தூத்துக்குடி

நீரில் தத்தளித்த மாணவி: காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

Quick Share

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் கண்மாயில் குளிக்க சென்ற இளம்பெண்கள் இருவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மேல மருதூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி மேனகா. இவர் 9ஆம் வகுப்பு படித்து வந்த இவர், கல்லூரி மாணவி கனிச்செல்வி மற்றும் இளம் பெண் கலைச்செல்வி ஆகியோருடன் கண்மாயில் குளிக்க சென்றார்.

அங்கு மேனகா குளிக்கும்போது நீரில் மூழ்கி தத்தளித்ததாக கூறப்படுகிறது. அதனைப் பார்த்து பெண்கள் இருவரும் மேனகாவை காப்பாற்ற நீரில் இறங்கியுள்ளனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக மாணவியை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. அத்துடன் கலைச்செல்வியும் அவருடன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இதனை கவனித்த அக்கம்பக்கத்தினர் ஒருவழியாக கனிச்செல்வியை காப்பற்றினர். மேலும் பொலிஸார் தகவல் அளித்தனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்களின் உடல்களைக் கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாணவியை காப்பாற்றும் முயற்சியில் பெண்ணொருவர் அவருடன் சேர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாம்- கண்ணீர் விட்டு கதறிய மகள்கள்! நடந்தது என்ன...

Quick Share

தமிழகத்தின் தூத்துக்குடியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் இரு தரப்புக்கு இடையே மோதல்.

கைது நடவடிக்கையை முன்னெடுத்த பொலிசார்.

தமிழகத்தில் உள்ள ஒரு இலங்கை தமிழர் முகாமில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள இலங்கை தமிழர் முகாமில் ஒற்றுமையை வலியுறுத்தி கபடி போட்டி நடைபெற்றது. போட்டியின் போது குகன் என்பவா் போதையில் தகராறு செய்ததாகவும், அவரை போட்டி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதாகா் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், குகன், அவரது தம்பி தாஸ், நண்பா்கள் சோ்ந்து சுதாகரின் வீடு புகுந்து பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளனா். அவா்களை முகாம் மக்கள் தாக்கினராம். இதையடுத்து, சுதாகரின் மனைவி சகாயராணி தனது 2 குழந்தைகள், முகாமைச் சோ்ந்த உறவினா் பெண் பஞ்சவா்ணம் ஆகியோருடன் குகன் தரப்பினா் மீது புகாரளிக்க மாசாா்பட்டி காவல் நிலையம் சென்றாா்.

அப்போது, பொலிசார் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, இரு பெண்களையும் காவல் நிலையத்துக்குள் பல மணி நேரம் இருக்க வைத்தனராம்.

இதனால் அவரது அவரது மகள்கள் கண்ணீர் விட்டு கதறும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பெண் விடுவிக்கப்பட்டார். 16 பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் குகன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

மக்களே எச்சரிக்கை! பரவும் மஞ்சள் காமாலை நோய்!

Quick Share

தூத்துக்குடியில் அதிக அளவில் மஞ்சள் காமாலை நோய் பரவி வருவதால் அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட எம்.கே தெரு, குமார் தெரு, பங்களா தெரு, தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானவர்களுக்கு தற்போது மஞ்சகாமாலை நோய் பரவி வருகிறது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவின் பேரில் இந்த பகுதியில் சுகாதார துறையினர் சிறப்பு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் அருண்குமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று சளி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனரா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணி நடத்தி வருகின்றனர்.

இந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மருத்துவர் இமானுவேல் டைஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்து, தேவையான மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்கள் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும் மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மகளை வளர்க்க தந்தையான தாய்!நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ..!!

Quick Share

முத்து நகரான தூத்துக்குடி மாவட்டத்தில்தான் மனதை நெகிழச் செய்யும் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

தூத்துக்குடியில் உள்ள முடிவைத்தானேந்தல் என்ற கிராமத்தை சேர்ந்த சிவாபிள்ளை என்பவர் அருகில் உள்ள செக்காரகுடி, சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாளை 20வது வயதில் திருமணம் செய்தார். 

இந்தத் திருமணம் நடந்த 15 நாளில் சிவாபிள்ளை இறந்துவிட கர்ப்பிணியான பேச்சியம்மாள், தனது மகள் பிறந்த பிறகு தனது மகளுக்கு தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்பதற்காகவும், பாலியல் சீண்டலில் இருந்து தப்பிப்பதற்காகவும் ஆணாக மாறியுள்ளார். 

தனது பெயரை முத்து என மாற்றிக்கொண்டு ஓட்டலில் பரோட்டா அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்துள்ளார். 
தற்போதுவரை இவரை பலரும் முத்து மாஸ்டர் என்றே அழைக்கின்றனர். இவர் பெண் என்பதும் பலருக்கும் தெரிவதில்லை. 

