அலட்சியம் …வீடியோ கால் மூலம் பிரசவம் பார்த்த நர்சுகள்… குழந்தை இறந்ததால் அத...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் முரளி (36). இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புஷ்பா (33) இரண்டாவது முறையாக கருத்தரித்து இருந்தார். இதையடுத்து மருத்துவர் பிரசவ தேதி கொடுத்திருந்த நிலையில், வலி எடுத்தால் மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி அறிவுறுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் மதியம் பிற்பகலில் புஷ்பாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து இல்லிடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் யாருமில்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே 3 பேர் இருந்தனர். இதனால், மருத்துவர் வீடியோ காலில் ஆலோசனை கூறியுள்ளார். அப்போதும் குழந்தையின் தலை வராததால் மதுராந்தகம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், பொது சுகாதாரத்துறை இயக்குநரகம், பணி நேரத்தில் இல்லாத மருத்துவர் பாலு என்பவரை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. மேலும், 2 செவிலியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.