CRIME

வீட்டில் மேல் தூசு தட்டிய முதியவர் கீழே விழுந்து மரணம்!

Quick Share

வீட்டுக்கு மேலே ஏறி நின்று தூசு தட்டிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்ததால் உயிரிழந்துள்ளார். அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த வடிவேலு பரமகுலதேவராசா (வயது 75) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் வீட்டுக்கு மேலே ஏறி தூசி தட்டும் போது கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருமல் மருந்தால் இந்தியாவில் 12 குழந்தைகள் பலி: அதிர்ச்சி தகவல்!

Quick Share

இந்தியாவில் 12 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய இருமல் மருந்தொன்றை, நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு தடை விதித்துள்ளது. இந்தியாவில், 2019க்கும் 2020க்கும் இடையில், குறிப்பிட்ட இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவின் ஜம்மு பகுதியில் அந்த மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்த அந்த 12 குழந்தைகளும், இரண்டு மாதம் முதல் ஆறு வயது வரையிலானவர்கள்.இந்தியாவில் இப்படியென்றால், நான்கு இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்ட Gambia நாட்டுக் குழந்தைகள் 66 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, உலக சுகாதார அமைப்பு அந்த மருந்துகள் தொடர்பில் உலகம் முழுமைக்கும் எச்சரிக்கை விடுத்தது.மேலும், உஸ்பெகிஸ்தான் நாட்டிலும் 2022 வரையிலான காலகட்டத்தில் இந்திய நிறுவனத் தயாரிப்புகளான இருமல் மருந்துகளால் 18 பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.அந்த மருந்துகளில், அளவுக்கதிகமான, டை எத்திலீன் கிளைக்கால் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட எத்திலீன் ஆல்கஹால் என்னும் ரசாயனங்கள் இருந்தது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டது.இத்தனை உயிரிழப்புகளுக்குப் பின், தற்போது, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அந்த மருந்தைக் கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது.மேலும், இந்த குறிப்பிட்ட மருந்தை விற்கும் நிறுவனங்கள், இந்த மருந்தை நான்கு வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடாது என்னும் எச்சரிக்கையை மருந்து போத்தலின் லேபிலில் கட்டாயம் குறிப்பிடவேண்டும் என்றும் நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.பிரச்சினைக்குரிய இருமல் மருந்தில், chlorpheniramine maleate மற்றும் phenylephrin என்னும் மருந்துகளின் கலவை உள்ளது. இவை, இருமல் மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஜலதோஷ மருந்துகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளாகும்.

முல்லைத்தீவில் தாக்கப்பட்ட குடும்பஸ்தர்! – முறைப்பாட்டை பதிவு செய்யாத பொலிஸ்.

Quick Share

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளம் குடும்பஸ்தர் ஒருவர் இரவு வேளை வீதியால் நடந்து சென்றபோது அதே கிராமத்தினை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் காரில் கம்பிகளுடன் வந்து தாக்கிய சம்பவம் இடம்பெற்றிருந்தது.குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குமுழமுனை கிராமத்தினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் வலது கை , வலது காலில் உடைவு ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமைமேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபர் மதுபோதையில் வந்து தாக்கியதாகவும், இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய சென்றும் முறைப்பாட்டினை வைத்தியசாலையிலுள்ள பொலிஸார் மேற்கொள்ளுவார்கள் அத்தோடு அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியிருந்தனர். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவரின் சகோதரன் தெரிவித்திருந்தார்.

6 மாதங்களுக்குள் போதைப்பொருளை இல்லாமல் செய்ய முடியும்!- என்கிறார் தேசபந்து.

Quick Share

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் நாள் சுற்றிவளைப்புகளில் 2296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே எதிர்வரும் 6 மாதங்களுக்குள் நாட்டில் போதைப்பொருள் பாவனையை முற்றாக இல்லாமல் செய்ய முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முப்படைகளின் ஒத்துழைப்புடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இந்த விசேட வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் சுற்றிவளைப்புகளில் 2,296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 6,583 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இவற்றுள் செவ்வாய்க்கிழமை இரவு புளுமெண்டல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை, சட்டவிரோத மதுபானம் மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹொரனை பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை கொரியர் சேவையூடாக போதைப்பொருள் மாத்திரைகளை விற்பனை செய்து வந்த யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சியம்பலாவௌ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் கோப்பாய் பிரதேசத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரிடமிருந்து இதன்போது வெவ்வேறு வகையான போதைப்பொருள் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 ஆயிரம் போதைப்பொருள் மாத்திரைகளுடன் மீனவர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மன்னார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் 109 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன் 14 சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் 184 பேர் புனர்வாழ்வு மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் தேடப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 218 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் இதன்போது 1 கிலோ 170 கிராம் ஹெரோயின், 648 கிராம் ஐஸ், 11 கிலோ 600 கிராம் கஞ்சா, 46 கிலோ 285 கிராம் மாவா மற்றும் 19,507 போதைப்பொருள் மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிசாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் மரணம்!

