புதுக்கோட்டை

சொத்து தகராறில் பயங்கரம்: அண்ணனை காலால் மிதித்து கொன்ற தம்பி!

Quick Share

புதுக்கோட்டை, கீரனூர் அருகே உள்ள ஒடுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவருக்கு நான்கு தம்பிகள் இரண்டு தங்கைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாகப்பிரிவினை செய்யாமல் இருந்துள்ளனர். இதனால் சொத்தை பிரித்து தரச்சொல்லி பழனிச்சாமியின் நான்காவது தம்பி சிவசாமி (52) அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பிடாரியம்மன் கோவில் அருகில் உள்ள வயல்வெளியில் பழனிச்சாமிக்கும் சிவசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது அப்போது தகராறு முற்றி போய் அண்ணன் பழனிச்சாமியை கீழே தள்ளி தலையைத் தரையில் மோதி காலால் மிதித்தும் உள்ளார்.
இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கீரனூர் போலீசார் பழனிச்சாமியை காலால் மிதித்து கொன்ற தம்பி சிவசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மது குடிக்க பணம் தராததால் தாயை தீ வைத்து எரித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை !

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே மருதாந்தலை பகுதியை சேர்ந்த துரைராஜின் மனைவி லீலாவதி (வயது 56). இவரது மகன் சந்தோஷ்குமார்(26). இவர், சிப்காட் பகுதியில் சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறுவயதாக இருக்கும் போதே அவரது தந்தை வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டார். சகோதரி ஒருவர் திருமணமாகி சென்று விட்டார்.இதனால் வீட்டில் தாயும், மகனும் மட்டும் வசித்தனர். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி அன்று சந்தோஷ்குமார் மது குடிக்கவும், அடமானத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை மீட்கவும் பணம் தருமாறு தாய் லீலாவதியிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ்குமார், தாய் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார்.
சம்பவத்தன்று தாய் மீது மண்எண்ணெயை ஊற்றி எரித்த போது, சந்தோஷ்குமாருக்கும் சிறிது காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து அன்னவாசல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி அப்துல்காதர் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் சந்தோஷ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் சந்தோஷ்குமார் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்கும் வேண்டும் எனவும், அதற்கு முன்னதாக தண்டனையை குறைத்து சிறையில் இருந்து விடுவிக்க கூடாது என அரசுக்கு அறிவுறுத்தினார். 
தான் செய்த தவறை எண்ணி வருந்துவதற்காக 3 மாத காலம் அவரை தனிமை சிறையில் அடைக்க வேண்டும். இந்த தண்டனையை ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதியில் இருந்து 20-ந் தேதிக்குள் 5 நாட்கள் அனுபவிக்க வேண்டும். இதனை 18 மாதங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த தீர்ப்பு குறித்து அரசு தரப்பில் ஆஜராகி வாதாடிய வெங்கடேசன் கூறுகையில், ‘‘பொதுவாக ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பது தான். ஆயுள் தண்டனையை 14 ஆண்டுகள் மட்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆயுள் தண்டனை கைதிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்திருந்தால் நன்னடத்தை விதிகள், அரசின் சலுகையின் காரணமாக விடுவிக்கப்படுவது உண்டு. 
இந்த வழக்கை பொறுத்தவரை பெற்ற தாயை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு, அவர் 40 ஆண்டுகள் தண்டனையை அனுபவிக்கும் வரை அதற்கு முன்பாக அரசின் எந்தவொரு அறிவிப்பு சலுகையால் அவர் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் இதனை நீதிபதி குறிப்பிட்டு கூறியிருக்கிறார்’’ என்றார். 
இந்த வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், ஏட்டு தீபா மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பாராட்டினார்.

திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம்? தாய்-தந்தையை வெட்டிக் கொன்ற மகன்

Quick Share

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே தனது பெற்றோரை கொடூரமாக கொலை செய்த  மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விவசாயி
புதுக்கோட்டை மாவட்டம், ஆவூர் அருகே மண்டையூர் பகுதியை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60). விவசாயி. இவரது மனைவி வள்ளி (57). ரெங்கசாமி நாவலிங்ககாடு பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வீடு கட்டி அங்கேயே குடியிருந்து வந்தார். அவருக்கு பாலசுந்தர் (24), கோபி (22) என 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.  கோபி என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பாலசுந்தர் கேட்டரிங் படித்துள்ளார்.

