திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே லட்சுமாபுரம் கிராமம் மேற்குதெரு பகுதியில் வசித்துவருபவர் தங்கவேல் (வயது 52). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி. மகன் கோபி (29). ஒரு மகளும் உள்ளார்கள்.”
2012-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போது வாகன விபத்தில் சிக்கிய கோபி, வாய்பேச முடியாமலும், நடக்க முடியாமலும் மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே இருந்து வந்தார்.
பெற்றோர் தான் அவரை பராமரித்து வந்தார்கள். கணவன், மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு
ஏற்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், செல்வராணி கணவரிடம் கோபித்துகொண்டு உறவினர் வீட்டிற்கு போய்விட்டார்.
இதனால் கோபியை, தங்கவேல் மட்டும் பராமரித்து வந்துள்ளார். தினமும் அவர் மது குடித்துவிட்டு வந்ததால் மகனை சரிவர பார்த்து கொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.
மகனை பராமரிக்க முடியாமலும் மிகுந்த மனவேதனையில் இருந்த தங்கவேல், மகனை கொன்றுவிட முடிவு செய்தார். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு மகனை வீட்டின் பின்புறம் உள்ள பயன்பாட்டில் இல்லாத கழிவுநீர் தொட்டிக்கு தூக்கிச்சென்றார். அங்கு சென்றதும் மனதை கல்லாக்கிக்கொண்டு அரிவாளால் மகனின்
கழுத்தை அறுத்துள்ளார்.
மகனை ரத்தவெள்ளத்தில் கழிவுநீர் தொட்டிக்குள் போட்டுள்ளார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோபி பிணமாக மீட்பு பின்னர் வீட்டில் இருந்த பழையதுணிகளை எடுத்து கழிவுநீர் தொட்டிக்குள் போட்டு, கோபியின்
உடலை மூடிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகி விட்டார்.
தங்கவேலுவின் தாயார் தனது பேரனை தேடியபோது வீட்டில் இல்லாததால் அக்கம் பக்கத்தினரிடம்
கேட்டிருக்கிறார். பின்னர் வீட்டின்பின்புறம் சென்று பார்த்தபோது கழிவுநீர் தொட்டியின் மூடிபாதி திறந்த நிலையில் இருந்தது. அருகில் சென்று பார்த்த போது பேரன் கோபியின் கால்கள் வெளியே தெரிந்ததை பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
பேரனின் உடலை பார்த்து கதறி அழுதார். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம் மற்றும் தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய தங்கவேலை மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.