இரவில் நல்லா தூங்கணுமா -அப்போ இந்த உணவு எல்லாம் சாப்பிடுங்க.

வாரத்தின் பெரும்பாலான நாட்களில் இரவு உணவு என்றால் உடனே ஃபாஸ்ட் புட் கடைகளில் கிடைக்கும் எண்ணெய்யில் பொறிக்கப்பட்ட ஃபிரைடு ரைஸ், சில்லி சிக்கன், நூடுல்ஸ் போன்றவை என இன்றைய வழக்கம் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஃபாஸ்ட் புட் ஒருபக்கமும், மறுபுறம் பீட்ஸா, பர்கர் போன்ற கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை மக்கள் அதிகம் சாப்பிடுகின்றனர்.
உணவு விஷயத்தில் எல்லாத் தப்பையும் செய்து விட்டுப் பின் உறக்கம் வரவில்லை எனக் கண்ட கண்ட மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இரவில் நாம் எவ்வித உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்பதற்கும், நிம்மதியான உறக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. இரவு நேரத்தில் வயிறு மந்தமாக இருக்கும்வகையில் அதிகமாகச் சாப்பிட்டாலும், நேரம்கெட்ட நேரத்தில் பசி எடுக்கும்வகையில் குறைவாகச் சாப்பிட்டாலும் சிக்கல் தான்.
இரவில் எந்த மாதிரியான உணவுகளைச் சாப்பிடலாம் என்பதை இங்குப் பார்ப்போம்…
இரவில் பசி ஏற்படும் போது ஒரு கப் தயிர் சாப்பிடலாம். தயிரில் இருக்கும் டிரிப்டோபேன் வயிற்றில் ஏற்படும் பசியைப் போக்கி, வயிறு நிறைந்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
உடம்புக்கு ஆரோக்கியத்தைத் தரும் பழ வகைகளான ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை போன்ற பழங்களை ஒன்றாகக் கலந்து பழக்கலவை (சாலட்) தயாரித்து ஒரு கப் அளவு சாப்பிடலாம். இதனால் நல்ல உறக்கம் ஏற்படும். மேலும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். கேரட் மற்றும் வெள்ளரிக்காயை நறுக்கி, இரண்டையும் பழக்கலவை ஆக்கி, சாப்பிடலாம்.
இது எளிதில் செரிமானம் ஆகும். வயிறும் நிறைந்து இருக்கும்.மீன்களில் கொழுப்புகள் இல்லை. அதேநேரம், அதிக அளவு புரதம் மற்றும் தாது சத்துகள் உள்ளன.
எனவே மீன் வகைகளை இரவு நேரத்தில் பசி ஏற்பட்டபின் சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும், நல்ல உறக்கத்தைத் தரும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுப்பொருட்களான, கார்ன் மற்றும் ஓட்ஸை ஒரு கப் எடுத்துப் பாலில் கலந்து, சர்க்கரை சேர்த்துக் கொள்ளாமல் சாப்பிடலாம். இதனால் இரவில் அகால நேரத்தில் பசி ஏற்படாமல், நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியும்.