கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை-நீதிமன்றம் உத்தரவு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிர்மலா தேவி வழக்கின் பின்னணி
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலை. பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் மீது கடந்த 2018 -ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
பின்னர், நீதிமன்றத்தில் முருகன், கருப்பசாமி ஆகியோர் ஆஜராகிய நிலையில் நிர்மலா தேவி ஆஜராகாததால் வழக்கின் தீர்ப்பை ஏப்ரல் 29 -ம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
10 ஆண்டுகள் சிறை
பின்னர், ஏப்ரல் 29 -ம் திகதி பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அப்போது, நிர்மலா தேவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என்றும், தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவிக்க தண்டனையை நாளைக்கு (ஏப்.30) ஒத்திவைக்க வேண்டும்” என வாதிட்டார்.
அதன்படி நேற்று தண்டனை விவரத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் அறிவித்தார்.
அவர், நிர்மலா தேவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக சிறை தண்டனை பிறப்பித்து மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்று அறிவித்தார்.
அவர், ஏற்கனவே சிறையில் இருந்த ஆண்டுகளை தவிர்த்து மீதமுள்ள ஆண்டுகளில் சிறையில் இருப்பார் என்று தெரிகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.