சேர்ந்து குடித்ததால் ஏற்பட்ட விபரீதம் !! அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (43). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவரது தம்பி லோகநாதன் (37). இவர் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில் பிரசாதம் ஸ்டால் கடையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இருவரும் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளனர். வெகுநாள் கழித்து சந்தித்துக்கொண்ட சந்தோசத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதத்தால் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த தம்பி லோகநாதன் அருகில் இருந்த தடி ஒன்றை எடுத்து அவனது அண்ணன் ராஜ்மோகன் தலையில் ஓங்கி தாக்கியுள்ளார். இதனால் சரிந்து விழுந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
வீட்டின் வாசலில் அதிகாலையில் ராஜ்மோகன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அவரது அண்ணன் புகழேந்தி இந்த சம்பவம் குறித்து குளித்தலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து அண்ணனை கொலை செய்த தம்பி லோகநாதனை கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட அண்ணன் ராஜ் மோகனின் உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையினர் இந்த படுகொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அண்ணனை தம்பி தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.