அரசியல்

ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்ட பாஜக மகளிர் அணியினர்: துர்நாற்றம் வீசுவதாக புகார்! 

Quick Share

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகளை ஆட்டுமந்தையுடன் அடைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து, பாஜக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில், பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் பேரணி நடத்தினர். அப்போது, பேரணியில் கலந்துகொள்ள பாஜக பிரமுகர் குஷ்பு வந்திருந்தார். பின்னர், தடையை மீறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினர் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள ஆயிரம் வீட்டு யாதவ ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கப்பட்ட பகுதியின் அருகே அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மேலும் ஏராளமான ஆடுகள் மண்டபத்திற்குள் அடைக்கப்பட்டுள்ளன. சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளதால் ஆடுகள் கத்துவதோடு கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால், பாஜக மகளிரணி நிர்வாகிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், கழிவறை வசதிகளும் இல்லை எனக்கூறி பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், தங்களை வேறு இடத்திற்கு மாற்ற கோரி கோரிக்கை வைத்துள்ளனர். இந்த விவகாரத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் உடம்போடு தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை.. வேண்டாம் என கதறிய தொண்...

Quick Share

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு தன்னைத்தானே ஆறு முறை சாட்டையால் அடித்துக் கொள்ளப் போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார்.

சொன்னதைப் போலவே அண்ணாமலை இன்று காலை 10 மணிக்கு கோவையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு மேல் சட்டை அணியாமல் பச்சை வேட்டி அணிந்து 8 முறை தேங்காய் நாரால் பின்னப்பட்ட சாட்டையை வைத்து அடித்துக் கொண்டார். அப்போது அந்த கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வேண்டாம் வேண்டாம் என முழக்கமிட்டனர்.

மேலும் பலர் வெற்றிவேல் வீரவேல் எனவும் முழக்கமிட்டனர். வெட்கம் கெட்ட திமுக என்றும் பாஜக தொண்டர்கள் முழக்கம் எழுப்பினர். திமுக ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை கண்டித்தும் திமுக அரசைக் கண்டித்தும் அண்ணாமலை, தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “பாஜக இன்று எடுத்துள்ள போராட்டம் வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் தனிமனிதரைக் கண்டித்து இந்த போராட்டம் இல்லை என்றும் அடுத்த தலைமுறை அழிந்து கொண்டிருக்கிறது. கல்வியின் தரம் குறைந்து கொண்டுள்ளது பொருளாதாரம் பின்தங்கியுள்ளது.

எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. பெண்கள் குழந்தைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முருகப்பெருமானிடம் தங்களின் வேண்டுதல்களை இந்த ஆறு சாட்டை அடியின் மூலம் வைத்துள்ளோம். இனி கிடைக்கும் மேடைகளில் திமுக ஆட்சியை தோலுரித்துக் காட்டப்போகிறோம். 

இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. உடலை வறுத்திக்கொள்ளவில்லை, தமிழ் மண்ணின் மரபைதான் செய்துள்ளோம். சென்னை அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தங்களின் நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்தியை கொடுத்துள்ளதாக கமிஷனர் அருண் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கமிஷனர் இப்படி ஒரு வார்த்தையை பயன்படுத்தலாமா?

எஃப்ஐஆரில் அந்த பெண்ணை பற்றி மோசமாக எழுதியுள்ளார்கள். 7 தலைமுறைக்கும் அந்த பெண்ணின் குடும்பத்தை பாதிக்கும். அந்த குற்றவாளி மீது முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் அந்த பெண் திருப்தி அடைந்திருப்பார். கண்ணியமான பதவியில் இருக்கும் அதிகாரி இப்படி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த விஷயத்தை காவல்துறை அதிகாரிகள் சாதாரணமாக கடந்து செல்ல முயற்சிக்கிறார்கள்” என அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் குறைவாக பேசி, அதிகமாக செயலாற்றியவர்! மன்மோகன் சிங் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங...

Quick Share

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92) சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்நிலையில் வியாழக்கிழமை (டிச.26) இரவு 8.06 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக  அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் இரவு 9.51 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங் 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக சேவையாற்றினார்.

தவெக தலைவர் விஜய் இரங்கல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு  தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை தருகிறது.