தற்போதுவரை வறுமையின் பிடியில் இருக்கும் முத்து மாஸ்டர் என்ற பேச்சியம்மாள் தனது மகளின் திருமணத்தை ஒருவழியாக நடத்தி முடித்துவிட்டார். 

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் தவவாழ்வு நடத்தியிருக்கும் முத்து மாஸ்டருக்கு தற்போது 57 வயது ஆகிறது. இவருக்கு முதியோர் ஓய்வு தொகை கிடைக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் வெட்டி கொன்ற தந்தை!!

Quick Share

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி 4 வயதில் நிஷாந்த் என்ற மகன் உள்ள நிலையில், கணவர் இசக்கிப்பாண்டியனை பிரிந்து வாழ்ந்து வந்தார். 

இசக்கிப்பாண்டியன் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன் முத்து என்பவரை மீனா இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு பாளையங்கோட்டையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இந்த விடயம் உறவினர்கள் மூலமாக சுடலைமுத்துவிற்கு தெரிய வந்துள்ளது. மேலும், தனது மகள் இரண்டாவது கணவருடன் சுற்றுலா சென்று அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதை பார்த்து ஆத்திரமடைந்துள்ளார். 

இந்த நிலையில், கோவில் திருவிழாவிற்காக தாதன்குளத்தில் உள்ள தனது சித்தி வீட்டிற்கு மீனா வந்துள்ளார். இதனை அறிந்த சுடலைமுத்து தனது மனைவி, மகன் உட்பட 4 பேருடன் அங்கு சென்று மீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சுடலைமுத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் மீனாவின் கழுத்து மற்றும் தலையில் வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மீனா உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வர, அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். 

இதுகுறித்து மீனாவின் சித்தி பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சுடலைமுத்து, மாயாண்டி, முப்பிடாதி மற்றும் வீரம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய முருகன் என்பவரை பொலிசார் தேடி வருகின்றனர். 

இரண்டாவது திருமணம் செய்த மகளை தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

வீட்டின் மேற்கூரை இடிந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழந்த சோகம் !

Quick Share

தூத்துக்குடியில் அண்ணா நகர் பகுதியில் வசித்து வந்தவர் முத்துராமன்.  இவரது மனைவி காளியம்மாள்.  இந்த தம்பதியரின் மகள்களில் ஒருவர் கார்த்திகா.  கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்துள்ளது.  இந்த சம்பவத்தில், கர்ப்பிணியான கார்த்திகா சிக்கி கொண்டார்.  அவரது தாயார் காளியம்மாளும் இடிபாடுகளில் சிக்கியுள்ளார்.  இதில், பலத்த காயமடைந்த 2 பேரும் உயிரிழந்து உள்ளனர்.

அவர்கள் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது.  இந்த நிலையில், கான்கிரீட் வீட்டின் மேற்கூரை பகுதியில் பழைய ஓடுகள் வைக்கப்பட்டு உள்ளன.  தொடர்ந்து ஈரநிலையில் ஓடுகள் இருந்த சூழலில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
கடந்த வாரம் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு உள்ளது.  இதன்பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்த நிலையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.  அவர்களது உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது.  இதனால், அந்த பகுதியில் வசிப்போர் இடையே அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்

Quick Share

தூத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தல் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் தாமஸ் சாமுவேல் (57) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பத்மாவதி பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. 

பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெற்ற தாயை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து துடிதுடிக்க கொன்ற மகள்!அதிர்ச்சி தகவல் ..!

Quick Share

தமிழகத்தின் தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பேசுவதை கண்டித்த தாயை பெற்ற மகளே துடிதுடிக்க கொன்ற சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி முனியலட்சுமி. 

இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறார் முனியலட்சுமி.

இவரது 17 வயது மகள் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு தங்ககுமார், கண்ணன் ஆகியோர் நண்பர்களானார்கள், இவர்களுடன் போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார்.

இதனை முனியலட்சுமி கண்டிக்க ஆத்திரமடைந்த மகள், சனி்க்கிழமை இரவு ஆண் நண்பர்களின் உதவியுடன் முனியலட்சுமி துடிதுடிக்க கொன்றுள்ளார்.

பலரும் நகைக்காக முனியலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதிய நிலையில், போலீஸ் விசாரணையின் போது முனியலட்சுமியின் மகள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மகள் மற்றும் முனியலட்சுமியைக் கொலை செய்ய உதவியதாக அவரது நண்பர் கண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருமணமாகி 5மாதத்தில் புதுப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் !

