சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-வை எதிர்த்து அறவழியில் போராடியவர்களை போலீஸ் தாக்கியதற்கு சீமான் கடும் கண்டனம் !

February 21, 2020 at 7:43 pm
pc

குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது அரசப்பயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று வண்ணாரப்பேட்டையில் CAA எதிராக போராடியவர்களை போலீஸ் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன. இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கையை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் வெடித்தன. மேலும் போலீஸின் இந்த நடவடிக்கையை கண்டித்து அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நாம் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தங்களது உரிமைக்காக அறவழியில் போராடுவதும், அரசின் சட்டங்கள் குறித்து மாற்றுக் கருத்துத்தெரிவிப்பதும் அடிப்படை சனநாயக உரிமை. அதனையே மறுத்து அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பதும், எதிர்ப்போரைத் தாக்குவதும், சிறைப்படுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது. குடியுரிமைச் சட்டத்திருத்தம் எனும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை எதிர்த்துப் போராட வேண்டியதும், அதற்கெதிராகக் குரலெழுப்ப வேண்டியதும் இந்நாட்டு குடிமக்கள் ஒவ்வொருவரின் தார்மீகக்கடமையாகும். அந்தவகையில் நாட்டின் மீது பற்றுக்கொண்டு, மதச்சார்பின்மையைக் காக்க அறவழியில் போராடியவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது ஏற்கவே முடியாத பாசிசம்; அரசப்பயங்கரவாதம்.

குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது தாக்குதல் தொடுத்திட்ட காவல்துறையினர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், போராடுவோர் மீதான அடக்குமுறைகள் கைவிடப்பட்டு, அறவழியில் போராடுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *