மாவட்ட செய்திகள்

கணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் – அதுவரை தங்கிட்டு போ- சோகத்தில் முடிந...

Quick Share

 திருமணத்தை மறைத்து இளைஞனை பெண் காதலித்த நிலையில் உண்மையை அறிந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக இது கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அம்ரின் (25) – அஜீஸ் தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். யோயோ எனப்படும் செயலி மூலம் அம்ரினுக்கு சென்னை தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த பூபதி (21) என்ற இளைஞன் நட்பில் கிடைத்துள்ளார்.

தன்னைவிட 4 வயது சிறியவரான பூபதியிடம் தன்னை கல்லூரி மாணவி என அறிமுகம் செய்துகொண்டு சாட் செய்து வந்துள்ளார் அம்ரின். அம்ரினிடம் காதலில் விழுந்த பூபதி, கடந்த 20 ஆம் திகதி பெற்றோரிடம் சேலம் செல்வதாகக் கூறிவிட்டு அம்ரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் அம்ரினுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது தெரியவந்துள்ளது. பூபதியை சமாதானம் செய்த அம்ரின், கணவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றுள்ளார் என்றும் அவர் வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி காதலன் பூபதியை தனது வீட்டிலேயே தங்கவைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கூறி காதலன் பூபதியை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார் அம்ரின்.

திரும்பி வந்து பார்த்த போது மின்விசிறியில் பூபதி தூக்கில் தொங்கியிருந்ததாகக் கூறுகிறார் அம்ரின். அம்ரின் கொடுத்த தகவலின்படி வீட்டிற்கு வந்த பொலிசார் பூபதியின் உடலை கைப்பற்றினர்.

அவரிடமிருந்து ஒரு தாலியையும் செல்போனையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். காதலிக்குத் திருமணம் ஆகி இருக்கும் எனத் தெரியாமல் திருமணம் செய்யும் முடிவோடு அவர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பூபதியின் தந்தை பொலிசில் புகாரளித்துள்ளார்.

இதையடுத்து அம்ரின் வீட்டில் இளைஞர் பூபதி கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி தூத்துக்குடி வருகிறார்.

Quick Share

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கலைஞர் அரங்கில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பிரசார பயணத்துக்காக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறார்.

அவர் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் எட்டயபுரம் மெயின் ரோடு, வடக்கு திட்டங்குளத்தில் காலை 8 மணிக்கு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அந்த கூட்டத்தில் தூத்துக்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் பெற்றுக் கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்கள், வணிகர்கள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

”அந்த மனசு தான் சார் கடவுள்” 50 பவுன் – ஆட்டோ டிரைவர்…

Quick Share

சென்னை, குரோம்பேட்டை பகுதியில் ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறுதலாக 50 பவுன் தங்க நகை வைக்கப்பட்டு இருந்த பையை ஆட்டோவிலேயே விட்டுச் சென்றுள்ளார். இதைக் கவனித்த ஆட்டோ டிரைவர் உடனடியாக குரோம்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஆட்டோ டிரைவர் சரவணக்குமாருக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குரோம்பேட்டை பகுதியில் வசித்து வரும் பால் பிரைட்டின் மகனுக்கு நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்நிலையில் நேற்று அத்திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்து இருக்கிறார். குரோம்பேட்டை பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பிய பால் பிரைட், சரவணக்குமாரின் ஆட்டோவில் சவாரி செய்து இருக்கிறார். அப்போது 50 பவுன் தங்க நகை வைக்கப்பட்டு இருந்த பையையும் உடன் எடுத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால் ஏதோ ஒரு நினைப்பில் தங்கம் வைக்கப்பட்டு இருந்த பையை ஆட்டோவிலேயே மறந்து விட்டு பால் பிரைட் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர்தான் பை காணாமல் போய் இருப்பதை பால் பிரைட் உணர்ந்து இருக்கிறார். இதனால் பதறிப்போன அவர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை விசாரித்த போலீஸார் சரவணக்குமாரின் ஆட்டோவை தேடி இருக்கின்றனர். இப்படி நடந்து கொண்டு இருக்கும்போதே சரவணக்குமார் திடீரென்று தங்கம் வைக்கப்பட்டு இருந்த பையைத் தூக்கிக்கொண்டு குரோம் பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து இருக்கிறார். உடனே அதை போலீஸாரிடமும் ஒப்படைத்து இருக்கிறார். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

அம்மா நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள..”அவரது ஆதர்ச வாசகம் இதுதான்”!

Quick Share

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னையில் திறக்கப்பட்டதை அடுத்து அதிமுக தொண்டர்கள் மற்றும் ஜெயலலிதாவின் அபிமானிகள், பொதுமக்கள் பலரும் மெரினாவில் குவிந்தனர்.சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு அருகே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் பீனிக்ஸ் பறவை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்துக்கு 2018 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

தற்போது ஏறக்குறைய சுமார் 3 ஆண்டுகள் நடந்து வந்த நினைவிடம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வுக்காக ஏராளமான மக்கள் மெரினாவில் குவிந்தனர்.அவரது இந்த நினைவிடத்தில் ‘மக்களால் நான்… மக்களுக்காக நான்…’ ( “BY THE PEOPLE FOR THE PEOPLE” ) என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லாலங்கடி தில்லுமுல்லு.., லேப்டாப், சிகரட்லையும் திருட்டு

Quick Share

துபாயில் இருந்து தமிழம் வரும் பயணிகள் பல வகைகளில் தங்கங்களை கடத்தி வருவதாக தகவல் சுங்க அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதன் உச்சக்கட்டமாக சில நாட்களுக்கு முன் சென்னையில் வயிற்றில்
தங்கத்தை கடத்தி வந்தனர். தகவலின் பேரில் சோதனையை தீவிரப்படுத்திய சுங்க அதிகாரிகள் சென்னை, திருச்சி
விமான நிலையங்களில் இதுபோன்ற நபர்களை குறிவைத்து பிடித்து தங்கத்தை பறிமுதல்
செய்து வருகின்றனர்.

24ஆம் தேதி துபாயில் இருந்து சென்னை வந்த ஐந்து பயணிகளிடம் நடத்திய சோதனையில் சிகரேட், லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மலக்குடலில் 18 பொட்டலங்களில் தங்கத்தை மறைத்து வைத்ததையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான லேப்டாப், சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

சரக்கு போட்டது உண்மைதான்.., வெச்சி வெளாசிட்டேன்..!

Quick Share

நடிகர் விஷ்ணு விஷால்விஷால் அடிக்கடி தன்னுடைய அபார்ட்மெண்ட் வீட்டில் பார்ட்டி நடத்துவதாகவும், குடித்துவிட்டு அதிகம் சத்தத்துடன் பாட்டு கேட்பதால் முதியவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் கொடுக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் தூக்கம் கெடுவதால் விஷ்ணு விஷாலிடம் சென்று கூறுபவர்களை அவர் தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால். தன்னை இந்த இடத்தில் இருந்து காலி செய்ய வேண்டும் என்றே அந்த தொழிலதிபர் இது போன்ற புகாரை கொடுத்துள்ளதாகவும், தான் ஒரு சினிமாக்காரன் என்பதால் தன்னை சந்திக்க பலர் வருவது சகஜமான ஒன்று என்றும் தெரிவித்தார். மேலும் பெரிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

தினமும் படப்பிடிப்பில் 300 பேர் உடன் பணியாற்றுவதால் பாதுகாப்பு கருதி வீட்டில் தங்காமல் தனியே வாடகை வீட்டில் தங்கியுள்ளேன். நான் தயாரித்து வரும் எஃப்ஐஆர் படத்திற்காகவும் பலரையும் சந்தித்து வருகிறேன். நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் நேற்று முதலே என் மீது குற்றச்சாட்டி வருகிறார்.

ஆனால் அவர் தான் என்னை சந்திக்க வந்த பணியாளர்கள், விருந்தினரிடம் தவறாக நடந்து கொண்டார். எனது கேமராமேன் பிறந்தநாளை வீட்டில் கொண்டாடினோம். அப்போது ஆல்கஹால் பார்ட்டி நடந்தது உண்மை. ஆனால் நான் சிக்ஸ் பேக் வைத்திருப்பதால் மது அருந்தவில்லை. ஆனால் எங்களுடைய தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்பட்டது. போலீசிடம் நான் அமைதியாகவே பேசினேன்.