Quick Share

தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (22). கார் டிரைவர் . இவரது மனைவி மாரிசெல்வி (21). இந்த தம்பதிக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகிறது.
இந்நிலையில் மாரிசெல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாரிசெல்வி கோபித்துக் கொண்டு தாளமுத்துநகரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். 

இந்நிலையில் மாரிசெல்வியின் வீட்டுக்கு திங்கள்கிழமை இரவு தனது நண்பர்கள் சிலருடன் சென்ற பொன்ராஜ் , திடீரென மாரிசெல்வியை தாக்கிவிட்டு அவரது கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டாராம். அதை தடுக்க முயன்ற  மாரிசெல்வியின் தாய் மாரியம்மாளுக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.4,755 கோடியில் புதிய தொழில்கள் தொடங்க 33 புரிந்துணர்வு ஒப்பந்தம்

Quick Share

தூத்துக்குடியில் நேற்று அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அப்போது அந்த பூங்காவில் தொழில் தொடங்குவதற்காக 8 நிறுவனங்களுடன் ரூ.2 ஆயிரத்து 845 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

இதுதவிர தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்கவும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.1,910 கோடி முதலீட்டில் புதிய தொழில்கள் தொடங்க 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

முதலீடு

தொழில் துறை சார்பில் ரூ.1,643 கோடி முதலீடு மற்றும் 3 ஆயிரத்து 653 பேருக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் தூத்துக்குடி, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி, உரங்கள், ரசாயனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் முதலீடு செய்கின்றன.

சிறு, குறு நிறுவனங்கள்

இதே போன்று குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை சார்பில் ரூ.267 கோடி முதலீடு மற்றும் 2 ஆயிரத்து 373 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதிகாரிகள் மற்றும் நிறுவன பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக்கொண்டனர்.

இந்த நிறுவனங்கள் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கட்டுமானம், உணவு பதப்படுத்துதல், கண்ணாடி உற்பத்தி, ஆடைகள் மற்றும் ஜவுளி, சூரிய ஒளி அடுப்புகள், அறைகலன், உரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய துறைகளில் முதலீடு செய்கின்றன.

இதன் மூலம் நேற்று நடந்த விழாவில் மொத்தம் ரூ.4 ஆயிரத்து 755 கோடி முதலீடும், 17 ஆயிரத்து 476 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் வகையில் 33 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ரூ.1,000 கோடியில் சர்வதேச பர்னிச்சர் பூங்கா முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

Quick Share

நாட்டிலேயே முதலாவதாகவும், உலக தரத்துக்கு இணையாகவும் சர்வதேச அறைகலன் (பர்னிச்சர்) பூங்காவை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. தூத்துக்குடி சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் 1,156 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,000 கோடியில் சர்வதேச அறைகலன் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா தூத்துக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கினார். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சர்வதேச பர்னிச்சர் பூங்காவில் முதலீடு செய்ய முன்வந்துள்ள 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒப்பந்த நகல்களை பரிமாறிக் கொண்டனர்.

வேலைவாய்ப்பு

மேலும், தமிழக அரசின் தொழில் வழிகாட்டு நிறுவனத்தின் புதிய இணையதளத்தையும், தமிழ்நாடு நிலத்தகவல் இணையத்தையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மரச்சாமான் மற்றும் தோல் பொருட்களால் பர்னிச்சர் பொருட்கள் உற்பத்தி செய்யவுள்ள இந்த 8 நிறுவனங்கள் மூலம் ரூ.2 ஆயிரத்து 845 கோடி முதலீடும், 11 ஆயிரத்து 450 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், சர்வதேச அறைகலன் பூங்காவில் தங்களது உற்பத்தி திட்டங்களை செயல்படுத்த முன்வந்துள்ள ஹெட்டிச் இந்தியா லிமிடெட் மற்றும் டெக்யூனிக் புரொபைல்ஸ் இந்தியா லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

நாள்தோறும் திட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 10 மாதங்கள் முடிந்து உள்ளது. பொறுப்பேற்ற நாள் முதல், இன்னும் சொல்லவேண்டும் என்றால் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டு இருக்கும் போதே, அரசு பணியை தொடங்கி இருக்கிறோம்.

நாள்தோறும் ஏதாவது திட்டத்தை தொடங்கி வைக்கிறோம். தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ஏதாவது ஒரு தொழில்நிறுவனத்தை தொடங்கி வைத்துக் கொண்டு இருக்கிறோம்.

வ.உ.சி. கனவு

சர்வதேச அறைகலன் பூங்கா இந்தியாவில் முதன் முறையாக தூத்துக்குடியில் தொடங்கப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதியில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில், முத்துநகரில், விடுதலை போராட்ட வீரர்கள் பிறந்த மண்ணில் இந்த பூங்கா அமைகிறது. சொந்த தேசத்தில், சொந்த பணத்தில், சுய சார்பு பொருளாதாரத்தை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கனவு கண்டவர் வ.உ.சி., அவரது பொருளாதார கனவு நிறைவேறும் நாளாக இது அமைந்து உள்ளது.