அவர் இந்தியாவை முழுமையான அறிவுடனும், நேர்மையுடனும் வழிநடத்தினார், அவர் குறைவாக பேசினார், ஆனால் அதிகமாக செயலாற்றினார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்கு ஈடு இணையற்றதோடு என்னென்றும் போற்றப்படும்.

இந்த கடினமான சூழ்நிலையில் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் தெரிவித்துள்ளார். 

மக்களை சந்திக்க வரும் விஜய்!

Quick Share

நடிகர் விஜய் சினிமாவை தாண்டி தற்போது அரசியலிலும் தீவிரமாக இறங்கிவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கும் அவர் 2026 தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து இருக்கிறார். இந்நிலையில் விஜய் கட்சி தொடங்கியதோடு சரி.. மக்களை சந்திக்க வரவில்லை என்கிற விமர்சனம் இருந்து வருகிறது. புயல் நிவாரணம் கொடுக்க கூட மக்களை அவர் ஆபிசுக்கு வர வைத்து கொடுத்தார். ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறாரா விஜய் என்று அப்போது கடுமையாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் விஜய் கட்சியில் பொறுப்பில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி தற்போது அளித்திருக்கும் பேட்டியில் விஜய் அடுத்த மாதம் மக்களை சந்திக்க போகிறார் என தெரிவித்து இருக்கிறார். 2025 ஜனவரி 27ம் தேதி முதல் விஜய் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க போகிறார் என்கிற தகவலையும் அவர் கூறி இருக்கிறார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து 500 நிர்வாகிகள் விலகல்.., சீமானுக்கு தொடரும் நெருக்கடி

Quick Share

நாம் தமிழர் கட்சியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட 500 நிர்வாகிகள் பேர் விலகியது சீமானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

500 நிர்வாகிகள் விலகல்

கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் விலகி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலகினர். 

அதேபோல, விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பில் இருந்து சுகுமார் விலகினார். அப்போது அவர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.மேலும், நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் கட்சியில் இருந்து விலகினார்.

அப்போது அவர் கூறுகையில், “கட்சியில் இருக்கும் நீங்கள் யாரும் கேள்வி கேட்க கூடாது. என்னுடைய இஷ்டப்படி தான் செயல்படுவேன். நீங்கள் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் கிளம்புங்கள்” என்று சீமான் பேசியதாக கூறி வருத்தம் தெரிவித்தார். 

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 500 பேர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

பின்னர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், “கொடி நட்டு, மேடை அமைப்பதில் இருந்து கட்சிக்காக அனைத்து வேலைகளையும் செய்கிற எங்களை சீமான் எச்சில் என்கிறார். 

புதியதாக வந்தவர்களை கொண்டாடுகிறார். இதனால், நாம் தமிழர் கட்சியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட 500 உறுப்பினர்கள், ஒன்றிய, மாவட்டப் பொறுப்பாளர்கள் 20 பேர் விலகுகிறோம்” என்றனர். 

விஜய்யை தரக்குறைவாக விமர்சித்தால் திமுகவுக்கு தான் இழப்பு.. அமீர் அட்வைஸ்..!

Quick Share

திமுகவின் மூன்றாம் தர பேச்சாளர்கள் விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும், அவ்வாறு விமர்சனம் செய்தால் திமுகவுக்கே இழப்பு என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், விரைவில் தீவிர அரசியலில் கலக்க களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் அரசியல் குறித்து திமுகவின் பேச்சாளர்கள் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகின்றனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் மோசமாக விமர்சனம் செய்து வரும் நிலையில், இதற்கு இயக்குனர் அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக மூன்றாம் தர பேச்சாளர்களை வைத்து விஜய்யை ஆபாசமாக பேசுவது சரியல்ல. விஜய்யை ஆபாசமாக பேசுவதாலோ, அவரது குடும்பத்தை அவதூறாக பேசுவதாலோ, அவரது தொழிலை இழிவு படுத்தி பேசுவதாலோ, அவரை வீழ்த்திவிட முடியாது. விஜய்யை தரம் தாழ்ந்து பேசினால் திமுக தனது வாக்குகளை இழக்கும்.

