‘அமேசான் பிரைம்’ நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிப்போம் எச்சரித்த சீமான்!

June 6, 2021 at 7:25 pm
pc

‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிடில் அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் தமிழர்கள் புறக்கணிப்போம் என அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

சமீபத்தில் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரின் டிரைலர் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இத்தகைய இணையத்தொடருக்கு தமிழக அரசு தனது கண்டனத்தைப் பதிவுசெய்து.

மேலும் இந்த தொடரை தடைசெய்யக் கோரி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இருப்பினும், திட்டமிட்டபடி ஜூன் 4ம் திகதி ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் அமேசான் ஃபிரைமில் வெளியானது.

இந்நிலையில், தமிழர்களுக்கெதிரான, ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரைத் தடைசெய்யச் சட்டரீதியாகவும், சனநாயகப்பூர்வமாகவும் களமிறங்கி, அதனைத் தடுத்து நிறுத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்போது அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

சீமான் அனுப்பிய கடிதத்தின் முக்கிய அம்சங்கள், உலகமெங்கும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த ஜூன் 04, 2021 அன்று உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில், ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடர் வெளியாகி, தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழர்களையும், தமிழர்களின் வீரம்செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக இழிவாகச் சித்தரித்து அதனைத் தவறாகக் காட்சிப்படுத்தியிருக்கும், ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

அவ்வாறு செய்யத்தவறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து, அமேசான் பிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் எல்லாச் சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்துப் பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன் என சீமான் கடிதம் அனுப்பியுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website