இந்நிலையில் பாலசுந்தர் கடந்த 2 ஆண்டுகளாக வேலைக்கு எங்கும் போகாமல் மனநலம் பாதிக்கப்பட்டது போல பிரமை பிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளார். மேலும் அவரது தாய் தந்தையிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். 
மனநல பாதிப்பு
இதைப்பார்த்த அருகில் உள்ளவர்கள் பாலசுந்தரை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் தனது மகனை மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள சிலர் ரெங்கசாமியிடம் சென்று உனது மகனுக்கு முனி பிடித்துள்ளது பூசாரியை வரவழைத்து அதை விரட்டி விடலாம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய ரெங்கசாமி நேற்று உடுக்கை அடிக்கும் பூசாரியை தொடர்பு கொண்டு வீட்டிற்க்கு அழைத்துள்ளார்.
இந்த தகவல் பாலசுந்தருக்கு தெரியவந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ரெங்கசாமி அவரது வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பாலசுந்தர் வீட்டிற்க்கு வருமாறு தனது தந்தை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
கொடூர கொலை 
இதையடுத்து வழக்கம்போல் மாலை 5.45 மணியளவில் ரெங்கசாமியின் வீட்டில் பால் கறந்து செல்லும் பால்காரர் வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் உட்கார்ந்திருந்த பாலசுந்தரிடம் பால் கறக்க வேண்டும் உன்னுடைய அப்பா, அம்மா எங்கே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததை தொடர்ந்து பால்காரர் அவர்களது வீட்டை ஒட்டிய தாழ்வாரத்தில் அமைக்கப்பட்டிருந்த சமையலறைக்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ரெங்கசாமி மற்றும் அவரது மனைவி வள்ளி ஆகிய இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
போலீஸ் விசாரணை 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பால்காரர் அருகில் உள்ளவர்களிடம் இதுகுறித்து கூறியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன், கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பிரமணியன் ஆகியோர் மண்டையூருக்கு சென்று  தம்பதியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 
தொடர்ந்து அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று மீண்டும் நடந்து வீட்டிற்கு வந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து தம்பதியினர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
ஒப்புதல்
மேலும் பாலசுந்தர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும், தனது பெற்றோரிடம் அடிக்கடி திருமணம் செய்து வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பாலுவை அழைத்து விசாரணை மேற்கொண்டபோது தனது தாய் தந்தையரை கொடூரமாக கழுத்தை அறுத்தும் அடித்தும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். 
மேலும் திருமணம் செய்து வைக்காததால் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.மகனே தனது தாய்-தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவி பிரிந்து சென்றதால் கணவன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பாப்பன்மனையை சேர்ந்தவர் இளமுருகன் (வயது 36). இவருக்கும், வடகாடு பகுதியை சேர்ந்த ராதா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன், மனைவி  இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனைவி ராதா கோபித்து கொண்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இளமுருகன் மனைவி ராதாவை சேர்ந்து வாழ் அழைத்துள்ளார். ஆனால் அவர் வரவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்வில் விரக்தி அடைந்த இளமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று  இளமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து வடகாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்த மாணவர்கள் !

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 240 மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியையான ஜெனிட்டா கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

4-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வரும் இவர் சக ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுடன் அன்புடன் பழகி வந்துள்ளார். இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் விரும்பும் ஆசிரியையாக ஜெனிட்டா திகழ்ந்து வந்துள்ளார்.பிரிவு உபசார விழாஇந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பணியிடை மாறுதல் கலந்தாய்வில் ஆசிரியை ஜெனிட்டா பதவி உயர்வுடன், புதுக்கோட்டை ஆலத்தூர் அரசு நடுநிலைப்பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி,  மலைக்குடிபட்டி அரசு பள்ளியில் ஆசிரியை ஜெனிட்டாவுக்கு பிரிவு உபசார விழா நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கலந்து கொண்டு ஆசிரியை ஜெனிட்டாவை, கட்டியணைத்து கண்ணீர் மல்க பிரியாவிடை கொடுத்தனர். இந்த காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது.ஆசிரியர் என்றால் கல்வி மட்டுமே கற்றுக் கொடுப்பவர். கண்டிப்புடன் மாணவர்களிடத்தில் நடந்து கொள்பவர் என்ற நிலையில் இருப்பதை மாற்றி மாணவர்களிடம், பெற்றோர்களிடம், சக ஆசிரியர்களிடம் சகோதரத்துவத்தை பாராட்டி இவர் நடந்து கொண்ட விதத்தை எடுத்து காட்டுவதாகவே பிரிவு உபசார விழா அமைந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

Quick Share

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மாநகரில் கடந்த 2 நாட்களாக கன மழை வெளுத்து வாங்குகிறது.