நேற்று நான் பேசிய வீடியோ மட்டுமே நேற்று வெளியானது. அவர் தவறாக பேசியதால் தான் நான் கோபப்பட்டு பேசினேன். எந்த மனிதனும் கெட்ட வார்த்தையை பொருத்துக்கொள்ள மாட்டான். குடிகாரன், கூத்தாடி என்று சித்திரிக்கப்படுவதையும்,நான் சார்ந்த சினிமா துறையை விமர்சிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என விளக்கம் அளித்துள்ளார்.

சுங்கச்சாவடியில் பாதி காசு கட்டினா போதும்.., வெளியான அதிரடி உத்தரவு

Quick Share

மதுரவாயல், வாலாஜாபேட்டை இடையே உள்ள சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் மட்டுமே பெற வேண்டுமென்ற உத்தரவை மார்ச் 11 வரை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

அந்த சாலையை முறையாகப் பராமரிக்காதது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. சாலையைச் சீரமைக்கும் வரை சுங்கச்சாவடிகளில் 50 விழுக்காடு கட்டணம் பெற வேண்டும் என டிசம்பர் 9ஆம் நாள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நக்கீரன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 50 விழுக்காடு சுங்கக் கட்டணம் மட்டுமே பெற வேண்டும் என்கிற உத்தரவை மார்ச் 11 வரை நீதிபதிகள் நீட்டித்தனர்.

மிருகத்தனமாக நடந்து கொண்ட மாந்தர்கள்.., கண்கலங்க வைத்த சம்பவம்

Quick Share

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மசினகுடி பகுதியில் சுமார் 40 வயதான ஆண் காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் பல மாதங்களாக சுற்றி வந்தது. வனத்துறையினர் அதற்கு பழங்களுக்குள் மருந்து மாத்திரைகளை மறைத்து வைத்து வழங்கி வந்தனர்.

உடல் நிலை குணமாகாத அந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் பிடித்து அதன் காயத்துக்கு சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் தான் கடந்த 19- ம் தேதி இந்த காட்டு யானைக்கு தீக்காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்க லாரியில் ஏற்றி முதுமலைக்கு கொண்டு சென்றபோது பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மசினகுடி மாவனல்லா பகுதியில் அந்த யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து யானை மீது வீசியதும், இதில் பிரசாத் (வயது 36), ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர்
ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் வீடியோவாகவும் வெளியாகி காண்போரின் இதயத்தை நொறுங்கச் செய்தது. 2 பேர் கைது செய்யப்பட்டனர். காட்டுயானைக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில் சம்மந்தப்பட்ட தனியார் விடுதிக்கு வனத்துறையினர் சீல் வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வருமானம் தடையில்லாமல் வர, இதை தவறாமல் செய்யுங்கள்,நிச்சயம் பலன் உண்டு.

Quick Share

நாம் நம்முடைய வீட்டில் எல்லா விதமான விளக்குகளையும், பூஜைப் பொருட்களையும் வைத்திருந்தாலும் கூட இந்த ஒரு விளக்கிற்கு எதுவுமே இணையாகாது. ஆனால் இப்போது இருக்கும் காலத்தில் இந்த விளக்கை நிறைய பேர் வீட்டின் மூலையில் போட்டு வைத்து இருப்பது வேதனைக்குரிய விஷயமாகும். இந்த விளக்கின் தத்துவமே மகத்துவமானது. இந்த தீபத்தை ஏற்றுவதால் தொழில் விருத்தி ஏற்படும், வருமானம் பெருகும் என்பது தான் ஐதீகம். வருமானம் அதிகரிக்க கூடிய விளக்கு இப்படி மூலையில் போட்டு வைத்தால் எப்படி செல்வம் பெருகும்? அப்படி நாம் எந்த விளக்கை பற்றி பார்க்க இருக்கிறோம்? என்பதை இப்பதிவில் மேலும் காணலாம் வாருங்கள்.

