இனி எங்கவேணாலும் போலாம் -முழுமையான விமான சேவைக்கு அனுமதி!

February 20, 2021 at 7:08 am
pc

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த விமான சேவை கடந்த ஆண்டு மே மாதம் 25-ந் தேதி முதல் தளர்வு செய்து உள்நாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டது. பன்னாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தாலும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து குறைந்த அளவு விமான சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தமிழக அரசின் தளர்வுகளால் படிப்படியாக அதிகரித்து தற்போது நாள் ஒன்றுக்கு 125 விமானங்கள் புறப்படும், 125 விமானங்கள் வருகையும் என 250 விமான சேவைகள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்னதாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு புறப்பாடு விமானங்கள் 196, வருகை விமானங்கள் 196 என 392 விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன.

கட்டுப்பாடுகள் தளர்வு

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து ஊரடங்கும் பெருமளவு தளா்த்தப்பட்டு உள்ளதால் உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து உள்ளன. ஆனால் அதற்கு ஏற்ற வகையில் உள்நாட்டு விமான சேவைகளை விமான நிலைய நிா்வாகம் அதிகரிக்க முடியவில்லை. தமிழக அரசின் கட்டுப்பாடுகள்தான் இதற்கு காரணமாக இருந்தது.

இந்தநிலையில் கூடுதல் உள்நாட்டு விமான சேவைகளை இயக்க அனுமதிக்கும்படி தமிழக அரசிடம் சென்னை விமான நிலைய இயக்குனா் கோரிக்கை வைத்தாா். மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று தமிழக அரசின் தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன், சென்னை உள்பட தமிழகத்தில் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை முழுமையாக தளா்த்தி உத்தரவிட்டு உள்ளாா்.

முழுமையான சேவைக்கு அனுமதி

அதன்படி சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இனிமேல் வழக்கம் போல் கட்டுப்பாடு இன்றி உள்நாட்டு விமான சேவைகள் முழுமையாக இயக்கப்பட உள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்பு இயக்கப்பட்ட 392 விமானங்கள் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரிக்காது என்றும், படிப்படியாக அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *
You cannot copy content of this Website