இந்தியா

சீரழித்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்பும் சிறுமி: மறுத்த நீதிமன்றம்!

Quick Share

கேரளாவில் தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய பாதிரியாரை மணக்க 20 வயது பெண் விரும்பிய நிலையில் அவர் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கேரளாவின் கொட்டியூர் பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ராபின் வடக்கம்சேரி. சில ஆண்டுகளுக்கு முன் அந்த தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த ஒரு 15 வயது சிறுமியை ராபின் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். பின் இதுகுறித்த புகார் அடிப்படையில் 2017ல் ராபினை பொலிசார் கைது செய்தனர். இதையடுத்து அவர் பாதிரியார் பணியிலிருந்து நீக்கப்பட்டார்.

கடந்த 2019ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம் குற்றவாளியான ராபின் வடக்கம்சேரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ராபின் மேல்முறையீடு செய்தார்.

இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அந்த சிறுமி வளர்ந்து தற்போது 20 வயது இளம்பெண்ணாகி விட்டார். இந்நிலையில் தனக்கு ஜாமின் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் ராபின் தனியாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை தான் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் அதற்கு தனக்கு ஜாமின் வழங்கக்கோரியும் கோரிக்கை வைத்திருந்தார். எனினும் இந்த மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும் அதே கோரிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியாருக்கு ஜாமின் வழங்கக்கோரியும் அவரை திருமணம் செய்துகொள்ள தான் விரும்புவதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வினீத் சரண், தினேஷ் மஹேஷ்வரி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவில் எங்களால் தலையிட முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடையை ரத்து செய்த உயர்நீதிமன்றம்!

Quick Share

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

இன்று (ஆக. 03) அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது: தமிழக அரசு கொண்டு வந்த, இந்தச்சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி சட்டத்தை ரத்து செய்ததுடன், உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க முடியாது. உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டு வர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனக்கூறினர்.

அய்யோ – கோவிட் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை: வெளியான எச்சரிக்கை!

Quick Share

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில், தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் அவர்கள், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது கேரளா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களில் கொரோனா வீதம் 10 சதவீதத்திற்கு மேல் உள்ளது என்றும், 222 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கேரள மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உட்பட மொத்தம் 18 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், இந்த 18 மாவட்டங்களில் மட்டும் 47.5 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகின்றன என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவை பொருத்தவரை கொரோனா வைரஸ் இரண்டாவது அலை இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மக்களே உஷார் – அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் கொரோனா 3-ம் அலை!

Quick Share

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் கொரோனா இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதால், பொதுமக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஐதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) பேராசிரியர்கள் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையிலான ஆய்வுக் குழு இது குறித்த ஆய்வை நடத்தினர்.

கணித அடிப்படையில் நடத்தப்பட்ட அவர்களது ஆய்வில், 3-வது அலை துவங்கும் போது தினசரி தொற்று எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் அலையின் உச்சபட்ச தொற்று எண்ணிக்கை ஒன்றரை லட்சம் வரை போகும் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2-வது அலையின் போது தினசரி தொற்று 4 லட்சத்தை தாண்டியது போன்ற அளவுக்கு 3 ஆவது அலை தீவிரமாக இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

கொரோனா தொற்று அதிகம் பாதித்த கேரளா மற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் 3-வது அலையின் போது நிலைமை தலைகீழாக மாறும் எனவும் அவர்கள் கணித்துள்ளனர்.

மே 7 அன்று, இந்தியா 4,14,188 கொரோனா பாதிப்புகளை பதிவு செய்தது, இது 2-வது அலையின் போது அதிக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.

பத்து மாநிலங்களில் புதிய தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு இருப்பதாக ஒன்றிய அரசு சமீபத்தில் கூறியது. 10 சதவிகிதத்திற்கும் அதிகமான நேர்மறையான விகிதம் கொண்ட மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தது.

பெட்ரோல் பயன்பாடு கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல அதிகரித்துள்ளது

Quick Share

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு வாகன நடமாட்டம் குறைந்தது. இந்தியாவின் எரிபொருள் தேவை, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது.
கடந்த மார்ச் மாதம், பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.
இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம்.
கொரோனாவுக்கு முன்பு, அதாவது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது. கடந்த மாதம் 54 லட்சத்து 59 ஆயிரம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம். ஆனால், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீதம் குறைவு. தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார். விமானங்கள் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது.

கோவிட் 3-ம் அலை: மத்திய அரசு எச்சரிக்கை!

Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. குறிப்பாக குறைந்துவந்த கொரோனா பாதிப்பு இன்று நாடு முழுவதும் மீண்டும் 41 ஆயிரத்தை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்துவது தவிர தடுப்பூசி போடும் பணியையும் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45-60 வயது பிரிவினருக்கு தடுப்பூசி முன்னுரிமை அளித்து போடப்பட வேண்டும் என்றும் மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவால் உயிரிழக்கும் 80 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேற்பட்டோர் என அரசு குறிப்பிட்டிருந்தது. மூன்றாவது அலை குறித்த அச்சம் எழுந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

இதிலும் குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழகம், ஒடிசா, மிசோரம், மேகலாயா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் சதவிகிதம் அதிகரிப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்களை குறிப்பிட்டு மத்திய அரசு எச்சரித்துள்ளது.

புல்வாமா தாக்குலை முன்னின்று நடத்திய முக்கிய தீவிரவாதி சுட்டுக்கொலை

Quick Share

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நக்பெரன் – தர்சர் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் இந்திய பகுதிகளும் நுழையும் முயற்சியில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் கொல்லப்பட்ட ஒருவர் ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதி ஆவார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குலை முன்னின்று நடத்தியவர் ஆவார். ஜெய்ஷ்-இ- முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர் ஆவார். இவரது பெயர் முகமது இஸ்மாயில் ஆல்வி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பஞ்சாபில் எல்லைப்பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானை சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பஞ்சாபின் டார்ன் டாரன் மாவட்டத்தில் சர்வதேச எல்லைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஊடுருவல்காரர்களின் நடமாட்டம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், அவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தனர்.
இருப்பினும் அவர்கள் கண்டுகொள்ளாமல், ஊடுருவ முயன்றனர். இதனையடுத்து, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 ஊடுருவல்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.

பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா டெஸ்ட் ; அரசு தீவிரம்..

Quick Share

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்திற்கு வருகை தரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது
இந்த மாநிலங்களில் இருந்து பேருந்து, விமானம், ரயில் அல்லது வாகனம் மூலம் கர்நாடகத்திற்கு வருபவர்களுக்கு மாநில அரசு திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வருபவர்கள் 22 நேரத்திற்கு முன்பு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து இருக்க வேண்டும் சோதனையில் தோற்று நோய் இல்லை என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் ஆர்டிபிசிஆரை சரிபார்த்தவர்களுக்கு மட்டுமே போர்டிங் பாஸ் வழங்குமாறு அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரயில் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளும் ஆர்டிபிசிஆர் அறிக்கையுடன் இருப்பதை உறுதி செய்வது ரயில்வே மற்றும் போக்குவரத்து அமைப்புகளின் கடமை என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கல்வி, அலுவலக வேலை, வியாபாரம் போன்றவற்றிற்காக கேரளாவுக்கு செல்பவர்கள் குறைந்தது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று சோதிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கேரளா மகாராஷ்டிரா மாநிலங்களை ஒட்டியுள்ள கர்நாடக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதம்!

Quick Share

இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ‘இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க முடியாது,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதிட்டார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இன்று (30/07/2021) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தலைமை நீதிபதி அமர்வு மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது” என வாதிட்டார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, “தனி நீதிபதி மனுவைப் பரிசீலிக்குமாறே உத்தரவிட்டார். குடியுரிமை வழங்குங்கள்; இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனு தொடர்ந்தீர்கள்?

தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்” எனக் கூறி, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1 லட்சம் இளைஞர்களுக்கு வேளை -அதிரடி அறிவிப்பு அளித்த முன்னணி நிறுவனம்!

Quick Share

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பெரும் சிக்கலில் தவித்து வருகின்றனர். குறிப்பாக வாழ்வாதாரம் இழந்து இதுவரை சந்திக்காத பிரச்னைகள், சவால்களை எதிர்கொண்டனர். ஏராளமானோர் வேலை இழந்தனர். இதனால் வேலையில்லாவோர் சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச அளவில் கவனம் பெறும் ஐ.டி நிறுவனம் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த ஆண்டில் ஒரு லட்சம் பேரை வேலைக்கு எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது.

ஐடி நிறுவனங்களில் வெளியேறுவோர் விகிதம் காக்னிசன்ட்டில் அதிகமாக இருக்கிறது. அதனால், கூடுதல் பணியாளர்களை எடுக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதில் 30,000 பேர் படித்து முடித்து புதிதாக (fresher ) வேலை தேடுபவர்கள். மீதமுள்ளவை அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்க காக்னிசன்ட் திட்டமிட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டு 45,000 புதியவர்களை வேலைக்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறது காக்னிசன்ட் நிறுவனம்.

கடந்த இரு ஆண்டுகளில் நிறுவனத்தில் புதிய பணியாளர்களை நியமனம் செய்துவந்தாலும் 1.2 லட்சத்துக்கும் மேலான நபர்கள் வெளியேறி இருக்கிறார். கடந்த மார்ச் காலாண்டில் வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. அதுவே ஜூன் காலாண்டில் 31 சதவீதம் அளவுக்கு வெளியேறுவோர் விகிதம் இருந்தது. இந்த காலாண்டில் 23,300 நபர்கள் வெளியேறி இருக்கிறார்கள்.

கடந்த மூன்று மாதத்தில் தினமும் 350 – 380 பணியாளர்கள் வரை வெளியேறி இருக்கிறார்கள். கடந்த காலாண்டு முடிவில் 3,01,200 பணியாளர்கள் உள்ளனர்.

ஆனால், இதே காலத்தில் டிசிஎஸ் (8.6%) விப்ரோ (15.5%), இன்ஃபோசிஸ் (13.9%) மற்றும் ஹெச்.சி.எல். டெக் (11.8%) ஆகிய நிறுவனங்களில் மிகவும் குறைவாகவே பணியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். வெளியேறும் பணியாளர்களில் பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் என நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரைன் ஹம்ரிஸ் தெரிவித்திருக்கிறார்.

தங்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு: இந்திய ரெயில்வே அதிரடி!

Quick Share

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வீரர்களில் 25 பேர் (20%) ரெயில்வே துறை ஊழியர்கள். அவர்கள் பதக்கம் வென்றால் பரிசுத்தொகை வழங்கப்படும் என இந்திய ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்திய ரெயில்வே துறையை சார்ந்த விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றால் அவர்களுக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

இதுபற்றிய அறிவிப்பில், விளையாட்டு வீரர்களின் கனவான ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களில் ரெயில்வே துறையை சார்ந்தவர்கள் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளி வென்றால் ரூ.2 கோடி, வெண்கலத்திற்கு ரூ.1 கோடி என்ற அளவில் பரிசு தொகை அளிக்க இருக்கிறோம்.

போட்டியில் இறுதிச்சுற்று வரை செல்லும் வீரர்களுக்கு ரூ.35 லட்சம், போட்டியில் கலந்து கொண்டாலே ரூ.7.5 லட்சம் வழங்கப்படும் என்றும் தங்கப்பதக்கம் வென்ற வீரரின் பயிற்சியாளருக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப்பதக்கம் வென்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.20 லட்சம் மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்றவரின் பயிற்சியாளருக்கு ரூ.15 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்திருக்கிறது.

முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்த எடியூரப்பா: காரணம் என்ன?

Quick Share

கர்நாடக முதலமைச்சர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 26-ந் திகதி எடியூரப்பா 4-வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 75 வயதை தாண்டிய தலைவர்களுக்கு பாஜகவில் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது.

ஆனால் அதில் இருந்து 76 வயதான எடியூரப்பாவுக்கு விலக்கு அளித்து அவருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக மேலிடம் வழங்கியது. அப்போதே 2 ஆண்டுகள் முடிந்ததும் முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

அந்த நிபந்தனையை எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். அதன்படி எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் (திங்கட்கிழமை) 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த 16-ந் திகதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது 2 ஆண்டுகள் நிறைவடைவதால் நிபந்தனைப்படி முதல்-மந்திரி பதவியை விட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டனர்.

முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பாவும் உறுதி அளித்துவிட்டு வந்தார். பாஜக மேலிடத்திடம் இருந்து அதிகாரபூர்வமான தகவல் வந்ததும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா ஏற்கனவே அறிவித்தார்.

இந்த நிலையில் எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்று இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதையடுத்து பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

மேலும், மதிய உணவிற்கு பிறகு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
You cannot copy content of this Website