கிராமங்கள் நகரமாக வேண்டும், நகரங்கள் மாநகரமாக வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை. அந்த அடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சி அறிவிக்கப்பட்டது. ஏராளமான திட்டங்களை தூத்துக்குடிக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக மாநகராட்சியாக கலைஞர் அறிவித்தார். அந்த வரிசையில் இந்த சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்க உள்ளோம்.

தூத்துக்குடி மாவட்டத்தை தேர்வு செய்வதற்கு முக்கிய காரணமும் உண்டு. தென் தமிழகத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி, மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தூத்துக்குடியில் இந்த பூங்கா அமைக்கப்படும். தென்கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் வரும் கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக தூத்துக்குடி துறைமுகம் விளங்கி கொண்டு இருக்கிறது. இதனால் தூத்துக்குடியில் இந்த பூங்காவை அமைக்க முடிவு செய்து உள்ளோம்.

பொருளாதாரம்

கொரோனா என்ற பெருந்தொற்றில் இருந்து இன்னும் சில மாநிலங்கள் மீளவில்லை. கொரோனா காரணமாக இழந்த பொருளாதாரத்தை சில மாநிலங்கள் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை. கொரோனாவில் இருந்து மீண்டது மட்டுமின்றி பொருளாதாரத்தையும் மேம்பாடு அடைய வைக்க தமிழக அரசு முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறது. இதனால் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி கடந்த 10 மாதங்களாக சீராக இருந்து வருகிறது. இது மகிழ்ச்சியை அளிக்கிறது.

வறுமையை ஒழித்தல், வேலைவாய்ப்பு உருவாக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாத்தல், சமூகநீதியை பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களோடு, அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற திராவிட மாடல் இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். மாநிலத்தின் மகத்தான வளங்களை முழுமையாக பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை உயர்த்தி, தமிழ் மக்கள் அனைவருக்கும் சிறப்பான வாழ்க்கையை உருவாக்குவது அரசின் குறிக்கோள், லட்சியம்.

முதலீட்டாளர்கள் மாநாடு

இதுவரை மூன்று முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளோம். இதில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம் மாநிலத்தின் மீது, முதலீட்டாளர்கள் வைத்து உள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. இதுவரை 109 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இவற்றில் உறுதி செய்யப்பட்ட ரூ.56 ஆயிரத்து 201 கோடி முதலீட்டின் மூலம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 999 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

முதல் இடம்

தென்மாவட்டங்களை தொழில்வளமாக்க அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்றைய காலச்சூழலுக்கு அறைகலன் பூங்கா மிகவும் அவசியமான திட்டம் ஆகும். உலக அளவில் அறைகலன் மரச்சாமான்கள் சந்தை 2020-21-ம் ஆண்டுக்குள் 750-800 மில்லியன் டாலர் அளவுக்கு பரந்து விரிந்து இருக்கும் என்று வல்லுனர்களால் கணக்கிடப்படுகிறது. இந்த தொழிலில் சீனா, வியட்நாம் போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், இந்தியாவின் பங்களிப்பு குறைவாக உள்ளது. இந்த குறைபாட்டை போக்கும் வகையில் தமிழக அரசு இந்த பூங்காவை அமைத்து உள்ளது. உலகத்தரத்துக்கு இணையாக ஒரு சர்வதேச அறைகலன் பூங்காவை உருவாக்க தமிழக அரசு முன்வந்து உள்ளது. அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு நம்பர் ஒன் (முதல் இடம்) என்ற நிலையை அடையப்போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

“மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன்&...

Quick Share

தூத்துக்குடியில் முன்னாள் முதல் -அமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் முதல் -அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது எதிர்பாராத ஒன்று. வெற்றியை காண கலைஞர் இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், அவரது சிலையை திறந்து வைத்தது மகிழ்ச்சி.

கடமை கண்ணியம், கட்டுப்பாட்டை திமுகவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணா சொன்னது போல மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவோம். 
தேர்ந்தேடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்தால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.  கூட்டணி கட்சிகளை திருப்தி செய்வதற்காக மட்டும் எச்சரிக்கவில்லை. திருந்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
 மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக சிறு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். மேயர் என்பது பதவி அல்ல. பொறுப்பு என கருணாநிதி சுட்டிக்காட்டினார். திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களோடு மக்களாக நின்று பணியாற்ற வேண்டும்” என்றார். 




You cannot copy content of this Website