சீரழித்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்பும் சிறுமி: மறுத்த நீதிமன்றம்!

August 4, 2021 at 7:44 am
pc

கேரளாவில் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாதிரியாரை மணக்க 20 வயது பெண் விரும்பிய நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளாவின் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு 15 வயது சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். பின் இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ராபின் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமி வளர்ந்து தற்போது 20 வயது இளம்பெண்ணாகி விட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ராபின் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு தனக்கு ஜாமின் வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியாருக்கு ஜாமின் வழங்கக்கோரியும் அவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மஹேஷ்வரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவில் எங்களால் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website