கப்பட்ட விலையுடன், சேவை கட்டணமாக அதிகபட்சமாச ரூ.150 மட்டுமே வசூலிக்க வேண்டும்.

தடுப்பூசி குறித்த வதந்திகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தடுப்பூசிகளின் பலன்கள் குறித்து இளைஞர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளால், கொரோனா முடிவுக்கு வந்திருப்பதாக மக்கள் கருதக்கூடாது. இந்த போரில் வெற்றி பெறுவதற்காக நாம் தொடர்ந்து கொரோனா நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதுதான் கண்ணுக்குத்தெரியா மற்றும் அடிக்கடி உருமாறி வரும் இந்த தொற்றுக்கு எதிரான முக்கியமான ஆயுதம் ஆகும்.

கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியபோது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 80 கோடி மக்களுக்கு 8 மாதங்களாக இலவச ரேஷன் வழங்கப்பட்டது. பின்னர் 2-வது அலை காரணமாக இந்த திட்டம் மே மற்றும் ஜூன் மாதங்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.

தற்போது இந்த திட்டத்தை தீபாவளி வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்தவகையில் நவம்பர் வரை ஒவ்வொரு மாதமும் 80 கோடி மக்கள் இந்த இலவச உணவு தானியங்களை பெறலாம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website