இந்நிலையில் தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் நலன் கருதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

அப்துல் கலாம் ஐயாவின் கனவை நனவாக்கிய ஏழை சிறுமி

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஜெயலட்சுமி (16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, மாணவி ஜெயலட்சுமி காலையில் வீட்டு வேலை முடித்து விட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் மாலை நேரத்தில் கூலி வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இதனிடையே, கொரோனா ஊரடங்கிலும் செலவுகளுக்காக தனது வேலையை தொடர்ந்து செய்து வந்ததாக அவர் கூறியுள்ளார். தற்போது 12-வது படிக்கும் மாணவி ஜெயலட்சுமி நாசா செல்ல தயாராகி வருகிறார்.

அவர் நாசாவுக்கு சென்று வருவதற்கு தேவைப்படும் பணத்திற்கு பலர் உதவியுள்ளதாக கூறப்படுகிறது.

12 வருட கணவன் சம்பாத்தியத்தில் மனைவி அமைத்து கொண்ட கள்ள புருஷன்

Quick Share

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவருக்கும் கடந்த 2008-ஆம் ஆண்டு திருமணம் நடந்து2 குழந்தைகள் உள்ளனர்.

கணவர் சாமி மலேசியாவில் வேலை பார்த்து வருவதால், அவ்வப்போது விடுமுறைக்கு சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வந்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து சென்றுள்ளார். அரசு வேலை கிடைத்ததையடுத்து ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளுடன் கணவர் சாமி புதுக்கோட்டையில் வாடகை வீடு எடுத்து அவர்களை குடியமர்த்தி விட்டு பணி காரணமாக மீண்டும் மலேசியா சென்று விட்டார்.

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தினை மனைவியின் அக்கவுண்ட்டிற்கு மாத, மாதம் சாமி போட்டு வந்துள்ளார். அதன் மூலம் ராஜேஸ்வரி நகைகள் எடுத்து வசதியாக வாழ்ந்து வந்துள்ளார். புதுக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்துவந்த ராஜேஸ்வரிக்கு பதவி உயர்வு கிடைத்து தற்பொழுது குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.

வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கும் புதுக்கோட்டையில் அவர் வீடு அருகே குடியிருந்து வரும் தாஸ் என்ற நபருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இது தெரியாமல் சாமி, சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பிய போது, தாஸ் உடன் அவரது மனைவி சேர்ந்து வாழ்ந்து வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சாமியுடன் அவர் சேர்ந்து வாழ மறுத்துவிட்டார்.இதனால், சாமி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் புகார் கொடுத்துள்ளார்.

12 வருடங்களாக சம்பாதித்த பணம் மற்றும் நகையை அபகரித்து தாஸ் என்பவர் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் என் மனைவி ராஜேஸ்வரி மற்றும் இரு குழந்தைகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். என் மனைவி மற்றும் குழந்தைகளையும் நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கமல் கட்சியில் உள்ள சினேகனுக்கு வந்த சிக்கல்.., கார் மோதியதால் ஏற்பட்ட விபத்து

Quick Share

பிக் பாஸ் சீசன் 1 போட்டியாளராக இருந்தவர் கவிஞர் சினேகன் தற்போது கமல் ஹாசன் கட்சியில் மும்முரமாக கட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சினேகன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் என்ற பகுதியில் காரில் சென்ற போது கார் திடீரென இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அருண்பாண்டியன் என்பவர் மீது மோதியது. இந்த
விபத்தில் அருண் பாண்டியனுக்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்போது பாதிக்கப்பட்டவர் உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தற்போது சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண்பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது காயமடைந்த அருண்பாண்டியன் உயிரிழந்துள்ளதால் சினேகனுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சினேகன் மீது ஏற்கனவே கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
You cannot copy content of this Website