Quick Share

வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பாக கொடுங்கல் வாங்கலில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வவுனியா நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், நெஞ்சுவலி என கூறி நீதிமன்றத்தில் இருந்து நேரடியாக வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட போது, அவர் செல்லும் வழியிலே உயிரிழந்துள்ளார்.வெளிநாடு செல்வதற்கு சிலர் குறித்த நபர் ஊடாக பிறிதொருவருக்கு பணம் கொடுத்துள்ளனர். பணம் பெற்றுக் கொண்டவர் பணம் வழங்கியவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பாமையால், குறித்த நபருக்கு எதிராக பணம் கொடுத்தவர்கள் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் முற்படுத்தி விளக்கமறியில் வைக்கப்பட்டு, நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளார். இச் சம்பவத்தில் வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே மரணமடைந்தவராவார்.

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்த 26 காவலர்கள்: காவல் ஆணையரின் அதிரடி உத்தரவு!

Quick Share

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக 26 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆவடி காவல் ஆணையத்திற்கு உட்பட்ட இடங்களில் குட்கா விற்பனை தொடர்பாக போலீசார் அண்மையில் சோதனை நடத்தினர். எண்ணூர், மணலி, புதுநகர், மாதவரம், ஆவடி, அம்பத்தூர்,சோழவரம் என பல பகுதிகளில் சோதனை அதிகாரிகள் ஒவ்வொரு கடைகளிலும் குட்கா பொருட்கள் குறித்து சோதனை நடத்தினர். இதில் 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு மொத்தம் 23 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் குட்கா விற்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாக இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்கள் என மொத்தம் 26 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார். குட்கா விற்பனை செய்வோர் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொலிசாரின் சித்திரவதையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது!

Quick Share

வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் நேற்று இரவு பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இளைஞனின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.அதேவேளை, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை அண்மித்த வீதிகளில் வீதித் தடைகள் போடப்பட்டு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் குடும்பத்தை மிரட்டுகிறது பொலிஸ்!

Quick Share

சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிசார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள்.அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.அவரோடு கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம் சென்று பொலிசார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.இந்த விடயங்களை நாங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். இந்த இடத்தில் பாரிய ஒரு அச்சுறுத்தல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.இங்கே குற்றம் இழைத்ததும் பொலிசார். அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அதே பொலிசார். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் என்றார்.

நான்கு பொலிசாருக்கு எதிராக விசாரணை!

Quick Share

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று பொலிஸ் உயர் அதிகாரிகள் அடங்கிய விசாரணை குழுவினால், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள ஜெனரத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அடங்கிய குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்கள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார்கள் என இனங்காணப்பட்டதன் அடிப்படையில் அவர்கள் நால்வரும் தற்பொழுது மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கட்டுப்பாட்டில் உள்வாங்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.விரைவில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.அதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரினாலும் எமக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், தற்பொழுது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நான்கு உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்டுள்ளார்கள்.அவர்கள் அங்கு கடமையாற்றினால், அங்குள்ள ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை அழித்து விடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை இடம் மாற்றி விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள்.எனவே, இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடையத் தேவையில்லை. பொலிஸ் உயர் மட்டத்தில் விசாரணைகளை விரைவாக செயற்படுத்துமாறு பணித்துள்ளோம் என தெரிவித்தார்.

11 மாதங்களில் 196 இந்திய மீனவர்கள் கைது!

Quick Share

இலங்கை கடல் எல்லைக்குள் 11 மாதங்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 196 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை அறிவித்துள்ளது. 29 படகுகளையும் தாம் கைப்பற்றியதாக மேலும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, 22 மீனவர்கள் நேற்று முன்தினம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் வந்த 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகமயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கத்திக் குத்து!

Quick Share

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் கத்திக்குத்துக்கு இலக்காகி கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பண்டார என்ற பெயர் வழங்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தி்ல் வீடுகளில் கொள்ளையிட்ட மூவர் கைது!

Quick Share

யாழ்ப்பாணத்தில் இரு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயற்பட்ட பெண் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நபர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மற்றொரு தொகுதி நகை மன்னார் மற்றும் திருகோணமலை பகுதிகளில் வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த மார்ச் மாதம் 05ஆம் திகதி ஆட்களற்ற நேரம் வீட்டின் கதவை உடைத்து உட்புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த ஐந்தே கால் பவுண் நகையை கொள்ளையடித்து இருந்தது.அதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிறிதொரு வீட்டில் ஆட்களற்ற வேளை வீட்டின் கதவை உடைத்து உள்நுழைந்த கொள்ளை கும்பல் , 13 பவுண் நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.குறித்த இரு கொள்ளை சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை நேற்றையதினம் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணொருவரையும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கிய நபர் ஒருவருமான மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள மூவரையும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்You cannot copy content of this Website