அரசு அதிகாரியின் வேலைக்கு வினையான ரீல்ஸ் வீடியோக்கள்!
வேலையில் கவனம் செலுத்தாமல் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அரசு அதிகாரியின் வேலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசம், காங்க்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓஷின் ஷர்மா. இவர் தனது பள்ளிப்படிப்பை சிம்லாவில் முடித்தார். இவரது பெற்றோர் இருவருமே அரசு பணியில் இருந்தவர்கள். ஓஷின் ஷர்மாவுக்கு மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
பின்னர், பத்திரிகையாளராக வேண்டும் என்று விரும்பினார். குடும்பத்தினரின் விருப்பம் காரணமாக யுபிஎஸ்சி தேர்வு எழுதி, சொற்ப மதிப்பெண்களில் குடிமைப் பணி அதிகாரியாகும் வாய்ப்பை இழந்தார்.
இதனையடுத்து, 2019 -ம் ஆண்டில், HAS (Himachal Administrative Services) தேர்வில் வெற்றிபெற்று BDO ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், சந்தோல் தாசில்தாராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவரை இடமாற்றம் செய்த ஹிமாச்சல அரசு, பணி எதுவும் ஒதுக்கப்படாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. மேலும், சிம்லாவில் உள்ள பணியாளர்கள் துறைக்கு விளக்கம் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
அதவாது, இன்ஸ்டாகிராம் கணக்கில் 3 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களை கொண்ட ஓஷின் ஷர்மா தன்னுடைய தனிப்படை வீடியோக்களை பதிவேற்றி பிரபலமானவர்.
இதனால் இவர் தன்னுடைய வேலையில் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. இவரது பணியை மதிப்பாய்வு செய்தபோது, நிர்வாகப் பணிகள் சரியான நேரத்தில் செய்யப்படுவதில்லை என்றும் புகார் வந்தது. இதனால் மக்களும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தான் ஓஷின் ஷர்மா விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளத்தில் பிரபலம் ஆகியிருப்பதே இவரின் வேலைக்கு வினையாக மாறிவிட்டது.