காமாட்சி விளக்கு என்பது மிகவும் விசேஷமான விளக்கு தான். இன்று காமாட்சி விளக்கு இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். எல்லோருமே கிட்டத்தட்ட காமாட்சி விளக்கை மட்டுமே வீடுகளில் ஏற்றி வருகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் எல்லாம் காமாட்சி விளக்கை அதிகம் பயன்படுத்த மாட்டார்கள் என்பது தான் உண்மை. குத்து விளக்கை தான் நம் முன்னோர்கள் வீட்டில் தினமும் ஏற்றி வைப்பார்கள். ஆனால் இன்றோ குத்து விளக்கு என்பது எப்போதாவது விசேஷ, பண்டிகை காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


குத்து விளக்கு என்றால் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். இதை தேய்த்து சுத்தம் செய்வதற்கும் சிரமமாக தான் இருக்கும். அதனாலேயே பெரும்பாலும் குத்துவிளக்கு தவிர்க்கப்படுகிறது. ஏதாவது ஒரு ஹோமம் செய்கிறோம், பண்டிகை வருகிறது, விசேஷங்கள் நடக்கிறது என்றால் மட்டுமே குத்துவிளக்கை வீட்டின் மூலையில் இருந்து எடுத்து கழுவி சுத்தம் செய்து பூஜைக்கு உபயோகப்படுத்துகிறோம். ஆனால் உண்மையில் குத்துவிளக்கு ஏற்றுவது தான் விசேஷமான பலன்களை நமக்கு கொடுக்கும். காமாட்சி அம்மன் விளக்கும் குத்துவிளக்கிற்கு இணையானது தான் என்றாலும் குத்துவிளக்கிற்கு தனி தத்துவங்கள் உள்ளன.
குத்து விளக்கு என்பது மங்களகரமான தெய்வீக விளக்காகும். இதன் அடிப்பகுதி பிரம்ம அம்சமாகவும், நடுவில் இருக்கும் தண்டுப்பகுதி மகாவிஷ்ணுவையும், மேலிருக்கும் பகுதி சிவனுடைய அம்சமாகவும் கருதப்படுகிறது. மேலும் அதில் ஊற்றப்படும் நெய் நாதமாகவும், போடப்படும் திரியானது பிந்துவாகவும், பின்பு சுடர் அலை, கலை மகளாகவும், ஏரியப்படும் ஜோதியானது மலைமகளாகவும் தத்துவம் உள்ளது. மேலும் ஜோதிட ரீதியாக இரண்டு குத்து விளக்கிலும் போடப்படும் 10 தீபங்கள் பத்தாம் எண்ணிற்குரிய பலன்களை கொடுப்பதாக நம்பப்படுகிறது. பத்தாம் எண் என்பது வருமானத்திற்கு உரிய இடம் என்பதால் தங்குதடை இல்லாமல் வருமானத்தை பெற குத்துவிளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது.

ப்ரோக்கரை அட்டாக் செய்து 23 சவரன் நகை பறிப்பு…! போலி மாப்பிள்ளை வீட்டார் செய்த காரியம்

Quick Share

தமிழகத்தில் நெல்லை மாவட்டம் பணகுடியைச் சேர்ந்தவர் 75 வயதான கந்தசாமி. இவர் திருமணம் மற்றும் நிலம் சம்பந்தமான தரகர் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் சொகுசுக் கார் ஒன்றில் 3 பேர் கொண்ட கும்பல் ஒன்று, இவரைத் தேடி பணகுடிக்கு வந்தது.

தங்கள் வீட்டில் உள்ள பையனுக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க வேண்டும் என்றும், இதற்காக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்திற்கு சென்று பெண் வீட்டாரிடம் பேசி முடித்து தர வேண்டும் எனவும் கூறி கந்தசாமியை அழைத்துள்ளனர். தரகர் கந்தசாமி, கழுத்தில் தங்கச் சங்கிலி, விரலில் மோதிரம், கையில் பிரேஸ்லெட்
என்று மைனர் போல தகதகவென்று அவர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று பெயரளவில் பெண்ணைப் பார்த்துள்ளனர். பின்னர் பெண் பிடிக்கவில்லை, வேறு சம்பந்தம் பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டனர். ஊருக்கு திரும்பும் வழியில் தரகர் கந்தசாமிக்கு உணவு வாங்கிக் கொடுத்து அவரை பணகுடியில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் அந்த கும்பல் கந்தசாமியை தொடர்புகொண்டு காவல்கிணறு பகுதியில் பெண் வீடு இருப்பதாகவும், அதை பார்த்து பேசி முடிக்கலாம் எனவும் கூறி அவரை அழைத்துள்ளனர்.