“ஒரே நாடு ஒரே தேர்தல்” ’டங்க்ஸ்டன்’ உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விஜய்யின் கருத்து என்ன? மக்கள் பிரச்சனைகள் குறித்து அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை வைத்து தான் விஜய்யின் அரசியல் குறித்து மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் பிரச்சனையில் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதை பொறுத்துதான், அவரது அரசியல் நிலைமை தீர்மானிக்கப்படும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

ஒருபோதும் அனுமதிக்க முடியாது.. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்த விஜய்..!

Quick Share

எங்கள் கொள்கை தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல அரசியல்வாதிகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இது குறித்து தனது கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

கேப்டன் விஜயகாந்த் மகனை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய தவெக தலைவர் விஜய்.. என்ன நடந்தது?

Quick Share

கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அவ்வப்போது மறைந்த அரசியல் தலைவர்கள் மற்றும் வாழும் அரசியல் தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தேமுதிக கட்சியின் விஜய பிரபாகரன் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய போது, அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தேமுதிக தரப்பில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே ’கோட்’ திரைப்படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்த் சில காட்சிகளில் தோன்றிய போது, அதற்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜயகாந்த் வீட்டிற்கு விஜய் சென்றிருந்தார் என்பதும், அப்போது விஜயகாந்தின் இரண்டு மகன்கள் இடமும், அவர் தனிப்பட்ட முறையில் பாசத்துடன் பேசியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.விஜயகாந்த் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் விஜய், அவரது இரண்டு மகன்களின் பிறந்தநாளுக்கும் தவறாமல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடும் தவெக தலைவர் விஜய்.. முக்கிய பிரமுகர் மிஸ்ஸிங்..!

Quick Share

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விழாவில் முக்கிய பிரமுகர் கலந்து கொள்ளவில்லை என அழைப்பிதழில் இருந்து தெரியவந்துள்ளது.

விகடன் பிரசுரம் வெளியிடும் எல்லாருக்குமான அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது இந்த விழாவின் பத்திரிகைகளில் இருந்து தெரிய வருகிறது. எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்பு உரையாற்ற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் உள்ளிட்ட சிலர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், திருமாவளவன் இந்த விழாவில் கலந்து கொள்ளாதது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள்: விஜய் அறிக்கை..!

Quick Share

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது.இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.

பிரியங்கா காந்தி 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி! முதல் முறையாக நாடாளுமன்றத...

Quick Share

வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். 

பிரியங்கா காந்தி 

கேரளாவின் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து பாஜக சார்பில் நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மெகோரி ஆகியோர் வயநாடு தொகுதியில் போட்டியிட்டனர்.

தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை துவங்கியது. பிரியங்கா காந்தி ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்தார். இந்த நிலையில் அவர் சுமார் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். 

அதாவது பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள் பெற்றார். சத்யன் 2,11407 வாக்குகளும், நவ்யா 1,09,939 வாக்குகளும் பெற்றனர். 

வயநாடு தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் பிரியங்கா காந்தி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் நுழைகிறார்.   

கலைஞர் பெயரை சூட்டுவதில் காட்டிய அக்கறை மருத்துவர்களை பாதுகாப்பதில் காட்டாதது ஏன்? சீமா...

Quick Share

அரசு மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுவதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவரை தாக்கிய விக்னேஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பதிவில், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

திமுக ஆட்சியில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புகுந்து மருத்துவர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது திமுக அரசுக்கு தெரியாதா?

அல்லது அந்நிகழ்வினால் மருத்துவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியாதா?

இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுதான் தெரியாதா?

அவற்றிலிருந்து திமுக அரசு எவ்விதப் பாடமும் கற்காதது ஏன்? கொல்கத்தா கொடும்நிகழ்விற்கு பிறகாவது மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பில் திமுக அரசு கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால் தற்போது மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்தே இருக்காது.

மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுயதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? திமுக அரசின் சிறிதும் பொறுப்பற்ற அலட்சியமே அரசு மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாகும்.

ஆகவே, திமுக அரசு இனியாவது மெத்தனமாக இல்லாமல், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில், அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவர் பாலாஜி விரைந்து நலம்பெற விழைகிறேன்” என்று கூறியுள்ளார்.




You cannot copy content of this Website