அவரை காரில் ஏற்றிய பெண் வீட்டார், சிறிது தூரம் சென்றதும் கழுத்தில் கத்தியை வைத்து நகைகளை கழற்றி தருமாறு மிரட்டியுள்ளனர். கந்தசாமி சத்தமிட்டதால் கத்தியால் சரமாரியாக தாக்கி அவர் அணிந்திருந்த 23 சவரன் நகைகளை பறித்துக் கொண்டு ஆரல்வாய்மொழி அருகில் உள்ள கண்ணுபொத்தை பகுதியில் ஓடும் காரில் இருந்து முட்புதரில் அவரை தள்ளி விட்டு தப்பிச் சென்றனர்.

வெள்ளிக்கிழமை காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் முட்புதரில் முதியவர் ஒருவர் கிடப்பதை பார்த்து
ஆரல்வாய்மொழி போலீசார் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சேர்த்தனர் பெண் வீட்டார் போல போலியாக நடித்து தரகரை தாக்கி நகை பறித்த கும்பலை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

என்ன பயமா ? தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கேள்வி

Quick Share

கமலஹாசன் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டார் என்பதும் தற்போது அவர் சர்ஜரி செய்து ஓய்வு எடுத்துக் வருகிறார். விரைவில் அவர் அடுத்த கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தாலும்
சமூக வலைதளங்கள் மூலம் அவரது பிரச்சாரம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழக அரசுக்கும் மற்ற அரசியல் கட்சிக்கும் அவர் பல கேள்விகளை எழுப்பி வருகிறார் என்பதும் அந்த கேள்விகள் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கிராமசபை கூட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றை கமல்ஹாசன் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: கிராம சபை கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கூட்டம் நடத்துவது பற்றி
இன்னும் முடிவு செய்யவில்லை என தமிழக அரசு தெரிவித்திருப்பது, மக்களை எதிர்கொள்ள அவர்கள் அஞ்சுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நீதியை நிலைநாட்ட மநீம தொடர்ந்து போராடும்

தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஆண்டு தேர்தலில் அதிமுக, திமுக மட்டுமின்றி கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தரையில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஆயுதம்

Quick Share

உள்நாட்டு ராணுவ தளவாட உற்பத்தியில் இன்னுமொரு மைல்கல்லாக, நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதத்தை (SAAW) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. 2021 ஜனவரி 21 அன்று ஒடிசா கடற்கரைக்கு அருகில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் ஹாக்-I தளத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டின் ஹாக்-எம்கே132 விமானத்தில் இருந்து இந்த திறன்மிகு ஆயுதம் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் நடத்தியுள்ள ஒன்பதாவது திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுத பரிசோதனை இதுவாகும். அனைத்து இலக்குகளும் துல்லியமாக தாக்கப்பட்டன.

பாலாசூரில் உள்ள நடுத்தர சோதனை தளத்தில் நிறுவப்பட்டுள்ள தொலைஅளவியல் மற்றும் கண்காணிப்பு அமைப்பு அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தது.

ஹைதராபத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இமாரத் ஆராய்ச்சி மையத்தால் திறன்மிகு வான்வழி எதிர்ப்பு ஆயுதம் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. 125 கிலோ எடையிலான இந்த ஆயுதம், எதிரியின் ரேடார்கள், பதுங்கு குழிகள், வாகன தளங்கள் மற்றும் ஓடுதளங்கள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தது.

துல்லியமாக இலக்கை எட்டும் இந்த ஆயுதம், இந்த வகையிலான இதர ஆயுதங்களோடு ஒப்பிடுகையில் எடை குறைவானதாகும். ஜாக்குவார் விமானத்தில் இருந்து முன்னர் இது வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

வெற்றிகரமான சோதனையில் ஈடுபட்ட குழுக்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் ஜி சதீஷ் ரெட்டி பாராட்டினார்.
You cannot copy content of this Website